“தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என அழைக்கப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். தமிழையும் சமயத்தையும் கற்பிக்கும் நோக்குடன் சமரச சன்மார்க்க நிலையம் அல்லது பொதுநிலைக்கழகம் என்ற அமைப்பை நிறுவியவர். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை உடைய பெரியாரும், மறைமலையடிகளும் தமிழர் உரிமை சார்ந்த செயல்பாடுகளில் ஒன்றிணைந்து பணியாற்றியது வரலாறு.
சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாக எதிர்த்த அடிகள், அதே நேரம் அதன் பல்வேறு கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைச் செயல்படுத்துவதிலும் முனைந்து நின்றவர். தமிழர்களின் திருமணங்களில் புரியாத மொழியில் மந்திரங்கள் கூறிச் சடங்குகளைச் செய்வதை அடிகள் மறுத்தார். தமது இல்லத்தில் கோயில் ஒன்றைக் கட்டி, அக்கோவிலுக்குச் சைவநெறிப்படி குடமுழுக்கினை நடத்தினார். வரதட்சணைக் கொடுமையை எதிர்த்தும், கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தும் எழுதியுள்ளார். பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நான் ஆராய்ந்து எழுதி, அரிதே அச்சிட்டு வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும் கலைஞருக்கும், புலவருக்கும், பொதுமக்களில் சிறந்தார் சிலருக்குமே பயன்தருகின்றன. ஆனால், ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர்-பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன்விளைக்கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன. அவர் முயற்சி வெல்க” என்று பாராட்டியவர் அடிகள்.
பெரியாரும் மறைமலையடிகள் மீது மிகுந்த மதிப்பினைக் கொண்டிருந்தார். அடிகள் பற்றிக் குறிப்பிடும்போது “சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர்” என்பார் பெரியார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாய் வைக்கப்பட்ட மறைமலையடிகளின் கட்டுரை ஒன்று பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து “விடுதலை” இதழில் எழுதினார். சமூக சீர்திருத்தம், அறிவு வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் முதலிய உன்னத எண்ணங்களைக் கொண்டு எழுதப்பட்ட நூல் என்று மறைமலையடிகளின் நூலைப் பாராட்டினார். தடை செய்யப்பட்ட கட்டுரையைத் தமது “குடிஅரசு” இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார். அதே நேரம், அடிகளாரின் மகள் நீலாம்பிகையின் திருமணம் புரோகித முறைப்படி நடைபெற்றதைக் கண்டிக்கவும் பெரியார் தயங்கவில்லை.
இராஜாஜியின் அரசால் தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து அடிகளின் தனித்தமிழ் இயக்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் கைகோர்த்து நின்று போராடின. சென்னையில் 04.10.1937 அன்று நடந்த ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார் மறைமலையடிகள். அடிகளின் மகன், மருமகள்கள் ஆகியோர் ஹிந்தி எதிர்ப்புப் போரில் கைக்குழந்தைகளுடன் சிறை புகுந்தனர். மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டில்தான் ஈ.வெ.ராமசாமிக்குப் பெரியார் என்ற பட்டமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் நிறைவில் பேசியதற்காகப் பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
1950ஆம் ஆண்டு மறைமலை அடிகள் மறைந்தார். அவரது மறைவுச் செய்தியை “தமிழ்மலை சாய்ந்தது” என்ற போற்றுதலுடன் விடுதலை வெளியிட்டது. சமயம் சார்ந்த கொள்கைகளில் எதிரெதிர் துருவங்களாக இரு ஆளுமைகளும் செயல்பட்டு வந்தபோதிலும், தமிழர் உணர்வு மற்றும் உரிமை சார்ந்த செயல்பாட்டில் இவ்விருவரின் நட்புறவு இன்றைய தலைமுறையினருக்குப் பாடமாகும்.
– வெற்றிச்செல்வன்
No comments:
Post a Comment