திராவிட மாடலும் பிஜேபி மாடலும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

திராவிட மாடலும் பிஜேபி மாடலும்!

featured image

சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற மதிய உணவு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் பள்ளிகளில் மதிய உணவில் பருப்பு, காய்கறிகள் இல்லாமல், வெறும் மஞ்சள் சோறு மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் வெறும் உப்பு மட்டுமே வழங்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சத்தீஸ்கரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் பொடி கலந்த சோறு மட்டுமே வழங்கப்படுவது – வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்காக, ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாய்களை மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிலையில் கூட, பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற, ஊட்டச்சத்து அற்ற உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி ஆரம்பித்த நாட்களில் இருந்தே (ஒரு மாதம்) இவ்வாறான மதிய உணவே வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்குப் போதிய அளவிலான காய்கறிகள் விநியோகம் செய்யப்படாததே, வெறும் மஞ்சள் சோறு வழங்குவதற்கு காரணம் எனக் கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

நிலுவைத் தொகையை வழங்காததால், பள்ளிக்குக் காய்கறி விநியோகம் செய்வதை நிறுத்தியதாக கூறுகிறார் ஒப்பந்ததாரர். இவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் காரணங்களால், பாதிக்கப்படுவது அரசுப் பள்ளி மாணவர்களாகவே உள்ளனர். இதன் விளைவாக பள்ளி மாணவர்களுக்கு அரசு வகுத்துக்கொடுத்த அட்டவணைப்படியும் உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறுகின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மாவட்ட கல்வி அதிகாரி தேவேந்திர நாத் மிஸ்ரா, மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற உணவு வழங்கப்படுவது இப்போதுதான் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் சுகியா தேவி என்பவர் கூறுகையில், எங்களுக்குக் காய்கறி, மளிகைப் பொருள்கள் வரவில்லையென்றால், எங்களால் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்க முடியாது. சில நேரங்களில் பருப்பும், சோறும் மட்டுமே உள்ளது. சில நேரங்களில் பருப்பும் இல்லாததால், மஞ்சளுடன் உப்பு கலந்த உணவை அளிக்கிறோம். காய்கறிகள் கேட்டால், இருப்பு இல்லை எனப் பதிலளிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் நோய்வாய்ப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கரிலும் இந்த அவல நிலை உருவாகி உள்ளது. மதிய உணவு தரமில்லாத காரணத்தால் 13 விழுக்காடு பிள்ளைகள் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டு, பெற்றோரோடு கூலிவேலைக்குச் செல்லும் அவலத்திற்குத்தள்ளப்பட்டுள்ளனர். இது ஊரக நலத்துறை அறிக்கையிலும் வெளிவந்த நிலையில் தற்போது சத்தீஸ்கரிலும் மஞ்சள் தண்ணீர் சோறு கொடுக்கப்பட்டுள்ளது.
பிஜேபி ஆளும் மாநிலப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவையும், தமிழ்நாட்டில் வழங்கப்படும் காலை, மதியம் சத்துணவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! ‘திராவிட மாடல் அரசு’ என்பதன் பொருள் புரியும்!

No comments:

Post a Comment