தந்தை பெரியார் பெயரைக் கொண்ட சேலம் அரசு பல்கலைக் கழகத்திற்கு ஒரு துணைவேந்தர் வந்தாலும் வந்தார். எல்லா வகையிலும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
சங்கிகளின் கோட்டமாக அது அமைந்து விட்டதாகக் கருதப்பட வேண்டியுள்ளது.
துணைவேந்தர் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில், அவரின் அலுவலக அறையைத் திறந்து, துணைவேந்தர் இருக்கையில் ஒரு பிஜேபி பிரமுகர் அட்டாணிக்கால் போட்டு அமர்ந்து துரைத்தனம் செய்ததை மறக்க முடியாது.
துணைவேந்தருக்கான ஆயுள் காலம் முடிவுற்ற நிலையில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஓராண்டு பதவிக் காலத்தை நீட்டித்து ஆணை பிறப்பிக்கிறார் என்றால் அதன் உட்பொருள் என்ன? இவ்வளவுக்கும் இந்தத் துணைவேந்தர்மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் காரணமாக தீர்ப்பு வழங்கப்பட்டு பிணையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுரைத் தெரிந்தவர்களுக்கு இத்தகைய அத்துமீறல் எந்த அடிப்படையில் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் துணைவேந்தரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
‘‘தகுதி உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை துறைத்தலைவராக நியமிக்காமல் தகுதியில்லாத துணைவேந்தருக்கு நெருக்கமான நபரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முழுத் தகுதிகள் கொண்ட பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுத்து. பல்கலை.க்குத் தொடர்பே இல்லாத நபரை துறைத்தலைவராக நியமித்துள்ளார் துணைவேந்தர்.
“சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் அவர் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டுள்ளது
கல்வியியல் துறையின் பொறுப்புத் தலைவராக இருந்த முனைவர் பெரியசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், துறையின் மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்குத் தான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் பேராசிரியர் தகுதியை எட்டாதவர். அவர் கடந்த ஆண்டு தான் கல்வியியல் துறையில் பணியில் சேர்க்கப்பட்டார். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்வியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் அயல்பணி முறையில் வெங்கடேஸ்வரன் சேர்க்கப்பட்டார்.
விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராகத் தான் கருதப்பட வேண்டும். ஆனால், அந்தத் தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வெங்கடேஸ்வரன் அவரை எடப்பாடி கல்லூரியில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமித்துள்ளார் துணைவேந்தர்!
பேராசிரியை தனலட்சுமி தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தகுதியும், அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன் துணை வேந்தருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இது பெரும் சமூக அநீதி ஆகும். அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஓய்வு பெறவிருந்த நிலையில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை கண்டத்திற்குரியதாகும். தந்தை பெரியார் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் சமூகநீதிக்கு சாவுமணி அடித்துள்ளனர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லாவற்றையும்விட ஊழல் பின்னணியில் உள்ள ஒரு துணைவேந்தரைப் பதவி நீடிப்பு செய்கிறார் – ஓர் ஆளுநர் என்றால் எந்தப் பின்னணியில் இது நடக்கிறது – போட்டி அரசாங்கம் நடத்துகிறார் ஆளுநர். இதற்கொரு முடிவு எட்டப்பட வேண்டும்.
No comments:
Post a Comment