உத்தராகண்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ‘‘இந்த பாதிப்பிற்குக் காரணம் நாங்கள் அல்ல – கடவுள் கோபம் கொண்டு அதிக மழை தந்துவிட்டார். மேலும் எங்களுக்கு அதை எதிர்கொள்ளும் சக்தியையும் கொடுக்கவில்லை’’ என்று உத்தராகண்ட் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல பாலங்கள் அடித்துக்கொண்டு செல்லப்பட்டன.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்களுடன் தொடர்பில்லாமல் போய்விட்டது. அந்த ஊர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் மின்சாரம் ஒருவாரம் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை உத்தராகண்ட் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் வைத்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக தலைநகர் தெஹராடூனில் பல இடங்களில் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம் வரவில்லை. மழை மற்றும் குளிரால் அடுப்புக்கூட பற்றவைக்க இயலாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கும் போதிய உதவிகள் சேரவில்லை – ஆகையால் முகாமில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அரசு முகாம்களுக்கு வந்துள்ளனர். ஆனால் முகாமிலும் உணவு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் எதுவுமே கிடைக்காத நிலையில், இந்த அரசு என்ன செய்கிறது என்று முகாமில் உள்ள மக்கள் கேட்கின்றனர் – புலம்புகின்றனர்.
இந்த நிலையில் உத்தராகண்ட் தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிரேம் சந்த் அகர்வால் வெள்ளம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: ‘‘நாங்கள் மழைக்கு முன்பே சிறந்த வகையில் பொறியாளர்களை அழைத்து வடிகால் மற்றும் பலமான கரைகளை அமைத்து வைத்தோம்,
ஆனால் என்ன செய்ய கடவுள் கோபமடைந்து விட்டார். மிகவும் அதிக மழையைக் கொடுத்துவிட்டார். இவ்வளவு அதிக மழையைத் தாங்கும் அளவிற்கு எங்களுக்குச் சக்தியை கடவுள் தரவில்லை – ஆகவே அரசைக் குறை சொல்வதை நிறுத்துங்கள்; கடவுளின் கோபத்திற்கு நாங்கள் தீர்வு காண முயல்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
உத்தராகண்டில் தெஹராடூன், ருத்ரப்பூர், ஹல்வானி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் 5 நாட்களாகியும் வடியவில்லை. மேலும் தொடர் கனமழையானது மலைப் பகுதி மற்றும் சமவெளிப்பகுதிகளில் அதிகம் பொழியும் என்று வானிலை ஆய்வு நிலையமும் முன் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஏற்கெனவே வீடுகளை இழந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் அரசு முகாம்களிலும் போதிய வசதிகளை ஏற்பாடு செய்யாமல், கடவுள் கோபத்தால் இந்த வெள்ளம் வந்தது; நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் கூறியிருப்பதால் மக்கள் யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் கை பிசைந்து திகைத்து நிற்கின்றனர்.
ஒரு பொறுப்பு வாய்ந்த மாநில அமைச்சர் பேசும் பேச்சா இது? கடும் மழைக்குக் காரணம் கடவுள் – நாங்கள் என்ன செய்ய? கடவுள் கோபம் அடைந்து விட்டார் என்று அமைச்சர் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் கடவுள் மீது மக்கள் கோபப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
கருணையே உருவானவன் கடவுள் என்பது என்னாயிற்று? 2013இல் உத்தரகாண்டில் இதற்கு முன்பும் கொடும் மழை பொழிந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டதுண்டே! கோயில்கள் அடித்துச் செல்லப்படவில்லையா?
அனைத்து மாநில நிதித்துறை செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – பொருளாதார தாக்கத்தால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு – கோவிட் என்பது கடவுளின் செயலால் வந்தது, இதனால் பொருளாதார தாக்கம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதன் பாதிப்பு தெரியவரும் என்று கூறினார். (‘தி இந்து’ – 19.08.2020)
கடவுள்தான் காரணம் என்றால் அரசு எதற்கு? பிஜேபியைப் பொறுத்தவரையில் கடவுள், மதத்தைக் காட்டி மக்களைத் திசை திருப்புவது – மயக்குவது – அவர்களின் சித்தாந்த வழி முறையில் முக்கிய கூறாயிற்றே!
பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் மக்களை இரண்டே நாளில் 80 இன்னோவா கார்களில் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மீட்டார் என்ற நகைச்சுவையும் இந்த இடத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.
No comments:
Post a Comment