புதுடில்லி, ஜூலை 7 மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நீட் தொடர்பான வழக்கு வரும் 8ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதன் முடிவைத் தொடர்ந்தே நீட் கலந்தாய்வு தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் பலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. அதுபோல ஒரே கோச்சிங் சென்டரில் படித்த மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உறுதியானது.
இதனால், தேர்வில் முறைகேடு நடை பெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டி, ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஒன்றிய அரசு, தேர்வை ரத்து செய்ய வேண்டியது இல்லை என்றும், முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக பிரமான பத்திரம் தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கின் விசா ரணை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு பிறகே நீட் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment