ஏ.என்.அய். என்ற தனியார் செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் செய்தி வழங்குவதில் முன்னணி நிறுவனம் ஆகும்
இந்த நிறுவனம் குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள முழு விவரத்தில் ஒரு பத்தியில் ”ஏ என் அய் செய்தி நிறுவனம் – ஆளும் பாஜகவின் செய்தி நிறுவனம் போன்று செயல்படுகிறது. பாஜகவினர் அனுப்பும் போலி செய்திகளைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிடுகிறது. 2014ஆம் ஆண்டிலிருந்தே எதிர்கட்சியினரை பாஜகவோடு சேர்ந்து கடுமையான விமர்சனங்களை வைக்கும் நிறுவனமாக மாறி ஒரு ஊடகத்திற்கான நடுநிலை யிலிருந்து தவறிவிட்டது, குறிப்பாக ஏ.என்.அய். போன்ற செய்திகளை பெருவாரி ஊடகங்களுக்கு வழங்கும்செய்தி நிறுவனம் கட்சிப் பாகுபாடு இன்றி இருக்கவேண்டும் ஆனால் ஏ.என்.அய். நிறுவனம் நடுநிலையோடு இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.
குறிப்பாக மணிப்பூர் கலவரத்தின் துவக்கத்தில் அங்கு சென்று செய்தி சேகரித்த அந்த நிறுவனம் 20.07.2023 அன்று இஸ்லாமியர்கள் குக்கி இனத்தவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர் என்ற தவறான தகவலைத் தந்தது. இதனை உடனடியாக ஆல்ட் நியுஸ் சுபைர் உள்ளிட்ட உண்மைத்தன்மையை காட்டும் நிறுவனங்கள் ‘ஏ.என்.அய். நிறுவனம் கூறுவது முற்றிலும் தவறான மற்றும் பாஜகவினரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இவ்வாறு தவறான செய்தியைக் கொடுத்துள்ளது’ என்று எழுதி இருந்தது.
இந்த நிலையில் உண்மையை எழுதிய விக்கிப் பீடியாமீது எங்கள் நற்பெயரைக் கெடுக்க முயற்சித்தார்கள் என்றும், இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் இரண்டு கோடி இழப்பீடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. விக்கிப் பீடியா நிறுவனம் தகவல்களைப் பகிரும் நிறுவனம் ஆகும். இதில் யார் வேண்டுமானாலும் தகவல்களைப் பகிரலாம், முழுமையான சுதந்திரம் உள்ளது. மேலும் அதன் கொள்கை விளக்கப் பக்கத்தில் பதிவுகள் தரவுகள் அனைத்தும் யார் வேண்டுமென்றாலும் பகிரலாம், எடிட் செய்யலாம், தவறான தகவல் இருந்தால் அதனைத் திருத்திக்கொள்ளலாம், தவறான அல்லது வேறு எதுமாதிரியான பதிவுகள் வந்தால் அதற்கு எடிட் செய்த நபர் பதிலளிக்க கடமைப் பட்டுள்ளார்.
விக்கிப் பீடியா நிறுவனத்திற்குத் தனி நபர்கள் பதிவிடும் பதிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு அது அமெரிக்க மற்றும் ஜெர்மானிய இணைய நடைமுறைச் சட்டங்களில் பதிவு செய்யப்பட்டது. இவ்வளவுத் தெளிவாக அவர்கள் கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தும் ஏ.என்.அய். அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஏ.என்.அய். செய்தி நிறுவனம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசாவை சமீபத்தில் கூட 2ஜி குற்றவாளி என்று அடைமொழி இட்டு குறிப்பிட்டது. (9.4.2024)
அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, மின்னணு ஊடகமாக இருந்தாலும் சரி அவை மோடி ஆட்சிக்குச் சேவகம் புரிய வேண்டும்; இல்லையெனில் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் நெறியாளர் பிஜேபி சங்பரிவார்க்கு எதிரான வகையில் விமர்சனம் செய்கிறார் என்றால், அத்தகையவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேற்ற அதிகார அழுத்தம் கொடுத்து விடுவார்கள்.
விக்கிப் பீடியாவில் வெளிவந்த செய்திகளோ, தரவுகளோ தவறு என்று கருதினால் மறுத்து எழுத ஏ.என்.அய். நிறுவனத்துக்குத் தாராள உரிமை உண்டு. மாறாக வழக்குத் தொடுப்பது இழப்பீடாக ரூபாய் கோடிக்கணக்கில் கோருவது எல்லாம் கருத்துரிமைக்கு கடிவாளமும், அச்சுறுத்தலும் தானே!
எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஷேக் ெஷனகத் ஹுசேன் ஆகியோர் 2010ஆம் ஆண்டில் பேசிய பேச்சின் ஒன்றின்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் பிஜேபி அரசின் வன்மத்தைப் புரிந்து கொள்ளலாமே!
No comments:
Post a Comment