அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

featured image

சென்னை, ஜூலை 9– குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை சிபிஅய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டில்லி சிபிஅய் காவல்துறைவழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், ஒன்றிய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஅய், இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஅய் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், அதிமுக மேனாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மேனாள் காவல்துறை தலைமை இயக்குநரான ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறையின் மேனாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகையையும் சிபிஅய் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு சிபிஅய் நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் முன்பாக நேற்று (8.7.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மேனாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணையை சென்னையில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment