பிற இதழிலிருந்து...எத்தனை நாக்குகள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

பிற இதழிலிருந்து...எத்தனை நாக்குகள்?

featured image

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளில் யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் பொதுமக்களுக்கு வந்திருக்கிறது. பிரதமர் சொல்வதையா? ஒன்றிய கல்வி அமைச்சக இயக்குநர் சொல்வதையா? யார் சொல்வதை நம்புவது?
நீட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது. “நீட் தேர்வின் புனிதத்தன்மை தொலைந்து விட்டது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லிவிட்டார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு வெளிப்படையாகவே இதனைச் சொல்லிவிட்டது.
“நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தேர்வில் நடந்த முறைகேடுகள் அமைப்பு ரீதியாக நடைபெற்றதா, முறைகேடுகளால் தேர்வு நடைமுறையின் நேர்மை பாதிக்கப்பட்டதா, நேர்மையாக தேர்வு எழுதிய தேர்வர்களிடமிருந்து முறைகேடுகள் மூலம் பலனடைந்த தேர்வர்களைத் தனியாகப் பிரிக்க முடியுமா என்பதைக் குறித்து ஆராய வேண்டும். தேர்வு நடைமுறையை முறைகேடுகள் பாதித்திருந்தால் மறுதேர்வு நடத்த வேண்டியது அவசியம் ஆகும். நீட் தேர்வின் புனிதத் தன்மை தொலைந்து, பொதுவெளியில் கசிந்த அந்தத் தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டிருந்தால் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டாக வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியாவிட்டால் மறுதேர்வு நடத்த கட்டளை யிட்டாக வேண்டும்”
– என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். முறைகேடு நடந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடியும், நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை தனது உரையில் ஒப்புக் கொண்டார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “வினாத்தாள் கசிவு சம்பவங்களை ஒன்றிய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது. தேர்வுகளின் ஒட்டுமொத்த நடைமுறையையும் வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது என்றும் பிரதமர் சொல்லி இருப்பது, முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்ட தன்மையே ஆகும்.

ஆனால் இவை அனைத்தையும் ஒன்றிய அரசு மறுக்கிறது. அதாவது பிரதமர் சொல்வதையே மறுக்கிறது ஒன்றிய அரசு. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக இயக்குநர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “இந்தத் தேர்வில் நம்பகத்தன்மை மிகப்பெரிய அளவில் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஏற்கெனவே முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேர்வை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது. நீட் தேர்வு தொடர்பாக ஆதாரங்களுடன் நிரூ பிக்கப்பட்ட உண்மையான குற்றச்சாட்டுகளை மட்டுமே நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டும். அனுமானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று அந்த மனுவில் சொல்லப்பட்டுள்ளது.

பிரதமர் சொல்வது உண்மையா? ஒன்றிய கல்வி அமைச்சக இயக்குநர் சொல்வது உண்மையா?
தேசிய தேர்வு முகமை ஒரு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. “மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு எந்தவித சட்டவிரோத நடவடிக்கைக்கும் இடமளிக்காமல் நேர்மையாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகாருக்கு ஆதாரமில்லை” என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூன் 13 ஆம் தேதி என்ன சொன்னார் தெரியுமா? “நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடந்ததாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை” என்றார். ஜூன் 16 ஆம் தேதி, “சில முறைகேடுகள் நடந்துள்ளது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று சொன்னார்.

மூன்று நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஆனால் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி அமைச்சக இயக்குநர், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார். யார் சொல்வது உண்மை?
ஆனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.அய், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஆறு வழக்குகளைப் பதிவு செய்து இதுவரை 11 பேரைக் கைது செய்துள்ளது. பீகார், ராஜஸ்தான், டில்லி, உத்தரப்பிரதேச மாநிலக் காவல் துறை சார்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எதற்காக கைது செய்ய வேண்டும்? இந்த வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகளா? உத்தரப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. அரசு எதற்காக இந்தக் கைது நடவடிக்கைகளை எடுக்கிறது? சி.பி.அய். தவறான பாதையில் செல்கிறதா?
ஒரே தேர்வில் ஒரே ஒன்றிய அரசுக்குத்தான் எத்தனை நாக்குகள்?

நன்றி: ‘முரசொலி’ தலையங்கம், 11.7.2024

No comments:

Post a Comment