தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்!
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு கழக குடும்பங்களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் அடிகளார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட அறிவுறுத்தியதின் பேரில். காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய தலைவர் கொரட்டி வீ.பாலு, கல்லல் ஒன்றிய செயலாளர் பலவான்குடி ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, தி.தொ.ச.மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு ஆகியோர் குன்றக்குடி திருமடம் எதிரில் அமைந்துள்ள அடிகள் பெருமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அடிகளாரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதி அனுப்பிய செய்தியினை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் முன்னிலையில் படித்துக்காட்டியதோடு அதனை பல நகல்கள் எடுத்து வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. சீரிய சுயமரியாதை வீரர் தி.மு.கழக பொதுக்குழு உறுப்பினர் விசாலயன்கோட்டை கரு.அசோகன், தளக்காவூர் ஊராட்சி தி.மு.கழக செயலாளர் ஆரோக்கியம், ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி மூலம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியினை தெரிவித்து பேசினார்.
அப்போது கழகத் தலைவர் அவர்கள் “தாம் அனுப்பிய செய்தியினை பார்த்தீர்களா?” என்று கேட்டதும் அதற்கு பதிலளித்த தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் “அய்யா தாங்கள் வைத்திருக்கும் அன்பும், பாசமும் அளவிட முடியாதது, அதேபோல் வாழ்த்து செய்தியில் தாங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு சொல்லும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை! தங்களுக்கு எங்கள் திருமடத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும் நமது அடிகளாரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் நடத்தும் அதுவும் திருவிழாவாக, பெருவிழாவாக காரைக்குடியில் நடத்தும் என்று தாங்கள் அறிவித்திருப்பது உள்ளபடியே எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை பேருவகையை அளிக்கிறது என்று கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் அடிகளாரின் நூறாவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக நடத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ராஜா செல்வன் மற்றும் ஒன்றிய, ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குன்றக்குடி அடிகளாரின் புகழ் ஓங்குக! சமுதாய சிற்பி அடிகளார் வாழ்க! அறிவியல் போற்றும் அடிகளார் வாழ்க! வாழ்க வாழ்க வாழ்கவே குன்றக்குடி அடிகளார் வாழ்கவே!!என்று முழக்கமிட்ட போது பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட அனைவரும் வியந்து பார்த்தனர்.
அதோடு தாய்க்கழகத்தின் சார்பில் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்களை அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் அனைவரையும் அடிகளாருக்கு மாலை அணிவிக்க வரவேற்கிறேன் என்று கூறி நமக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டினார். பிறகு அனைவரும் ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக் கொள்ள கட்டளையிட்டார்கள்.
அய்யா தந்தை பெரியார் அவர்களோடு மறைந்த குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு இருந்த நட்பை, தோழமையை, உறவை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது
அன்றைய நிகழ்வுக்கு நமது தோழர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கி, மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பும் செய்தார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். மறக்க முடியாத நினைவுகளோடு மிகுந்த மன நிறைவோடு நாமும் விடைபெற்றோம். விரைவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்திட மாவட்ட கழக தோழர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.
No comments:
Post a Comment