கேள்வி 1: வழக்கத்திற்கு மாறாக பட்டயக் கணக்காளர் தேர்விலும் அதிக தேர்ச்சி விகிதம் வந்துள்ளதே? முறைகேடு அங்கும் நடைபெற்று இருக்க வாய்ப்புண்டா?
– சசி, சங்ககிரி
பதில் 1: அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை; முன்பு 2 முதல் 4 விழுக்காடு தேர்வுதான் என்ற நிலை இருந்தது; இப்போது சமூக மாற்றம். கல்வி, – பயனுறு கல்வி கற்க பெரும்பாலான ஒடுக்கப்பட்டவர்களும் விரும்பி சேர்ந்து படித்து வெற்றி பெறுவதால் 19 முதல் 20 விழுக்காடு உயர்வு அடைந்துள்ளது. இது நல்ல முறையான வளர்ச்சியே!
– – – –
கேள்வி 2: டெக்கான் கிரானிக்கல் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து அனைத்து ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றனவே?
– குமரன், மதுரை
பதில் 2: ஆளும் கட்சிக்கு எதிரான கருத்தை அது எழுதுவதற்கு – செய்திகளை அளிக்கும் பத்திரிகா தர்மத்தை ஏற்காதவர்களின் எத்துவாளித்தனம்!
கருத்துரிமை அடிப்படையில் யாருக்கு நடந்தாலும் தவறு; கண்டனத்திற்குரியது.
– – – –
கேள்வி 3: 67 நாட்டு வீரர்களை வென்று பேட்மின்டன் உலகக் கோப்பையைக் கொண்டுவந்த என்னை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தனியார் நிறுவனம் நடத்திய கிரிக்கெட் விளையாட்டில் வென்றவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுக்கிறது மகாராட்டிரா அரசு என்று சிராஜ் ஷெட்டி கூறியுள்ளாரே?
– ரவிச்சந்திரன், சென்னை
பதில் 3: விளையாட்டிலும் வர்ணாசிரம படிக்கட்டு (Graded inequality) நுழைந்து விட்டது போலும்! என்னே செய்ய? கிரிக்கெட்தானே ‘பிராமண’ தனி விளையாட்டு – மற்றவை எல்லாம் 2, 3, 4ஆம் 5ஆம் ஜாதியாக பாவிக்கும் மனப் பான்மையின் வெளிப்பாடாக தெரிகிறது; இது கண்டனத்திற்குரியது.
– – – –
கேள்வி 4: இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது – யுத்தத்தை கொடுக்கவில்லை என்று மோடி ஆஸ்திரியாவில் கூறியுள்ளார். அதே நேரத்தில் புடினோடு கட்டிப்பிடித்து வாழ்த்து கூறுகிறாரே?
– ஓவியன், சென்னை
பதில் 4: இது ஒன்றும் புதுமையல்லவே; வழக்கமான பரணிதானே. இதில் என்ன ஆச்சரியம்?
பேசு நா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!
– – – –
கேள்வி 5: ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில்தான் சி.பி.அய். இயங்குகிறது என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது குறித்து?
– காவேரி, சேலம்
பதில் 5: சட்டப்படி உள்ளதை உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது, (‘விடுதலை’ அறிக்கை 12.7.2024 படியுங்கள்.)
– – – –
கேள்வி 6: பீகார் முதலமைச்சர் தனியார் நிறுவன அதிகாரிகளின் காலில் விழுந்து சாலைப் பணிகளை சீராக மேற்கொள்ளுங்கள் என்கிறாரே ஒரு முதலமைச்சர் – இப்படி நடந்து கொள்ளலாமா?
– மதிமுகன், திருச்சி
பதில் 6: “பரிதாபத்திற்குரிய மனநிலையாளராகி விட்டாரே நிதிஷ்குமார்” என்ற நிலைதான்!
– – – –
கேள்வி 7: போலி மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொடுத்து மகராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து செய்திகள் வெளிவந்த பிறகு இட மாற்றத்தோடு விவகாரத்தை முடித்து விட்டதே அம்மாநில அரசு – எந்த தேர்வு தான் நேர்மையாக நடக்கிறது இங்கே?
– மா.செங்கிஸ்கான், திருத்தணி
பதில் 7: ஜாதிச் செல்வாக்கோ, வேறு உயர் இடத்து செல்வாக்கோ கூட காரணமாக இருக்கலாம் என்றால் சட்டப்படி தண்டித்து வெளியேற்ற வேண்டிய குற்றம் இது! ஆனால், போலிகள் காலமல்லவா இது!
– – – –
கேள்வி 8: ‘நீட்’ பிரச்சினை மிக மோசமாகி விட்டபின், உச்சநீதிமன்றமே நீட்டை ரத்து செய்யும் வாய்ப்புள்ளதா?
– மாறன், திருச்சி
பதில் 8: ‘அற்புதங்களை’ அதிகம் எதிர் பார்க்காதீர்கள்!
– – – –
கேள்வி 9: அடுத்த முறை மக்களவைத் தேர்தலில் ராகுலுக்கும் – பி.ஜே.பி.க்குமான போட்டி எப்படி இருக்கும்?
– சூர்யா, செம்பட்டி
பதில் 9: முன்கூட்டியே ஒருவேளை தேர்தல் வந்தாலும் வரலாம். ஆகவே, கணிப்பு அவ்வளவு எளிதல்ல. இப்போதே ராகுல் என்ற சரியான எதிர்க்கட்சித் தலைவர் ‘கடிவாளம்’, அடங்கா குதிரையை அடக்கி வைத்து வருகிறதே!
– – – –
கேள்வி 10: புதுச்சேரி மாநில அரசால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு பள்ளி நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து?
– ஆதித்யா, புதுவை
பதில் 10: பா.ஜ.. ஆட்சிதானே அங்கு! வேறு எப்படி இருக்கும்? தள்ளாடும் அரசு புதுச்சேரி அரசு – கவிழ்க்கப்பட்டாலும் வியப்பில்லை!
No comments:
Post a Comment