ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர்வார்கள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர்வார்கள்?

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சாமி வீதி உலா புறப்பாடு உற்ச வத்தின்போது, சாமி முன்பு யார் செல்வது? முதலில் யார் பாடல் பாடுவது? என்பதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை வெடித்தது.
கோயில் நகரம் என்று பீற்றிக் கொள்ளும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோயில்விழாக்களின்பொழுது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதலில் ஈடுபடுவது என்பது சந்தி சிரிக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே, இந்த மோதல் போக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று முடிந்த பிரம்மோற்சவ விழாவின் பொழுது கூட, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதலில் ஈடுபட்ட நிகழ்வு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இந்த மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பக்கத்தில் இருக்கவே செய்கிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் குட முழுக்கு நடைபெற்றது. இதனை ஒட்டி மாலையில் சாமி வீதி உலா புறப்பாடு உற்சவம் நடைபெற இருந்த நிலையில், சாமி முன் செல்வதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே பிரச்சினை ஏற்படும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவு இடப்பட்டிருந்தது.
அதன்படி விளக்கொளி பெருமாள் கோயிலில் வீதி உலா நடைபெறவிருந்த நிலையில், வடகலை – தென்கலை பிரிவினர் வரவழைக்கப்பட்டு, காஞ்சிபுரம் மண்டல அற நிலையத்துறை இணை ஆணையர் வான்மதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்பு சாமி முன் செல்வதற்கு குடவோலை முறையில் தீர்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வடகலை – தென்கலை, என எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகளை எழுதி சொம்பு ஒன்றில் போட்டு குலுக்கி கோவிலுக்கு வந்த குழந்தையைக் கொண்டு சீட்டை எடுக்க வைத்தனர். அதில் சாமி முன் முதலில் வடகலை பிரிவினர் செல்லலாம் என முடிவு வந்தது. இதனை இரு தரப்பினரும் முழு சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் முன்னிலையில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர்.
நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும், சாமி முன் செல்வதற்குப் பழைமையான குடவோலை முறையில் சுமூகமான தீர்வை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்த நிகழ்வு பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த முடிவானது தற்காலிக முடிவு என்பதும், இந்த ஆண்டு சாமி ஊர் வீதி உலாவிற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாம்.

இந்நிலையில் தற்போது சாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த முறை 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு வடகலை, தென்கலை இடையே கயிறு கட்டி இரு பிரிவினரையும் பிரித்த நிலையில் வட கலையினர் முதலில் பாராயணம் பாடினர். பின்னர் தென்கலையினர் பாடினர். அதன் பின்னர் சாமி புறப்பாடு நடைபெற்றது.
‘ஹிந்துக்களே ஒன்று சேர்வீர்!’ என்று ஹிந்துத்துவவாதிகள் அறைகூவல் விடுப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் சாமி ஊர்வலம் என்ற பெயரில் வடகலை – தென் கலை சர்ச்சை ஊர் சிரிக்கிறது.

கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை வழக்காகி லண்டன் பிரிவுகவுன்சில் வரை சென்று ஊளை நாற்றம் வீசியதுண்டு. கிறிஸ்துவ வெள்ளைக்கார நீதிபதிகள் நகைத்ததுண்டு.
ஒரு வாரம் வடகலை இன்னொரு வாரம் தென்கலை நாமம் போடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுண்டு.
சர்வ சக்திக் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் கடவுள் பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் அவலத்தை என்ன சொல்ல!
‘கடவுளை மற – மனிதனை நினை!’ என்று தந்தை பெரியார் கூறியது நடைமுறையில் நடக்கிறது என்பது தான் உண்மை!

No comments:

Post a Comment