புதுடில்லி, ஜூலை 12 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சராக இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார் –- எனவே நாங்கள் அவரை இடைக்காலப் பிணையில் வெளியில் வர அனுமதிக்கிறோம் என தீர்ப்பு
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடிந்தது. அதனை தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (12.7.2024) தீர்ப்பு அளிப்பதாக கூறியிருந்தது.
இதன்படி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. அத்துடன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு மாற்றியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு பிணை தரப்பட்டுள்ளதாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக, உள்ள கெஜ்ரிவால் தனது பதவியில் (முதலமைச்சர்) நீடிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிணை வழங்கி இருந்தது. இதற்கு டில்லி உயர்நீதிமன்றம் அப்போதே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment