மாநிலக் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவர்களிடையே கழகப் பொதுச் செயலாளர் உரை
சென்னை, ஜூலை 11 சென்னை மாநிலக்கல்லூரியில் 9.7.2024 அன்று இளங்கலை முதலாமாண்டு மாண வர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இராமன் ஏற்பாட்டில் கல்லூரி எம்.28 அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு மூட நம்பிக்கைகளை கடைப்பிடிக்காமல் ஏன்? எதற்கு? எவ்வாறு? என்று கேள்விகள் கேட்க வேண்டும் எனவும், அரசமைப்புச் சட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ள 51-A(h) அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சுற்றுச் சூழல்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதநேயம் பேண வேண்டும் என்பதற்கு தந்தை பெரியாரின் பொன் மொழியான ‘‘மனிதன் தானாக பிறக்கவில்லை எனவே தனக்காக வாழக்கூடாது’’ என்பதை எடுத்துக் கூறியும், மாணவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை ஒரு போதும் இழந்து விடக்கூடாது என்பது ஆலோசனையை கூறியதோடு மட்டுமல்லாமல் ‘‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’’ என ஆசிரியரின் வரிகளை மேற்கோள் காட்டி வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து செந்தலை நா.கவுதமன் அவர்களுக்கு கலைஞர் ஆய்வுப் பேரறிஞர் விருதினை வழங்கினார்.
நிகழ்வில் மாநிலக்கல்லூரி மேனாள் ஆய்வு மாணவர் தமிழ்க் காமராசனுக்கு கலைஞர் பொதுவுடைமைச் சுடர் விருது வழங்கப்பட்டது. மேலும் மாநிலக்கல்லூரி மாணவர் நா.தீரஜ் பன்னாட்டு இளைஞர் சாம்பியன்ஷிப் 2024 சிலம்பம் போட்டியில் – சுருள் வாள் சுற்றும் போட்டியில் பதக்கம் பெற்றதை பொதுச்செயலாளரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் அன்பழகன், மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அருள்நாயகம், மலர்மன்னன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment