சட்ட மறுப்பும் - சாஸ்திர மறுப்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

சட்ட மறுப்பும் - சாஸ்திர மறுப்பும்

featured image

சமஉரிமை கோரி, தென்னாப்பிரிக்காவிலே இந்தியர்கள் சட்ட மறுப்புச் செய்கின்றனர். இலங்கையிலே, சமஉரிமை சமசந்தர்ப்பம்கோரி, தமிழர்கள், சிங்களவர்களின் ஆட்சி ஆதிக்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தக் கிளர்ச்சி செய்கின்றனர்.

இங்கே உள் நாட்டிலேயே ஆதித்திராவிடர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள், தீண்டாதாராக இருக்கிறார்கள், பொதுஉரிமைகள் கூட இல்லை.

ஆனால் சமஉரிமைக் கிளர்ச்சிக்கு வசதி இல்லை! ஏன்?

இங்கே, பார்ப்பனர் தவிர மற்றவர்கள் கோவிலிலே மூலக்கிரஹம் சென்று சாமியைத் தொட்டுக் கும்பிட முடியாது, பார்ப்பனரே. பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர்.

ஆலயத்திலே சமஉரிமை கேட்கும் தைரியமும், கிளர்ச்சி செய்ய வசதியும், பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை. ஏன்?

சாப்பாட்டுக் கடைகளிலேகூடப் பார்ப்பனருக்கு ஓர் இடம், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்ற பேதம் காட்டப்படுகிறது. இங்கேயும் சம உரிமை கேட்க, பார்ப்பனரல்லாதாருக்குத் தைரியம் இல்லை; கிளர்ச்சி செய்ய வசதி இல்லை. ஏன்?

இப்போதும், வைதிகப் பார்ப்பனர், நாம் தொட்டு விட்டால் தீட்டாகிவிட்டதாகத்தான் கருதுகிறார்கள், பார்ப்பனர் தவிர மற்றவர்கள் மட்ட ஜாதி என்ற திட்டம், சாஸ்திரப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்துச் உரிமை கேட்கவோ, கிளர்ச்சி செய்யவோ, துணிவும் வசதியும் இல்லை. ஏன்?

ஸ்மட்ஸ் துரையின் சட்டத்தை மீறுவது சுலபம்; ஸநாதனிகளின் சாஸ்திரத்தை மீறுவது கஷ்டம். ஏன்?
ஸ்மட்ஸ், அரசியல் தலைவர்;

ஸநாதனி, பூதேவர்.

இந்தச் சூட்சமத்தை உணராமல் இன்னும் எவ்வளவு காலம், காங்கிரஸ் திராவிடர்கள் இருக்கப் போகிறார்கள்?
சட்ட மறுப்புக்கு அரசியலாரின் தண்டனை மட்டுமே உண்டு.

சாஸ்திர மறுப்புக்கு, ஆண்டவனின் தண்டனை உண்டு என்று மிரட்டுவார்கள்.
சட்ட மறுப்புச் செய்பவன், வீரன் என்று போற்றப்படுவான். சாஸ்திர மறுப்புக்காரனைப் பாபி என்று தூற்றுவர்!
ஏன்?

சட்டங்கள் மறுக்கப்பட்டு நிலைமை சரியானால் சனாதனிகளுக்கு அவர்களின் சுகவாழ்வுக்குக் கேடு இல்லை.
சாஸ்திரங்கள் மறுக்கப்பட்டு, நிலைமை மாறினால் ஸநாதனிகளின் சுகவாழ்வு கெட்டுவிடும். ஆகவேதான், சட்ட மறுப்புக்கு இசையும் பார்ப்பன சமூகம், சாஸ்திர மறுப்புக்கு இசைவதில்லை. தென் ஆப்பிரிக்க சர்க்கார், இந்தியரைக் கேவலப்படுத்தும் போக்கு, கண்டிக்கப்படுகிறது, சர்க்காராலும் சகல அரசியல் கட்சிகளாலும், அந்தச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தப்படுகிறது; அந்தக் கிளர்ச்சி பாராட்டப்படுகிறது நியாயம் அவசியம் – முக்கியமானதுங்கூட,

ஆனால் அதேபோல, இங்கே சேரிகளில் வாழும் பழங்குடி மக்கள், சம உரிமை கோரி, மற்ற உயர்ஜாதிக்காரர் வசிக்கும் பகுதியிலே “இடம் தேடும்” கிளர்ச்சி செய்தால், என்ன நடக்கும்? சட்டம் சீறும் – சாஸ்திரம் சபிக்கும் – நாட்டிலே இரத்தக்களரி ஏற்படும்.

பிணத்தை ஜாதி இந்துவுக்கென்றுள்ள இடத்தில் கொளுத்தினதற்கே, இதே திங்களில், ஓர் ஆதிதிராவிடருக்கு 4 மாதக் கடுங்காவல் தண்டனை தந்தது. நம் நாட்டுச் சட்டமன்றம்.

பார்ப்பனர் அர்த்த மண்டபத்திலே நின்று தரிசிக்கலாம். மற்றவர்கள் வெளியேதான் நின்று தொழவேண்டும், என்று திருவண்ணாமலை கோயில் வழக்கிலே “தீர்ப்பாகி” இருக்கிறது. திருவையாறு சமஸ்கிருதப் பள்ளிக்கூடத்திலே, பார்ப்பனரல்லாத மாணவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, தங்கள் ஜாதிக் கவுரவத்துக்குக் குறைவு, என்று பார்ப்பன மாணவர்கள் கூறினர், பார்ப்பனத் தலைவர்கள் ஆதரித்தனர்.

இன்றும், பார்ப்பனர் குளிக்கும் குளம் மற்றவர்களுக்கு தராத நிலை, சில இடங்களிலே உண்டு.

இன்றும். பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரகாரத்திலே மற்ற வகுப்பாருக்கு இடம் தர மாட்டார்கள்.

இவைகளை எல்லாம், மத ஆச்சாரத்தின் பேரால் நடத்துகிறார்கள். சாஸ்திர ஆதாரம் கூறுகிறார்கள்.

சம உரிமைக்காகத் தென்னாப்பிரிக்காவிலே சட்ட மறுப்பு துவக்கும் தைரியம் பிறந்ததுபோல, இங்கு, சம உரிமைக்காக, சாஸ்திர சம்பிரதாயங்களை மறுக்க யாராவது முன் வந்தால் அவன், “நீசன், பாபி, நாஸ்திகன்” என்று, மக்களாலேயே, எந்த மக்களின் சம‑ உரிமைக்காகப் பாடுபடக் கிளர்ச்சி செய்கிறோமோ, அதே மக்களாலேயே, தூற்றப்படுவர். கண்டிக்கப்படுவர். கல்லால் அடிக்கப்படுவர்.

சட்ட மறுப்பு சுலபம். – சாஸ்திர மறுப்பு கஷ்டம்.

சட்டம் பொது – சாஸ்திரம் பார்ப்பனரின் தனி உரிமை.

பார்ப்பனர் தங்கள் தனி உரிமையான சாஸ்திரம் கெடாதபடி சர்வ ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள்வர்.
தென்னாப்பிரிக்காவில், வெள்ளையர் (நம்மை) கருப்பரைக் கேவலமாக நடத்துகிறார்கள். வெளி நாட்டான். வேறு இனத்தான் என்று காரணம் காட்டி இது ஜனநாயகத்துக்கு தேசிய கவுரவத்துக்கு மனிதாபிமானத்துக்குக் கேடு தருவதாகும் என்று கூறுகிறோம். உண்மை! ஒரு நாட்டான் மற்றோர் நாட்டவனைக் கேவலமாகக் கருதுவது, மிகக் காட்டுமிராண்டிக் கருத்து, அந்த ஆணவத்தை எதிர்க்கத்தான் வேண்டும். தென்னாப்பிரிக்காவிலே அதனை எதிர்க்கின்றனர்; நாம் ஆதரிக்கிறோம் அந்தச் சமஉரிமைப் போராட்டத்தை.

அங்கு, வெள்ளையர், கருப்பரைக் கேவலமாக நடத்துகின்றனர், அமெரிக்கர்கள், நீக்ரோக்களைக் கேவலமாக நடத்துகின்றனர். இந்தக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கிளர்ச்சி நடக்கும் இக்காலத்திலே இங்கே,
இந்துக்கள், இந்துக்களிலே ஒரு பிரிவினரான பார்ப்பனரல்லாதாருக்குச் சம உரிமை தருவதில்லை.
இந்துக்களிலேயே ஒரு பகுதியினரான பழங்குடி மக்களைத் தீண்டாதார் என்று கேவலப்படுத்திக் கொடுமை செய்கின்றனர்.

வெள்ளையர், வெள்ளையரில் சில பகுதியினரைக் கேவலப்படுத்துவது, தாழ்த்துவது இல்லை.
சீனர், சீன மக்களிலே சிலரைத் தீண்டாதார் என்று சிறுமதியுடன் கூறவில்லை. நீக்ரோ, நீக்ரோவை இழிவு படுத்துவதில்லை.

ஆனால், இந்து, இந்துவையே இழிவுபடுத்துகிறான் தீண்டாதார் என்கிறான். கோயிலிலே. குளத்திலே பொதுஇடத்திலே உரிமைதர மறுக்கிறான்.

இந்து, இந்துக்களிலேயே, நாலு ஜாதி என்று பிரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர், பேதம் காட்டிவரும் கொடுமையைச் செய்கிறான். இவைகளைச் சாஸ்திர முறை என்று கூறுகிறான்.

சட்டமறுப்புக்கு வீரர்கள் இருக்கிறார்கள். சாஸ்திர மறுப்புக்கு. யார் முன் வருகிறார்கள்? சட்டமறுப்புச் சாத்திய மாகிறது! சாஸ்திர மறுப்பு என்றால் குலை நடுங்குகிறது! ஏன்?
(‘திராவிட நாடு’ – 23-6-1946)

No comments:

Post a Comment