அழைக்கிறார் தமிழர் தலைவர் - ஆர்ப்பரித்து வாரீரோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

அழைக்கிறார் தமிழர் தலைவர் - ஆர்ப்பரித்து வாரீரோ!

featured image

 கவிஞர் கலி. பூங்குன்றன்

காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட்டை தமிழ்நாடு மட்டுமல்ல; அன்றைக்கு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் எதிர்த்தார்.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் நீட்டிலிருந்து விலக்குக் கேட்டு இரு சட்ட முன் வடிவுகள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
அவற்றின் கதி என்னாயிற்று என்று யாருக்குத் தெரியும்? நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சிதானா? என்ற கேள்விதான் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றுங்கள் – விலக்கு அளிக்கிறோம் என்றார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் – அவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணனும் வாக்குறுதி கொடுத்தார்.
அவ்வாறே அவசர சட்டமும் இயற்றப் பட்டது. சொன்னபடி நடந்து கொண்டதா ஒன்றிய பிஜேபி அரசு? முந்திரிக்கொட்டையாகச் சொன்ன நிர்மலா சீத்தாராமன் மூச்சு விட்டாரா? பொன். இராதாகிருஷ்ணன்தான் திருவாய் மலர்ந்தாரா?
அவசர சட்டத்தில் போதிய தகவல்கள் இல்லை என்று திருப்பி அனுப்பிய நிலையில், தேவையான தகவல்களையும் ஒன்றிய அரசுக்கு அளித்தது தமிழ்நாடு அரசு.
2017 ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு அய்ந்து நாட்களுக்குள் அந்தர் பல்டி அடித்தது ஏன்?

இதில் என்ன கொடுமை என்றால் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டதுதான்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகாத நிலையில் – வகையில் திட்டத்தை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என்றுஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசு மதித்ததா? உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி அப்படி ஒரு திட்டம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா?
எதுவும் நடக்காத நிலையில், ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய துஷார்மேத்தாவிடம் நீதிமன்றம் சொன்னபடி இருதரப்பாரும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கை எங்கே என்று உச்சநீதிமன்றம் கேட்டதா?
எதுவுமே நடக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது!
வழக்கு விசாரணை தொடங்கிய அக்கணமே – தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை – இதுதான் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்று திடீர் வெடியைக் கொளுத்திப் போட்டார் ஒன்றிய அரசின் வழக்குரைஞர் துஷார்மேத்தா.

ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள் என்ற வினாவை எழுப்பி இருக்க வேண்டாமா – இருப்பதிலேயே உச்சக் கட்ட அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம்?
தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லை என்ற ஒரே ஒரு வாக்கியத்துடன் முடிந்தது கதை. ஒன்றிய அரசின் முடிவை ‘அப்பழுக்கின்றி’ அக்கணமே ஏற்று சமூகநீதியின் நெற்றிக்குப் பட்டை நாமம் தீட்டப்பட்டு விட்டது.
எதிர்மனுதாரர் வழக்குரைஞருக்கு வாய்ப்பே அளிக்காமல் சமூக அநீதி சக்தி களுக்கு ஜரிகை மாலை சூட்டப்பட்டு பூங்கொத்துக் கொடுக்கப்பட்டு விட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு பச்சை மையால் சவக்குழி தோண்டப்பட்டு விட்டது.

பாரதிய ஜனதா ஆட்சி என்றால் என்ன என்று தெரியுமா? பார்ப்பன ஆதிக்கத்துக்கான ஆட்சி.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த கூட்டம் அதிகாரத்தில் இருக்கிறது என்றால் சும்மாவா!
பட்டியலினத்தைச் சேர்ந்த, பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருபால் மாண வர்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் என்ன – தூக்குக் கயிறு கிடைக்காமலா போகும்? அதுதான் தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல – இந்தியா முழுமையும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வன்மத்தை – சமூக அநீதியை – உயிரைக் கொடுத்தாவது ஒழித்துக் கட்ட வேண்டாமா? அதற்காகத்தானே கருஞ்சட்டைப் பட்டாளம் இருக்கிறது!
இதோ இன்றே இலட்சியக் கருஞ்சட்டை இளைஞரணி – மாணவர் கழகச் சேனை இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு விட்டது. கொடி அசைக்கப்பட்டு விட்டது.
வெல்லுவோம் சமூகநீதியை –
வீரர்கள் நாங்கள்
கோழைகள் அல்ல!
தந்தை பெரியார் நம் கையில் கொடுத்த கொடிக்கு தோல்வி என்பது எந்த இடத்திலும் இல்லை. அது வெற்றி என்னும் பட்டொளி வீசி விண்ணில் பறக்கவே செய்யும்!
சந்திப்போம் தோழர்களே! சேலத்தில் ஜூலை 15இல் வெற்றிக் கொடியை விண்ணில் ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை – அழைக்கிறார் தமிழர் தலைவர் – ஆர்ப்பரித்து வாரீரோ!

No comments:

Post a Comment