பொருளாதாரம் அறிவோம்! பட்ஜெட் பற்றிய விளக்கம் பெறுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

பொருளாதாரம் அறிவோம்! பட்ஜெட் பற்றிய விளக்கம் பெறுவோம்

featured image

வீ. குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்

ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் முதல் மார்ச் முடிய) நிதி நிலை அறிக்கையை (Budget) ஒன்றிய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும், செலவினங்கள் எவ்வளவு என்ற புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக்கை அரசினரால் தாக்கல் செய்யப்படும். அதிலுள்ள விவரங்கள் ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகளால் விவாதிக்கப்பட்டு பின்னர் அந்த நிதி நிலை அறிக்கை பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஏப்ரல் முதல் தொடங்கும் நிதி ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும். வசூலிக்கப்படும் நேரடி, மறைமுக வரிகள் குறைப்பு – உயர்வு, செலவினங்களில் ஏற்கெனவே ஆண்டாண்டுகளாக உள்ளவைகளோடு புதிய செலவினங்களும் கணக்கிடப்படும். இதில் மூலதனச் செலவினங்களும் நிர்வாக செலவினங்களும் அடங்கும்.

பட்ஜெட் நாட்டுக்கு மட்டும்தானா?
பட்ஜெட் என்பது அரசுக்கு மட்டுமல்ல; நிறுவ னங்களிலும் தயாரிக்கப்பட்டு செய்து நடைமுறைக்கு வரும். வீட்டிற்கும் பட்ஜெட் உண்டு. அது எழுத்தில் வழங்காத மனதளவில் கணக்கீடு செய்யப்படும் பெரும்பாலான நடைமுறையாகும். எழுத்தில் இல்லாத காரணத்தாலும், செலவினங்கள் எதிர்பாராத நிலையில்வரும் சூழலிலும் வெற்றிகரமாக திட்ட மிட்டப்படி நடைமுறைக்கு வராமல் இன்னல் நிலையும் ஏற்படும்.

வீட்டுபட்ஜெட், நாட்டு பட்ஜெட் – அடிப்படை வேறுபாடு என்ன?
அடிப்படையில் நாட்டு பட்ஜெட்டுக்கும், வீட்டு பட்ஜெட்டுக்கும் வேறுபாடு உண்டு. வீட்டு பட்ஜெட்டைப் பொறுத்த அளவில் செலவு என்பது வரவுக்குள் அடங்கியிருக்க வேண்டும். செலவு போக மீதி சேமிப்பாக மாறும். செலவு என்பதை வரவை மீறி அனுமதிக்கும் பொழுது கடன் வாங்கி அல்லல்படும் நிலை ஏற்படும்.
ஆனால் நாட்டு பட்ஜெட் அப்படியானதல்ல; நாட்டிற்கான பட்ஜெட்டிற்கு மக்களின் நல்வாழ்வு, பல தளங்களிலும் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓராண்டில் நடைமுறையாக வேண்டிய வளர்ச்சித் திட்டச் செலவு, நிதி உதவிகளைக் கணக்கீட்டு அதற்கு ஏற்ற அளவில் வரி வருவாயைப் பெருக்கவும் வேண்டும்; அதே நிலையில் மக்கள் நலன் கருதி செலவினங்களும் அதிகரிக்க வேண்டும். வருவாயை மீறிய செலவினங்கள் அரசு தாக்கல் செய்திடும் பட்ஜெட்டில் இருக்கும். வருவாய்க்கு அடங்கியே செலவினங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வருவாய்க்குள் அடங்கிய செலவினங்கள் உள்ள பட்ஜெட்டால் நாட்டிற்கு தேவைப்படும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பனவற்றை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது.

பற்றாக்குறை பட்ஜெட்
வீட்டு பட்ஜெட்டில் வரவுக்குள் செலவு அடங்கியிருக்க வேண்டும் என்பது நல்ல நிதி ஆளுமை ஆகும். அரசு தாக்கல் செய்திடும் பட்ஜெட்டில் செலவினங்கள் வருவைாயவிட சற்று அதிக நிலையில்தான் இருக்க வேண்டும். வருவாயை விட செலவினங்கள் அதிகமுள்ளதை பற்றாக்குறை பட்ஜெட் (Deficit Budget) என்று அழைப்பார்கள். அந்தப் பற்றாக்குறை என்பது கட்டுக்குள் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பதாக நினைத்து கட்டுக்குள் அடங்காத செலவினங்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்கெடும் நிலைமைக்குப் போய் விடக் கூடாது. பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் சிறந்த பட்ஜெட் என கருத முடியாது. நமது நாடு வளர்முக நாடுகளில் (Develoging Counties) ஒன்றாகும். வளர்ச்சி தேவைப்படும் நாட்டிற்கு பற்றாக்குறை உள்ள பட்ஜெட் அவசியமாகிறது.
ஆனால் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது வளர்ச்சியை அதிகப்படுத்திட வேண்டும் என்ற நிலையில் சாத்தியமில்லை.

பட்ஜெட் பற்றாக்குறை
கட்டுப்பாட்டின் அளவு என்ன?
பட்ஜெட் பற்றாக்குறையினை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தினை 2003ஆம் ஆண்டில் இயற்றியது. அது நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act) என்பதாகும். நிதி ஒழுக்கத்தை நிறுவனமாகவும், நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு பரந்துபட்ட உயர்நிலைப் பொருளாதார மேலாண்மை மற்றும் ஒட்டு மொத்த பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தியும் உருவாக்கப்பட்ட சட்டமாகும். இது இந்த சட்டத்தின் தற்போதைய நிலவரப்படி பட்ஜெட் பற்றாக்குறையானது 3 விழுக்காடு அளவிற்குள்தான் இருக்க வேண்டும். நாட்டின் (உள்நாடு) மொத்த உற்பத்தியில் 3 விழுக்காடு அளவிற்கு மிகாமல் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படலாம்.
ஓராண்டில் எதிர்பார்க்கின்ற வருவாயின் அடிப்படையில் நேர்கொள்ளும் செலவினங்களைக் கட்டுப்படுத்திடும் பொருளாதார வலுவினை குறிக்கும் அளவீடே இது.

மாநில அளவிலான பட்ஜெட்டுக்கும் இந்த பற்றாக்குறை பட்ஜெட் உச்சவரம்பு என்பது பொருந்தும் அதற்குரிய சட்டங்களளை அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளும். நாட்டுப் பொருளாதார நிதி நிலையை ஒழுங்குபடுத்திடும் இந்த சட்டம் நாடு தழுவிய அளவிலான சட்ட ஆணையத்தின் (Finance Commission) ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பற்றாக்குறை பட்ஜெட்டின் வரம்பு மாற்றம் பெறலாம்.
(வீட்டு பட்ஜெட்டுக்கும், நாட்டு பட்ஜெட்டுக்கும் உள்ள வேறுபாட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 1962ஆம் ஆண்டில் விடுதலை நாளேட்டின் பொறுப்பினை ஏற்றபின் எழுதிய முதல் தலையங்கமான (‘வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? – 25.8.1962) நன்கு விளக்கியிருப்பார். ஒட்டு மொத்த வரி குறைப்பு என்பது நல்ல பட்ஜெட்டின் அளவீடு அல்ல. வளர்ச்சி பெருகிட வருவாய் பெருகிட வேண்டும். பட்ஜெட் வெளியீடு என்றால் புதிய வரி என்பது விதிக்க வேண்டும். யார்மீது வரியைக் கூட்டுவது யாருக்கு வரியைக் குறைப்பது என்பது பொருளாதார, சமூக சமத்துவ நிலை நோக்கில் முடிவு செய்யப்பட வேண்டும். ஓட்டு மொத்தத்தில் முறையான வரி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படுதலே ஆகச் சிறந்தது. இந்த விளக்கங்களுடன் தமிழர் தலைவரின்தலையங்கம் அமைத்துள்ளது சிறப்புக்குரியதாகும்.)
ஜூலை 23ஆம் நாள் ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட் வெளிவந்த பின், அதன் பின்னணியிலும், அது குறித்தும் பட்ஜெட் பற்றிய கூடுதல் விளக்கங்களை அறிந்திடுவோம்.

No comments:

Post a Comment