மாட்டிறைச்சியும் பிஜேபியின் இரட்டை வேடமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

மாட்டிறைச்சியும் பிஜேபியின் இரட்டை வேடமும்!

தரைவழி மற்றும் நீர்வழிப்போக்குவரத்துத்துறை ஒன்றிய இணை அமைச்சர் சந்தானு தாக்குர் மேற்குவங்கம் வழியாக வங்கதேசத்திற்கு தரைவழியாக செல்லும் நபர்கள் தலா 3 கிலோ மாட்டிறைச்சி கொண்டு செல்ல தனது லெட்டர் பேடில் அனுமதி வழங்கியுள்ளார்.
பொதுவாக இந்தியாவிலிருந்து தரை மார்க்கமாக ‘ரெட் மீட்’ என்ப்படும் மாட்டிறைச்சி எல்லை நாடுகளான பாகிஸ்தான், மற்றும் வங்கதேசம் மியான்மார் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல தடை உள்ளது, உயிருள்ள மாடுகளை கொண்டு செல்லவும் தடை உள்ளது – அதே நேரத்தில் வியாபாரத்திற்காக கோழி, மற்றும் ஆடுகள் கொண்டு செல்வதற்கும் இவற்றின் இறைச்சியை தரைவழியாக பாகிஸ்தான், வங்கதேசம் நேபாளம் மற்றும் மியன்மா நாடுகளுக்குக் கொண்டு செல்லவும் அனுமதி உண்டு.

ஆனால் மாட்டிறைச்சிக்கு மட்டும் தடையுண்டு. இதனால் குறிப்பாக மேற்குவங்கத்தில் இருந்து வங்கதேசம் செல்லும் நபர்கள் மாட்டிறைச்சியை சட்டவிரோதமாக கடத்துவார்கள். இதனால் எல்லைப் பாதுகாப்பு வீரர்களிடம் சிக்கிக் கொள்வார்கள்.
இந்த நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் சந்தானு தாக்கூர் தனது ெலட்டர் பேடில் மாட்டிறைச்சி கொண்டு செல்ல அனுமதி கொடுத்துள்ளார். சில மீட்டர் தூரமே உள்ள இரு நாட்டு எல்லைகளுக்கும் சென்று வர சில நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும் – இது போன்று பலர் கடிதம் பெற்று சோதனைச் சாவடிகள் ஒப்புதலோடு மாட்டிறைச்சியை வங்க தேசத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த மே மாதம் பக்ரீத் விழாவிற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் 11 இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது பாஜக அரசு.
அதே நேரத்தில் ஓர் ஒன்றிய இணை அமைச்சரே தனது ெலட்டர்பேடில் மாட்டி றைச்சியைக் கொண்டு செல்ல அனுமதி கொடுக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் பிஜைனோர் என்ற ஊரில் 3 குவிண்டால் மாட்டிறைச்சியை கடத்தியது தொடர்பாக உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ராகுல் பரப், சச்சின் ராய் மற்றும் உமேஷ் பரஜ்பால் என்ற மூன்று நபர்களை பிஜைனோர் காவல்துறை கைது செய்தது – அவர்களிடமிருந்து மாடு வெட்டப் பயன்படும் கத்தி, மாட்டிறைச்சி கடத்தப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மாட்டு எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
மாட்டு எலும்புகளை பதப்படுத்தி மருந்து நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் சச்சின் ராய் என்பவர் மாட்டிறைச்சிக் கடத்தல் வழக்கில் பல முறை சிறைசென்றவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சித் தடை ஒரு பக்கம்; மாட்டிறைச்சி வியாபாரம் இன்னொருபுறம். வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறப்பவர்கள் பெரும்பாலும் பிஜேபி முதலாளிகளே! பிஜேபி என்றாலே இரட்டை வேடம்தான்!

No comments:

Post a Comment