மின்சாரம்
‘நீ்ட்’ என்ற சொல் வந்த காலந்தொட்டு களத்தில் நின்று போர்க் குரல் கொடுத்தது திராவிடர் கழகம்.
எத்தனை எத்தனைப் போராட்டங்கள் – அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் – மாநாடுகள் – இரு சக்கர வாகனப் பிரச்சாரங்களும் எத்தனை! எத்தனை!!
இப்பொழுதும் ஜூலை 11 முதல் 15 முடிய தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளி லிருந்து தமிழ்நாட்டு மண்ணை அடி வைத்து அளக்கும் அளவுக்கு இரு சக்கர ஊர்திப் பிரச்சாரம்!
ஜூலை 15 மாலை சேலத்தில் சங்கமிக்கிறது! தமிழர் தலைவர் தலைமையில் போராட்டம், போர்ப் பாட்டுப் பாடுவோம் – பீரங்கியாக வெடித்துக் கிளம்புவோம் வாரீர்! வாரீர்!!
மக்களவையில் ஆரியர் – திராவிடர் பற்றி அக்னிப் புயலாக ஆர்ப்பரித்த மானமிகு ஆ. இராசா எம்.பி., தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் சட்டமன்ற உறுப்பினர் மானமிகு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் உரை வீச்சு முக்கியமானது.
‘நீட்’ – ஆறு ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
மறதிதான் நம் மக்களுக்கு மறக்க முடியாத ஒன்றாயிற்றே!
‘நீட் தேர்வு’ வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் நடந்த குளறுபடிகள் கொஞ்ச நஞ்சமா? தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களை ‘சம்மட்டிக்’ கொண்டு தாக்கிய வெங்கொடுமை!
49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் மாண்புமிகு நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் ஆகியோர் நாக்கைப் பிடுங்குமாறு கேள்விகளை எழுப்பினர்.
தமிழ்மொழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லை தமிழ் ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது – புரிந்து கொள்வது போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றனவா? என்று வினாக்களைக் கூர்மையாக எழுப்பினர் நீதிபதிகள்.
தமிழ் வினாத்தாளில் மத வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்ததால் ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் வீதம் 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும் சிபிஎஸ்சிஇக்கு நீதிபதிகள் இருவரும் உத்தரவிட்டதுண்டு.
தமிழ்நாட்டில் தமிழ்க் கேள்வித்தாள்களுக்குப் பதில் ஹிந்தி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்ட கூத்தும் நடந்ததுண்டு.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் கலர் கலராக குளறுபடிக் கழைக் கூத்துகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டோ கடைக்குப் போய் கத்தரிக்காய் வாங்குவதுபோல நீட் வினாத்தாள்களின் நிலைமை!
இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு பொதி சுமக்கும் கழுதைகளாக மக்கள் திரிய வேண்டும் என்று ஒன்றிய வர்ணாசிரம ராம்ராஜ்ய பிஜேபி ஆட்சி கருதுகிறதா – திட்டம் போடுகிறதா?
கேட்டால் தமிழ்நாட்டிலே தானே எதிர்க்கிறீர்கள் என்று எதிர்க் கேள்வி வேறு!
ஆமாம், இங்குதான் தந்தை பெரியார் பிறந்தார் – இங்குதான் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் தான் பகுத்தறிவுச் சிந்தனையோடு – சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு போர் முரசு கொட்டுகிறது தமிழ் மண்!
இதன் எதிரொலி இப்பொழுது பிஜேபி ஆளும் வட மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்து விட்டதே!
‘சேலம் செயலாற்றும் காலம்‘ என்று அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார் (13.8.1944)
ஆம், வரும் 15.7.2024 அன்று சேலம் செயலாற்ற எல்லோரையும் அழைக்கிறது.
நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டியவர்கள் நாம்! இந்த நீட்டையும் ஒழிப்போம்!
வாலிபர், வயோதிகர் என்று பாராமல் அனைவரும் – இருபாலரும் திரண்டு வாரீர்!
சமூகநீதிக்கு ஆபத்து என்றால், ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே பேராபத்து அல்லவா!
வாரீர்! வாரீர்! வங்கக் கடல் பெருக்கெடுத்ததோ என்று கருதும் வண்ணம் கருஞ்சட்டைக் கடல் திரளட்டும்! திரளட்டும்!!
தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார் – வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment