கந்தர்வகோட்டையில் நீட் எதிர்ப்பு குறித்த விளக்கப் பரப்புரைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

கந்தர்வகோட்டையில் நீட் எதிர்ப்பு குறித்த விளக்கப் பரப்புரைக் கூட்டம்

featured image

புதுக்கோட்டை, ஜூலை8- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நீட் எதிர்ப்பு குறித்த விளக்கப் பரப்புரைக் கூட்டம் நடை பெற்றது.
சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைப் பொதுக்கூட்டமாகவும் எதிர்வரும் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு வரும் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணியின் நோக்கம் குறித்து விளக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், புதுகை நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நே.குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி தொடக்கவுரையாற்றினார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் “உலகிலுள்ள எல்ல நாடுகளிலும் ஏற்றம் இறக்கம், ஏழை பணக்காரன், கற்றவன் கல்லாதவன், ஆண் பெண், பகுத்தறிவுள்ளன் ஆன்மீகவாதி, என வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டுமே ஜாதி என்று ஒன்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். உலகில் அமைதியான நாடுகளில் ஒன்று நார்வே. அங்கு எந்தவொரு வழிபாட்டுத் தலமும் கிடையாது. ஆனால் இங்கு அதிகமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தியாவில் 6422 ஜாதிகள் உள்ளதாகக் கணக்கெடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அந்தச் சாதிகளின் நம்பிக்கைப்படி அவர்களது கடவுளர்களின் எண்ணிக்கை இப்போது உள்ள மக்கள் தொகை கணக்கில் உள்ளதைப் போல பல மடங்கு இருக்கும் என்பதுதான் உண்மை. ஹிந்து மதக் கடவுளர்கள் எத்தனை பேர் என்பதை யாராவது சரியாகச் சொல்லி நிரூபிக்க யாராவது தயாராக இருக்கிறார்களா?

குறிப்பாக வெளித்தோற்றத்திற்குப் பார்த்தால் ஆன்மீகவாதிகள் அதி கமாக உள்ளதாகத் தெரியும். ஆனால் உண்மையில் கடவுள், மத நம்பிக்கையாளர்களிடம் விசாரிக் கும்போது அவர்கள் தங்கள் கடவுளைத் தவிர மற்ற கடவுளர்கள் பொய், அது கிடையாது என்பார்கள். இது அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் மத நம்பிக்கையாளர்களாகவே இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் பயன்படுத்தும் அலைபேசி உட்பட அவர்களது அறிவியல் பயன்பாட்டுப் பொருட்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அறிவியல்தான் முன்னிலையில் நிற்கும். ஆன்மீகம் தோற்றுப் போகும். இதை உணர வைக்கத்தான் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைப் பொதுக்கூட்டமாகவும் நீட் எதிர்ப்பு குறித்து விளக்குவதற்காகவும் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் சட்டம் இயற்றியது சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ஆனால் அந்தக் குழுவிற்கு அவர் தலைவராக இருந்தாரே தவிர அதில் நான்கு பார்ப்பனர்கள் இருந்தார்கள். சிறுபான்மையினர் சார்பாக ஒரு இஸ்லாமியர் மட்டும் இருந்தார். ஒரு கட்டத்தில் இப்போது இயற்றும் சட்டம் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் முதல் ஆளாக நான் நிற்பேன் என்றார் அண்ணல் அம்பேக்தர் அவர்கள்.

எதிர் வரும் 15ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சிகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் இருந்து அய்ந்து குழுக்களாக இரு சக்கர வாகனப் பேரணியும் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்பதாகத்தான் நடக்க இருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் படி எந்த மாநிலம் நீட் வேண்டாம் என்கிறதோ அந்த மாநிலங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் அனைவரும் ஆதரவு தரவேண்டும்” என்று பேசினார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment