தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி!

featured image

சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது
காவல்துறை நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி பெயரால் நுழைந்த குண்டர்களின் வன்முறை நடவடிக்கைகள் – மாணவர்கள்மீதான தாக்குதல்குறித்து வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் கல்விக் கூடங்களில் சங் பரிவாரின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் ஊடுருவும் ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 
நடந்தது என்ன?
அந்த வகையில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில்  சட்டக் கல்லூரி மாணவர்கள் என்ற போர்வையில் ஏபிவிபி குண்டர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யார்?‘ என்று கேட்டதற்கு, முன்னுக்குப்பின் முர ணாகத் தகவல்களைக் கூறினர்.
முதலில், நாங்களும் இந்தப் பல்கலைக் கழக மாண வர்கள்தான் என்றனர். பிறகு வேறு ஒரு சட்டக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினர். அவர்களில் ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்.
அவர்களின் கையில் இருந்த ஓரு குறிப்பேட்டில் எந்தெந்த தேதிகளில், எந்தெந்தக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்தோம்; இனி எந்தெந்த தேதிகளில், எந்தெந்த கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும் என்ற குறிப்புகள் இருந்திருக்கின்றன.
மாணவர்கள் மத்தியில் 
நல்லிணக்கத்தைக் குலைப்பதா?
மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் மதவாதக் கருத்துகளைப் பரப்பக் கூடாது என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வாக்குவாதம் முற்றி, ஏபிவிபி மாணவர்கள் என்ற போர்வையில் வந்த குண்டர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக் கழக நிர்வாகத்திடம் தாக்கப்பட்ட மாணவர்கள் புகார் செய்துள்ளனர்.
ஆனால், நிர்வாகமோ, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, ஏபிவிபி மாணவர்களைப் பத்திரமாக வெளியில் அனுப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைமீது கவனம் செலுத்தாத சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
பல்கலைக் கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி குண்டர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற மாணவர்களின் வேண்டுகோளை ஏற்க முன்வரவில்லை.
மாணவர்கள் படிப்பின்மீது கவனம் செலுத்தாது, சக மாணவர்களை உடல் ரீதியாகத் தாக்குவதும், தங்க ளுக்குள்ளேயே தாக்கிக் கொள்வதும், வெளியிலிருந்து வருபவர்களைத் தாக்குவதும் நடந்து வருகிறது என்று பாதிப்பிற்குக் காரணமானவர்களையும், பாதிக்கப்பட்ட வர்களையும் சம நிலையில் வைத்து கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று பல்கலைக் கழகப் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இனிவரும் காலத்தில் இத்தகைய மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் பதிவாளரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குரிய தண்டனை மிகவும் அவசியமாகும்.
அண்மை காலங்களில் அந்தக் கல்லூரி மாணவர்களுக்கிடையே அற்ப பிரச்சினைகளை ஊதி விட்டு கலவரங்களை உருவாக்கி ‘திராவிட மாடல்’ அரசுக்கு ஒரு அவப்பெயரை உருவாக்க பின்னணியில் முயற்சி நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம்.
‘நக்கீரன்‘ வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை கலைக்கல்லூரி வளாகங்களில் ‘ரூட்டு தல‘ என்ற பெயரில் மாணவர்களைத் தூண்டி, அவர்களின் மூலமாக வன்முறையைப் பரப்பிட ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருப்பதாகவும் அண்மையில் வெளிவந்த ‘நக்கீரன்‘ இதழின் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment