சென்னை, ஜூலை 11- நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் நீட்டை ஒழிப்போம்! சமூகநீதியைக் காப்போம் என்ற ஒலி முழக்கத்துடன் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் 5 குழுக்களாக தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து இன்று (11.7.2024) தொடங்கி கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராசர் பிறந்த நாளில் 15.7.2024 அன்று சேலத்தில் சங்கமிக்கிறது. இருசக்கர வாகன பரப்புரைப்பயண நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றுகிறார். பாஜக தவிர அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிறைவு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
கன்னியாகுமரி முதல் சேலம் வரை முதல் குழு, இராமநாதபுரம் முதல் சேலம் வரை 2ஆம் குழு, புதுச்சேரி முதல் சேலம் வரை 3ஆம் குழு, தாராபுரம் முதல் சேலம் வரை 4ஆம் குழு, சென்னை முதல் சேலம் வரை 5ஆம் குழு என 5 குழுக்கள் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப்பரப்புரைப்பயணத்தில் பங்கேற்கின்றனர்.
சென்னையிலிருந்து சேலம் நோக்கி பயண மாகியுள்ள 5ஆவது குழு பொறுப்பாளர்கள் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் சோ.சுரேஷ், மா.செல்லதுரை, கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோருக்கு மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவன் பயனாடை அணிவித்து புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.
பயணத்தை கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், திருவொற்றியூர் மாவட்ட கழகத் தலைவர் வெ.மு.மோகன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், சி.வெற்றிசெல்வி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! – ஒழிப்போம், ஒழிப்போம் நீட் தேர்வை ஒழிப்போம்! – காப்போம் காப்போம் சமூகநீதி காப்போம்! – சமத்துவத்தைக் காப்போம்! என்று முழக்கமிட்டவாறு இருசக்கர வாகனப்பயணம் சென்னை பெரியார் திடலிலிருந்து எழுச்சியுடன் தொடங்கியது.
வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டி வருமாறு:
சமூகநீதி வரலாற்றில் இன்று ஒரு மிக முக்கியமான நாள்!
தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபொழுது, சமூகநீதிக்காக உரத்த முறையிலே குரல் கொடுத்தார்.
சமூகநீதி என்ற வகுப்புவாரி உரிமையை காங்கிரசின் பல மாநாடுகளில் முன்மொழிந்தார். காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள், ஆதிக்கவாதிகள் அந்தத் தீர்மானத்தினை அனுமதிக்காத காரணத்தினால், தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார்.
அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார்க்கு
50 சதவிகித இடங்கள் மட்டுமே கேட்டார்; மறுத்தார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிதற்குப் பின்னால், அந்த சமூகநீதிப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
அதுவரையில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்க முடியாது என்று சொன்ன நிலை மாறி, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை நாம் அனுபவிக்கின்றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும், அதன் மறுவடிவமான திராவிடர் கழகமும், திராவிட இயக்கமும்தான் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
சமூகநீதிக்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களும், பிரச்சாரங்களும் மிகப்பெரிய வரலாறு என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை. இந்தியா, குடியரசாகி 50 ஆண்டுகளாகியும், அந்த நேரத்தில் மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இறுதியில் வெற்றியும் பெற்றது.
திராவிடர் கழகம், தந்தை பெரியாருடைய கொள்கை வழியில் அது எடுத்து வைத்த எந்த முயற்சியிலும் தோல்வியடையவில்லை.
அந்த வகையில், நீட் தேர்வை எதிர்த்து, இன்றைக்குத் தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து (கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை) இளைஞர்கள், மாணவர்கள் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தினைத் தொடங்கி, வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில் சங்கமமாகவிருக்கின்றார்கள்.
இதற்கு முன்புகூட நீட் தேர்வை எதிர்த்து பலமுனைகளிலிருந்து இரு சக்கர வாகனப் பேரணி நடத்தி, விருத்தாசலத்தில் மிகப்பெரிய மாநாட்டினை நடத்தினோம்.
அந்த வகையில், இப்பொழுது நீட் தேர்வை எதிர்த்து இரு சக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைக்கின்றோம். மக்கள் மத்தியில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துச் சொல்வோம்.
அரசாங்கம், நீதிமன்றம் எப்படி இருந்தாலும், மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினால், நிச்சயமாக வெற்றி மக்களுக்குத்தான். அந்த வகையில், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், போராட்டம், பிரச்சாரம் என்ற இரண்டின் அடிப்படையில்தான் ஒவ்வொரு வெற்றியையும் ஈட்டியிருக்கின்றோம்.
இந்தப் போராட்டத்திலும் நிச்சயமாக நாங்கள் வெற்றியடைவோம்.
இது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 140 கோடி மக்களில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ள பிரச்சாரமாகும். இந்தப் போராட்டம் வெற்றி அடையும்!
திராவிடர் கழகத்தின் இந்த முயற்சியை அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.யைத் தவிர பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்!
வெற்றி நமதே! வெல்க சமூகநீதி!!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment