பணி நீக்கம் செய்யப்பட்ட போதும் முதல்வர் இருக்கையிலேயே அமர்ந்து பிடிவாதம் வலுக்கட்டாயமாக பிடித்து வெளியேற்றிய ஆசிரியர்கள்
அலகாபாத், ஜூலை 8 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியின் பெண் முதல்வராக பாருல் சாலமன் இருந்துவந்தார். இந்நிலையில், பள்ளியின் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் அவரது அறைக்குள் நுழைந்து, அவரை இருக்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, புதிய முதல்வரை நியமித்தனர். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி தேர்வு அம்மாநிலத்தில் நடைபெற்றது. இப்பள்ளியும் தேர்வு மய்யமாக இருந்தது. இந்நிலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, இப்பள்ளியிலிருந்து சிலர் வினாத்தாளை ஒளிப்படம் எடுத்துவெளியே கசியச் செய்தனர். இது தொடர்பாக இப்பள்ளியில் தேர்வு மய்ய அலுவலராக இருந்த வினித் ஜாஸ்வந்த் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் பாருல் சாலமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவரை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கியது. எனினும், அவர் விலக மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியின் தலைவர் மற்றும் சில ஆசிரியர்கள் பாருல் சாலமனின் அறைக்குள் நுழைந்து அவரை தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறும்படி கூறினர். ஆனால், பாருல் சாலமன் தன் இருக்கையிலிருந்து எழ மறுத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் அவரை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து இழுத்து வெளியேற்றி, புதிய முதல்வரை அந்த இருக்கையில் அமரச் செய்தனர். இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங் களில் வைரலாகியுள்ளது.
No comments:
Post a Comment