புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரியில் கோயிலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரியில் கோயிலா?

featured image

புதுக்கோட்டை, ஜூலை 11 புதுக்கோட்டை யில் உள்ள மாமன்னர் கல்லூரி வளாகத்தில் கோயில் கட்டி அதற்கொரு ஆர்ச்சும் (அலங்கார வளைவு) கட்டி பூசைகள் செய்து வருவது கண்டிக்கத்தக்க செயலாக அமைந்திருக்கிறது.
இது குறித்து புதுக்கோட்டை கழக மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் கூறியதாவது:
“மன்னர் கல்லூரி என்பது வெறும் கல்லூரி அல்ல, இது மாட்சிமை தங்கிய கல்லூரி என்பதன் சுருக்கம்தான் மாமன்னர் கல்லூரி என்று அனை வராலும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக ஒரு விசயத்தைப் பார்க்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்குள் மட்டுமல்ல, அந்த வளாகத்திற்குள்ளேயே எந்தவொரு வழிபாட்டுத் தலமும் இருக்கக் கூடாது என்பது அரசு விதிமுறைகளில் ஒன்றாகும். அதற்கான நீதிமன்ற உத்தரவே உள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்தக் கல்லூரியானது அரசுக் கல்லூரியா அல்லது யாரோ ஒரு சிலர் வந்து இங்கு கும்பிட்டுப் போவதாகச் சொல்லப்படுபவர்களின் சொந்தக் கல்லூரியா என்பதைக் கொஞ்சம் விசாரிக்க வேண்டும். அரசுக் கல்லூரியாக இருந்தால் உடனடியாக அந்த வழிபாட்டுத் தலத்தை எடுத்துவிட வேண்டும்.

அதற்கு முன்னதாக ஒரு விசயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த போதுதான் புதுக்கோட்டை நகர் வடி வமைக்கப் பட்டது. அதற்கு முன்பே பிரகதாம்பாள் கோயில், சாந்தாரம்மன் கோவில் என்று சில கோவில்கள் இருந்தன என்ற போதிலும் கோயில்கள் மட்டும் வழிபாட்டுத் தலங்களாக இருந்தன.
அதே போல் சிறுபான்மையினர் என்று சொல்லக் கூடிய கிறிஸ்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் மன்னர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்கு கல்விக் கூடங்களுக்கான இடங்களும் வழிபாட்டுத் தலங்க ளுக்கான இடங்களும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன. அந்த வகையில் அந்தந்த மத நம்பிக்கையாளர்களுக்கும் இறைவழிபாட்டு நம்பிக்கை உடை யவர்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அனுமதியும் வழங்கப்பட்டன.

இப்படியெல்லாம் செய்த மன்னர்கள்தான், அவர்கள் உருவாக்கிய கல்லூரிகள், அரசு மருத்துவ மனைகள், நீதிமன்ற வளாகம், பொது அலுவலக வளாகம், மன்னரின் அரண்மனை உட்பட என எந்த இடத்திலும் வழிபாட்டுத் தலங்கள் என இடம் ஒதுக்க வில்லை. புதுக்கோட்டை நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பு சொல்லி விட்டால் மேல் முறையீட்டுக்கு லண்டனுக்குத்தான் செல்ல முடியும் என்ற அளவுக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தின் ஆளு மையும், சமஸ்தான நிர்வாகமும் இருந்தன. அதனால்தான் அரசு அலு வலகங்கள் எதிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட நக ராட்சி அலுவலகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரை ஞர்கள் சேர்ந்து கொண்டு வெற்றி விநாயகர் என்ற பெயரில் ஒரு கோவி லைக் கட்டியிருக்கிறார்கள், அது பின்னா ளில் வந்தது. அதே போல் பழைய மருத்துவமனை வளாகத்தில் பணி புரியும் ஊழியர்கள் மருத்துவர்களின் உதவியோடு ஒரு கோயிலைக் கட்டினார்கள், அதற்குப் பெயர் சுகம் தரும் விநாயகர். (சுகம் தருவது மருத்துவமும் மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை) புதுக்கோட்டை நகராட்சி வளாகத்திற்குள்ளும் அங்குள்ள ஊழியர்கள் அலுவலர்களையும், கவுன்சிலர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஒரு வினாயகர் கோவிலைக் கட்டினார்கள். எல்லாமே அண்மைக் காலங்களில் உருவாக்கியவைதான்.
மன்னர்கள் காலத்திலும் அரசு அலு வலக வளாகங்கள், பொது இடங்களில் இதுபோல் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதன்பிறகு தமிழ்நாடு அரசும் நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன. ஆனாலும் ஆங்காங்கே அவரவர் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் ஆயுத பூசை செய்வது, எங்காவதொரு மரத்திற்கு பூஜைகள் செய்வது என்று தொடங்கி ஆலயங்களை அமைத்து விடுகிறார்கள்.

அப்படித்தான் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியிலும் ‘பொற்பனையான் ஆலயம்’ என்ற பெயரில் ஒரு சிறிய கோவிலை உரு வாக்கி வைத்திருக்கிறார்கள். இதற்கு அனுமதியே இல்லாத நிலையில் கோயில் கட்டியவர்கள் யாரிடம் அனுமதி பெற்றுக் கட்டினார்கள்? அப்படி கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக அனுமதி யாருக்கேனும் வழங்க முடியுமா? கோயில்தானே என்பதால் வெளியாட்கள் வந்து வணங்குவதற்கு அனுமதி உண்டா? சும்மாவே இல்லாத பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பல கலவரங்களைக் கையில் எடுக்கும் கல்லூரி மாணவர்களுக்குள் இந்தக் கோவிலில் சாமி கும்பிடுவதில் பிரச்சினை ஏற்படாதா? அப்படி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கோவில் பிரச்சினை.
ஒரு வேளை இந்தக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள்தான் இந்தக் கோவிலை எழுப்பியிருக்கிறார்கள் என்றால் கல்லூரி நிர்வாகம் அந்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தி ருக்கவோ அல்லது அதற்கு முன்னதாகவே தடுத்திருக்கவோ வேண்டாமா?

அங்கு பணி புரியும் இந்து மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் பேராசிரியர்களின் பங்களிப்பு இதற்குப் பின்னால் இருக்கும் என்றால், அவர்களுக்கு அந்த கல்லூரி வளாகத்திற்குள் வழிபடும் உரிமை உண்டு என்றால், அதே கல்லூரியில் பணி புரியும், பயிற்றுவிக்கும் மற்ற மதங்களைச் சேர்ந்த மற்ற பேராசிரி யர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டுதானே! அருகருகே ஒவ்வொரு தேவாலயங்களும், மசூதிகளும் எழுப்பினால் மிகப் பெரிய அளவுக்கு மதச்சண்டை மூண்டு விடாதா? அதற்கெல்லாம் வழிகோல வேண்டுமா?” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.
அவர் அத்துடன் நிற்கவில்லை. மேலும் அவர் கூறுகையில் “இந்தக் கோவிலைக் கட்டியவர்கள் அவரவர் வீடுகளில் கொண்டு போய்க் கட்டி வைத்துக் கொண்டால் யாரும் இதைக் கேட்கப் போவதில்லை.

இந்தக் கல்லூரியின் மாட்சிமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதே கல்லூரியில்தான் உலகப் புகழ் பெற்ற டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, தீரர் சத்தியமூர்த்தி, திரைப்பட நடிகர்கள் ஜெமினி கணேசன், ஏவிஎம் ராஜன், எழுத்தாளர் அகிலன், மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், வி.என்.சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பெருந்தொழிலதிபர் எஸ்.இராமச்சந்திரன், விஞ்ஞானி ராஜன் நடராஜன், அய்ஏஎஸ் அதிகாரி சகாயம், உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் படித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், அவர்கள் படித்த காலத்தில் எல்லாம் தேவைப்படாத, பயன்படாத, தேவை யில்லாத இந்த ஆலயம் இப்போது யாருக்குப் பயன்படப் போகிறது? இந்தக் கல்லூரியின் முதல்வர் இதைக் கண்டு உடனடி நடவடிக்கை எடுத்து கோவிலை அகற்றுவதுடன் கோவில் கட்டுவதற்குக் காரணமானவர்களைக் கண்டு பிடித்து அவர்கள் மீதும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அவர் சொல்வதைப் போல இது போன்ற பிரச்சினைகளில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால்தான் பிற்பாடு வரும் பல சிக்கல்களையும் பிரச்சி னைகளையும் தீர்த்து வைக்க முடியும். கல்லூரியின் தற்போதைய முதல்வர் திருமதி புவனேசுவரி அம்மையார்தான் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கையாக இதன் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment