பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் ‘திராவிட மாடலின் வெற்றி’ வகுப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் ‘திராவிட மாடலின் வெற்றி’ வகுப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில்!

featured image

குற்றாலம், ஜூலை 8 குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் நான்காம் வகுப்பில், ”திராவிட மாடலின் வெற்றி” எனும் தலைப்பில் மாண வர்களின் பல்வேறு கேள்விகளுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பதில் அளித்தார்.

ஒரு நாளைக்கு எட்டு வகுப்புகள்!
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் 4.7.2024 வியாழன் அன்று காலை 10 மணிக்கு தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளான 5.7.2024 அன்று முதல் வகுப்பில் “தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, இரண்டாம் வகுப்பில் “தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்” எனும் தலைப்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மூன்றாம் வகுப்பில் “கடவுள் மறுப்புத் தத்துவம்” எனும் தலைப்பில் கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், நான்காம் வகுப்பில் “திராவிட மாடலின் வெற்றி” எனும் தலைப்பில், ஆசிரியர்
தமிழர் தலைவர், அய்ந்தாம் வகுப்பில் ‘‘மந்திரமா? தந்திரமா?” எனும் தலைப்பில் திண்டுக்கல் ஈட்டி கணேசன், ஆறாம் வகுப்பில் ”சமூகநீதி வரலாறு” எனும் தலைப்பில் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ஏழாம் வகுப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், எட்டாம் வகுப்பில் “சமூக வலைதளப் பயிற்சி” எனும் தலைப்பில் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம் இணைந்தும் வகுப்புகளை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தினர்.

பயிற்சிப் பட்டறை நடைபெற்ற பாங்கு!
பயிற்சிப் பட்டறையில் 96 மாணவர்கள் பங்கு பெற்றிருந்தனர். இதில் 50 பேர் கல்லூரியில் பி.ஏ., பிஎஸ்சி., பிகாம்., பி.எட்., எல்.எல்.பி., எம்.ஏ.பி.எல்., பிஎஸ்சி பி.எல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் மாணவர்கள். பள்ளிகளில் 10, 11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 46 பேர். 96 பேரில் மாணவிகள் 24 பேர். கூடுதலாக பார்வையாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சிப்பட்டறை பொறுப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் வகுப்புகளை நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்தார். ஒவ்வொரு வகுப்புக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முதலில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தார். வகுப்புகளுக்கிடையே மாணவர்களை உற்சாகப்படுத்த, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தோழர் கோபு. பழனிவேல் மற்றும் ஈரோடு கண்ணம்மாள், கீழப்பாவூர் விஜயலட்சுமி போன்றோரை கழகப் பாடல்களைப் பாட வைத்தார்.
சரியாக 35 நிமிடத்தில் வகுப்பாசிரியருக்கு மணியடித்து நேரம் நெருங்குகிறது என்பதை நினைவூட்டுகிறார். 45 ஆம் நிமிடத்தில் ஒரு நீண்ட மணியோசையை ஒலிக்கச் செய்து சரியான நேரத்திற்கு வகுப்பை நிறைவு செய்யச் செய்கிறார். இதனால் திட்டமிட்டபடி வகுப்புகள் நடைபெற்றன. வகுப்புகள் நடைபெற்ற அதே மண்டபத்தில் இருபாலரும் தனித்தனியாக தங்கும் வாய்ப்பும், தேனீர், மதிய, இரவு உணவு உண்ணும் இடமும் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பாக இருந்ததால், அனைத்தும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

மாணவர்கள் கேள்விக்கு
ஆசிரியர் பதில்!
நான்காம் வகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தினார். மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பதிலளித்தார். ஏற்கெனவே மாணவர்கள் கேள்விகளை எழுதிக் கொடுத்திருந்தனர். அக்கேள்விகளை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வாசிக்க, ஆசிரியர் பதிலளித்தார்.
‘‘சொர்க்கம் நரகம் உண்டா? பெரியார் இன்று முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? போலிச் சாமியார்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? 3 பேர் தான் பார்ப்பனர்கள், நாம் 97 பேர். இருந்தும் ஏன் அஞ்சுகிறோம்? தென்காசி திராவிடர் கழகத்தில் இணைந்து பணிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்? திராவிட மாடல் வெற்றி குறித்து தங்கள் கருத்து என்ன?’’ என்பன போன்ற சரமாரியாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் படியாக பதில்களை அளித்த வகுப்பாசிரியர் கி.வீரமணி, மாணவர்களின் உள்ளங்களை அள்ளினார். இந்த வகுப்பை முடித்து விட்டு, திருநெல்வேலி ஏர்வாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு விடை பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment