1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-
காந்தி சகாப்தத்தால் வந்த கேடு
“நான் சமுதாயத்தொண்டன். என் போன்று பாடுபட இந்த காரியத்திலே யாரும் முன்வரலே. நமது காரியம் முடிகிற சந்தர்ப்பத்திலே தான் இந்த நாசமாய்ப் போன இந்த “காந்தி சகாப்தம்” வந்தது. இல்லாது போனால் அப்பவே நமது காரியம் முடிஞ்சி போயிருக்கும். வெள்ளைக்காரன் செய்ததைவிட இந்தக் காங்கிரசு வந்து ஒண்ணும் பண்ணி டலே. அந்தக் காலத்திலேயே பறையனையும், பாப்பானை யும் சக்கிலியையும்,சட்ட சபையிலே ஒண்ணா உட்காராப் பண்ணிட்டான். பள்ளிக் கூடத்திலே உட்காராப்பண்ணினான். உத்தியோகத்திலே உட்காராப் பண்ணினான். இந்த மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் அவன்தான் பண்ணிகிட்டு வந்திருக்கிறான் பெருத்த எதிர்ப்புக்கிடையே.
1936-1937-லே எல்லா மாகாணத்திலேயும் காங்கிரசே ஜெயித்தது. அப்பதான் ஜஸ்டிஸ் கட்சி ஒழிஞ்சிது. எதிர்க் கட்சியே இல்லாத அளவுக்கு காங்கிரசு இந்தியா பூராவும் ஆட்சி. 13 மாகாணத்துக்கும் 13 முதன்மந்திரிகளும் பார்ப்பனர். இங்கே சென்னை மாகாணத்திலே, திரு. ராஜ கோபாலாச்சாரி காங்கிரசிலே பாடுபட்டார். அதனாலே அவர் முதல் மந்திரின்னு சொல்லலாம், மற்ற மாகாணத்திலே என்னா காரணம், மனுதர்மத்தைக் காப்பாற்றவே வந்தார்கள் எல்லாரும்.
திரு.ராஜகோபாலாச்சாரியும் அப்படியே. காந்தியும் – மனுதர்மத்தைக் காக்கவும் – ராமராஜ்யத்தை – ஏற்படுத்தவும், – வருணாச்சிரம தர்மத்துக்காகவும் பாடுபட்டார். முதலிலே அவர் காட்டினார்-“சூத்திரன்” மந்திரியாகக் கூடாது, நிர்வாக அதிகாரியாகக் கூடாது, உத்தியோகத்திலே இருக்கக்கூடாது.அதனாலே உத்தியோகம் பாப்பானுக்கே வந்தது. அயோக் கியப் பாப்பானை எல்லாம் போட்டார் காந்தியார்.எப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அரசியல் சட்டப்படி செல்லாது என்றானோ, அதுபோல் ஜாதி ஒழிப்புக்கும் சட்டப்படி செய்ய முடியாது.
தீண்டாமையையே ஒழிக்கிறபோது ஜாதியும் ஒழியாமலா போயிடும்னு நம்பின பயித்தியக்காரனிலே நானும் ஒருத்தன். “தீண்டாமையை ஒழிக்க திட்டங்கள் தயாரித்தபோது காந்தி தெளிவாகவே சொன்னார், கோயில் பிரவேசமோ ஜாதி ஒழிப்போ குளங்களில் தண்ணீர் எடுப்பதோ இந்த உரிமை யெல்லாம் கேட்கக்கூடாது என்று காந்தியார் சொன்னார்”. மனுதர்மம் இருக்கிறபோது அதற்குமாறான காரியம் எதுவும் தீண்டாமை விலக்குத் தொண்டிலே சம்பந்தப் படுத்தக் கூடாது என்றார்.இந்த நாட்டு மக்களுக்கு ஓட்டுரிமை தந்தது 1952லே. 1949 லேயே சட்டம் பண்ணிட்டான். இதை நாம ஒத்துக்கிட்டேங்கிறான். 1949லே யார் இந்தப் பிரதிநிதிகள்? 1949லே நாம இல்லாத போது செய்துகிட்ட சட்டம். நமது பொது மக்களுக்கு ஓட்டுரிமையில்லாத போது ஏற்படுத்திக் கிட்ட சட்டம். நம்மைச் சுதந்திரத்தின்பேராலே, சட்டசபை இல்லாத காலத்திலே, ஏற்படுத்தின சட்டம் எப்படி நம்மைக் கட்டுப்படுத்தும்? இப்படியாக ஏராளமான பித்தலாட்டம்.
தமிழன் பதவிக்குவரணும்
நான் காமராஜரை ஆதரிக்கிறேன்னு கூட பலபேருக்குக் கூட சங்கடம் இருக்கலாம். காங்கிரசை ஆதரிக்கிறேன்னு இல்லே. “தமிழன் பதவிக்குவரணும்”. நான் காங்கிரசை வளர்க்க விரும்பலே, என் தயவும் காங்கிரசுக்குத் தேவையில்லை. ஆனால், என்ன அவசியமிருந்தது எனக்கு,. காங்கிரசு ஜெயிக்காமல் போனால் பழையபடி பாப்பான் வந்திட்டால் நமது கதி என்னவாகும்? யாராவது ஒரு தமிழன் இருக்கட்டும். இந்த மாதிரி உணர்ச்சியைக் கொண்டுதான் இந்த எண்ணத்தின் பேரிலே ஏதோ காங்கிரசு வந்தாலும் தேவலாம்ன்னுதான் கருதினேன். என் சொந்தத்துக்காக இல்லை. ஏதோ இப்பவும் அந்த ஆள் (காமராசர்) இருக்கிற வரைக்கும், ஏதோ நம்மவர்களுக்கு உத்தியோகம் பாப்பா னுக்கு வராமலிருக்க வேணும்னு கருதினேன். உத்தியோகம் தானே முக்கியம். அதுக்குத் தானே எல்லாரும் வசப்பட்டிருக் கிறாங்க. அதனாலேதானே எல்லா காரியமும் செய்ய முடியுது. நாம சட்ட சபை மூலம் ஒண்ணும் செய்ய முடியாது. நாமளும் போவதில்லை. பின்னே எது மூலம் செய்யலாம்? சட்ட சபையிலும் நம்முடைய பிரதிநிதிகளுக்குப் பெரும் பாலும் இடமில்லை. எல்லாம் பார்ப்பனமயமாகி, எல்லாம் அவன் கைக்கே போயிட்டா, சர்வாதிகாரமாய் இருந்திட்டா, அவனுக்கு வேண்டியவன் களுக்காகவே நடத்த ஆரம்பிச்சிகிட்டானா நம்ம ஆளுங்க பெரும்பாலும் பாப்பானுக்கு அடிமையாய் இருந்திடுவாங்க. உணர்ச்சி இருக்கிறதும் கெட்டுப்போவும்.வைத்திய இலாகாவிலே ஒரு வேலை காலியாச்சி, ஒரு தமிழனுக்குக் கொடுத்தார் காமராசர், ராஜகோபாலாச்சாரி இருந்திருந்தா கட்டாயம் பாப்பானுக்குதான் கொடுத்திருப்பாரு Director of Public Health நிர்வாகம் பார்க்கிற வேலைதான் அது. அந்த இலாகாவின் தலைமை. இதை வைத்துகிட்டுதான் எழுதறான் “சுதேசமித்திரன் பத் திரிக்கையிலே” இவருக்கு முன்னாடி இருந்தவர் யாரைப் போடுன்னு சொல்லிவிட்டுப் போனாரோ அதன்படி காம ராஜர் போடலே. அவன் அனுபவஸ்தன், படிச்சவன் பாஸ் பண்ணினவன். இந்த ஆளுக்கு என்ன தெரியும்?” என்று எழுதுகிறான். இந்த ஆணவம் நிலைக்குமா? காமராசர் ஒழிஞ்சி நாங்க வந்தோமானால் நியாயமா உங்களுக்குக் கிடைக்கிறது கூட இனி கிடைக்குமா? தலை எடுக்க விடமாட்டோம், இதை அவன் சொல்றானைய்யா 1957லே ‘காந்திநாடு’ ஏற்புடையதா?
இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்கு “காந்தி நாடு”ன்னு பேரு வைச்சா நான் வரவேற்பேன். “காந்தி-சகாப்தமானாலும்” நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு “பாரதநாடு” என்று இந்த நாட்டுக் குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. எதுக் காக இந்த நாட்டுக்குப் “பாரதநாடு”-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம் சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் “பாரதநாடு”-ங்கிறான்.
காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் “காந்திநாடு”-ன்னு வைக்கச் சொன்னேன். அதாவது “வருஷம்” என்ற துக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் “வருஷம்” என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிருஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் பிறந் தேன்.
பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? “முஸ்லீம்” முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே “காந்திபேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்”.
No comments:
Post a Comment