காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசர் பேசுகிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசர் பேசுகிறார்!

featured image

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்கவேண்டும் என்பது உன் தலை எழுத்து (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது.

தலை எழுத்தை அழித்து எழுதுவோம்
… உழைக்கவேண்டியதே ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். எழுதவேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன்.

எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்று கிறவர்கள்தான் என்னைக் கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று சொல்லுகிறார்கள்.

ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடைய நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காகப் பாடுபட வேண்டும். அதிகம் உழைக்க வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுளை எண்ணிக் கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?”

– இராயக்கோட்டையில் 26.4.66-இல் காமராசர் உரை (‘விடுதலை 27.4.1966)
“அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுதந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால் அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்”

– பழைய மாம்பலத்தில் காமராசர் ஆற்றிய உரையிலிருந்து (‘விடுதலை 13.4.1961)
‘அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் காங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்தக் கோபம் அவருக்கு இன்னும் தீரவில்லை. 53-இல் செய்ய முடியாததை எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதை இப்போது செய்யப் பார்க்கிறார்.

இந்தச் சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர் தர்மம். தாம் தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல் போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953-இல் தான் பார்த்தோமே – குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளை மூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார்.

ராஜாஜியைப்பற்றி எனக்கு தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விட மாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதை மாற்றியே தீருவேன்.”

– வாணியம்பாடி பகுதியில் காமராசர் உரை
(‘விடுதலை’ 4.5.1966)

“உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்துகொண்டு மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த ஜாதி என்பவன் அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகிறான். உதாரணமாகப் பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை, ஏன் தன்னையே அடகு வைத்துப் பகடையாடினான்.

அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறாள். ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவைப் போக்கி அனைவரும் சமம் என்ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்.”

– (12.11967-இல் கிருஷ்ணகிரியில் காமராசர் உரை (‘விடுதலை’ 16.1.1967)

No comments:

Post a Comment