பாராட்டத்தக்க அறிவிப்பு – செயல்திறன்! முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம்: ஆகஸ்ட் 15-க்குள் திறக்கப்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

பாராட்டத்தக்க அறிவிப்பு – செயல்திறன்! முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம்: ஆகஸ்ட் 15-க்குள் திறக்கப்படும்!

featured image

அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தகவல்

சென்னை, ஜூலை10 கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டு வரும் தந்தை பெரியார் நினைவகத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று செய்தித் துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை நேற்று (9.7.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறி யாளர்கள் சதீஷ்குமார், மோகனகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் ஆர்.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
1924ஆம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க…
அதன் நினைவாக, 1985 ஆண்டு கேரளா அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நிழற்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு, ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். இப்புனரமைப்பு பணிகளுடன், அதிக புத்தகங்களைக் கொண்டதாக நூலகம் விரிவுப்படுத்தப்பட்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விடுபட்டிருந்த நிழற்படங்களும் அமைக்கப்படவுள்ளன. காலத்தால் அழியாத ஒரு நினைவு சின்னமாக விளங்கும் வகையில் இதனை அமைப்பதற்கான காரணம், கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகம் நுழையக்கூடாது என அந்த காலத்தில் அறிவித்திருந்த சமயத்தில், காந்தியார் அவர்களின் உத்தரவை ஏற்று தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். இது ஒரு சமூக நீதி போராட்டமாக கருதப்படுகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புகள் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. பெயிண்டிங், மின்இணைப்பு பணிகள் மழையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ்வாறு செய்தித் துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment