இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றிமுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றிமுகம்!

பட்னா, ஜூலை 13 நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (13.7.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
பிகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்குவங்கம், உத்தராகண்ட், பிகாரின் சில இடங்களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் இன்று (13.7.2024) காலை முதல் எண்ணப்பட்டு வரு கின்றன.

மேற்குவங்கத்தில்
திரிணாமுல் முன்னிலை
மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பா ளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாண் முன்னிலையில் உள்ளார். அதே போல், ரானாகட் தட்சனில் டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி, பாக்தாவில் போட்டியிட்ட மதுபர்னா தாகுர், மணிக்தாலாவில் போட்டியிட்ட சுப்தி பாண்டே ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
பாஜக ஆளும் உத்தராகண்ட், மத்தியப்பிரதேசத்திலும் இந்தியா கூட்டணி வெற்றி முகம் துவக்கத்தில் முன்னடைவைச் சந்தித்து பிறகு தோல்வி முகத்தில் பிகார் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளர்.
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பி னர்களின் மரணம் மற்றும் பதவி விலகலால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பிறகு முதன்முறையாக இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலப்பிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பதவி வில கிய உடனேயே பாஜகவில் இணைந்தனர்.
இதையடுத்து காலியான 3 தொகுதிகளுக்கும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு 10.7.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. டெஹ்ரா தொகுதியில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் போட்டியிட்டார்.

டெஹ்ரா தொகுதியில் முதல மைச்சரின் மனைவியும் காங்கிரஸ் வேட்பாளருமான கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில், காங்கிரசின் புஷ்பிந்தர் வர்மா முன்னணியில் உள்ளார். நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஹர்தீப் சிங் பவா முன்னிலை வகிக்கிறார்.
துவக்கத்தில் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முன்னணி யில் இருந்துகொண்டு வந்த பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அடுத்தடுத்து நடந்த சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலிகளில் 13 தொகுதி களிலும் நண்பகல் நிலவரப்படி இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

பாஜகவுக்கு சவால்
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி பலம் பெற்றிருக்கும் பின்னணியில் நடக்கும் முதல் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் பாஜக டில்லி தலைமை பதற்றத்தில் உள்ளது.

No comments:

Post a Comment