நிஸ்டுலா ஹெப்பர் (Nistula Hebbar)
(நியூடெல்லி நிருபர்)
புதிய ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு அமைச்சர்களுக்கு துறைகளும் வழங்கப்பட்டுவிட்டன. இதில் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை தடம் பதித்திருக்கலாம். ஆனால் கடந்த திங்கட்கிழமை (10.6.2024) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் பரப்புரை கண்ணியமற்ற முறையில் நடைபெற்றது என்றார் அவர். ‘சேவக்’ என்று அழைக்கப்படும் பொதுநலத் தொண்டர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம் தன்னடக்கம் என்றும் அவர் கூறினார். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியவர், பா.ஜ.க.வின் அடுத்த தலைவரின் தேர்வு ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கு ஏற்புடையதாகத் தான் இருக்கும் என்று சூசகமாக உணர்த்தவும் செய்தார்.
தற்போதைய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்தப் பதவிக்காலம் ஜூன் மாத இறுதியில் முடிவுற உள்ளதால், பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பை வேறொருவர் ஏற்பார் என்று யூகிக்க முடிகிறது. மோகன்பகவத்தின் பேச்சும், பா.ஜ.க.வுக்கு 32 இடங்கள் வித்தியாசத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனதும், அடுத்த பா.ஜ.க. தலைவரை சங்பரிவார் கூட்டத்திற்குள்ளேயே கடைந்தெடுத்து தேர்வு செய்வார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ். சுவயம் சேவகர்களின் பயிற்சிக் காலம் ஒன்று முடிவடைந்ததையொட்டி (10.6.2024) ஒரு விழா நடந்துள்ளது. அந்த நிகழ்வில் உரையாற்றிய மோகன் பகவத் இவ்வாறு கூறியுள்ளார்:
“உண்மையான சேவகன் முறை தவறாமல் கண்ணியமாகத் தன் பணியைச் செய்வான். ஆனால் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் எப்போதும் விலகியே நிற்பான். “இதை நான் தான் செய்தேன்!” என்று சொல்லிக் கொண்டு திரியும் ஆணவம் இருக்காது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு மட்டுமே “சேவக்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.”
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை சூசகமாக கோடிட்டுக் காட்டியது அவருடைய பேச்சு. 2019 ஆம் ஆண்டுத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க.வுக்கு இம்முறை மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதற்கு கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தன்னடக்கம் இல்லாமல் போனதே காரணம் என்று மறைமுகமாகக் கூறுவது போல் இருந்தது அவர் பேசியது.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதே அந்த மாநிலத்தில் நடந்த இனக் கலவரத்தை மோடி அரசு அடக்கத் தவறியதை எல்லோருக்கும் நினைவுப்படுத்தத்தான். இந்த முறை மக்களவை இடங்கள் இரண்டுமே மணிப்பூரில் கை மாறி காங்கிரசுக்குப் போய் விட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
அண்மைக் காலமாக பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்குமிடையே உரசல்களும் கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்பும் காணப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் “பா.ஜ.க. தற்போது சுய பலத்தில் இயங்குகிறது. ஒரு காலத்தில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு இடையிலான பந்தம் தொப்புள் கொடி உறவு போல் பலமாக இருந்தது! இன்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சார்ந்து இயங்கவில்லை” என்று ஜே.பி.நட்டா பேசியதே விரிசல் அதிகமாகி விட்டதற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள்.
இதைப்பற்றி கருத்து தெரிவித்த மூத்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் –
“ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் அணி தான் பா.ஜ.க.! மவுனமாக, செயலற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது ஆர்.எஸ்.எஸ்.” என்று அதிரடியாக கூறியுள்ளாராம்.
ஜே.பி. நட்டாவின் பேச்சால் பல ஆர்.எஸ்.எஸ். ‘ஸ்வயம் சேவக்’குகள் அதிருப்தியடைந்துள்ளனராம். ஒரு வேளை நட்டா அரசியல் கண்ணோட்டத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருந்தாலும், அவருடைய நிஜமான முகமும் உண்மையான மனப்போக்கும் தெளிவாகவே தெரிகிறது என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.
பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலை மகாராட்டிராவில் குறிப்பாக மிகத் தெளிவாக காண முடிகிறது. தேர்தல் பரப்புரைக்கு பல தொண்டர்கள் ஆர்வத்துடன் முன்வரவில்லை. அஜித் பவார் தலைமையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) போட்டியிட்ட தொகுதிகளில் மந்தமான நிலையே இருந்தது.
“பா.ஜ.க.வுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குமிடையே நீண்ட காலமாக மனக்கசப்பும், மோதல்களும் இருந்துள்ளன. திடீரென்று கடைசி நேரத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டால், பழைய மனக்கசப்பெல்லாம் மறந்துப் போகுமா?” என்று விசுவாசமுள்ள தொண்டர்களும், உறுப்பினர்களும் கேட்கிறார்கள். இதன் விளைவாக NCP – பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்யவே அவர்களுக்கு ஆர்வமில்லாமல் போனதில் வியப்பில்லை என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளாராம்.
பா.ஜ.க. தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் முதல் கட்டமாக உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கப்பட உள்ளது. இது விரைவில் தொடங்க உள்ளது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். இதன் பிறகு மாவட்ட, மாநில, தேசிய அளவில் தலைவருக்கான தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. மாநில பா.ஜ.க. அமைப்புகளின் தேர்வு 50 சதவிகிதம் நிறைவடைந்தால், கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாராம். தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்று அநேகமாக செப்டம்பர் மாதம் தான் பா.ஜ.க. அறிவிக்குமாம்.
பெரும்பாலான உறுப்பினர்கள் பா.ஜ.க. தலைவர் இந்த முறை தேசியத் தலைமையால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க மாட்டார் என்கிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு மனதாக முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள் கட்சியின் நல விரும்பிகள்.
புதிய தலைவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது புதிய பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் கூட தீர்மானிக்கப்படுவார்கள். கட்சி அமைப்புப் பணிகளுக்கான புதிய பொதுச்செயலாளர் ஒருவரும் முக்கிய நிர்வாகியாக நியமிக்கப்படுவார். இந்த முக்கியமான நபரை எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.ஸே நேரடியாக தீர்மானித்து பா.ஜ.க.வுக்கு அனுப்பிவைப்பது வழக்கமாம்.
நியமிக்கப்படும் பொதுச்செயலாளரோ அல்லது நிர்வாகக் குழுவோ இரு முறை தான் பதவியில் இருக்கலாம் என்பது பா.ஜ.க.வில் எழுதப்படாத கட்சி விதிமுறைகளுள் ஒன்று. தற்போது பா.ஜ.க. பொதுச்செயலாளராக உள்ள பி.எல்.சந்தோஷ் இரண்டு முறை செயலாற்றி விட்டார். அவருடைய பதவிக்காலமும் நிறைவு பெறுவதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணியும் துவங்க உள்ளது.
– நன்றி: ‘தி இந்து’ (12.06.2024)
No comments:
Post a Comment