கலைஞர் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஆனாலும் அவர் மக்கள் மனதை விட்டு மறையவில்லை.
அவர்கள் அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தார் என்பதாலா?
எத்தனையோ முதல் அமைச்சர்கள் இருந்தார்கள்- மறைந்தார்கள். அவர்களை எல்லாம் அன்றாடம் நினைத்துக் கொண்டா இருக்கிறோம்?
அல்லவே!
அவர் நிலைத்து நிற்பதற்கும், மக்கள் நினைப்பில் கலந்து மணம் வீசுவதற்கும் அடிப்படைக் காரணங்கள் கவனிக்கத்தக்கவை.
அவருடைய பொது வாழ்க்கை என்பது மலர்ந்து மணம் பரப்பும் பாதையல்ல கரடு முரடான ஈரோட்டுப் பாதை கல்லும் முள்ளும் நிறைந்த பாதை.
வாழ்ந்த சமுதாயம் வீழ்ந்து கிடந்ததைத் தூக்கி நிறுத்திடத் தோள் கொடுத்த சுயமரியாதை பகுத்தறிவுப் பெருந்தொண்டு அது! பட்ட அடிகள் கொஞ்சமல்ல; ஏச்சுகளும், பேச்சுகளும் ஏராளம், ஏராளம்!
அவற்றை எல்லாம் திரட்டி எடுத்துக்காட்டுவதைவிட தன்னிலை விளக்கமாக, தன்னைப் பற்றி தான் போட்ட எடைக்கற்களைக் கொண்டு அவரைப் பேச வைத்தால் பொருத்தமாக இருக்கும். அங்கு ஒப்பனைக்கும் இடம் இருக்காது அல்லவா!
இதோ, கலைஞர் பேசுகிறார்:
உங்கள் பொது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
“எவ்வளவோ மைல்களைக் கடந்து வந்த உணர்வு. எத்தனையோ காட்டாறுகளைக் கடந்து செய்யப்பட்ட பயணம். இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்தபோதிலும் துன்பத்தின் அளவே என் பொது வாழ்க்கையில் அதிகம். அதனையெல்லாம் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு இயல்பாகவே எனக்கு இருந்த நெஞ்சுறுதியும், நான் பயின்ற தலைவர்கள் தந்த ஊக்கமும் இவ்வளவு தொலைவு நான் வெற்றிகரமாக நடந்து வர உதவி இருக்கின்றன என்பதை அறிந்து பெருமூச்சு விடுகிறேன்.’’
இவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த இந்தப் பொது வாழ்க்கையை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’’
“என்னுடைய பால பருவத்திலேயே என் உள்ளத்தில் சுயமரியாதை உணர்வு மூண்டெழுவதற்கு என் கிராமத்து நிகழ்ச்சிகளே காரணமாக இருந்தன. நான் பிறந்த ஊரில் என் தந்தையைப் போன்ற சிறந்த வித்வான்களானாலும், வேறு பல திறமைசாலிகளானாலும் கிராமத்தில் உள்ள சில ஆதிக்கச் சக்திகளுக்குத் தலை வணங்க வேண்டிய நிலைமை இருந்தது. அதை, பால பருவத்திலேயே நான் வெறுத்தேன்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால் திறமையான கலைஞர்கள், விற்பன்னர்கள் இவர்கள் எல்லாம் மேல் மட்டத்து மனிதர்களுக்கு நேராக தோளில் துண்டுகூட போட்டுக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. அதைப் பார்த்து இயல்பாகவே என் இதயத்தில் ஒரு தீக்கனல் மூண்டது. அந்தக் கனலை காற்று வீசி தீப்பிழம்பாக ஆக்குவதைப் போல் பெரியாருடைய கருத்துகளும், அண்ணாவினுடைய எழுத்துக்களும் என்னை மாற்றின.’’
“சமூகக் கோட்பாடுகளை உடைக்க வேண்டும் என்ற தாக்கம் சிறுவயதிலேயே இருந்ததா?’’
“என் தந்தை தன்னைப் போல நானும் ஒரு வித்வானாக வேண்டும்; அதிலும் குறிப்பாக நாயனம் கற்க வேண்டும் என்பதற்காக ஒரு நாதஸ்வர வித்வானிடம் பயிற்சி பெற அனுப்பி வைத்தார். அந்த வித்வான் அந்த ஊரிலுள்ள ஓர் உயர் ஜாதிக்காரரைப் பார்த்ததும், தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொண்டார். அதைப் பார்த்துவிட்டு மறுநாள் வீட்டிற்கு வந்து ‘நான் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று சொன்னேன். என் தந்தையார் காரணம் கேட்டபோது, தோளிலே துண்டு போடக்கூட உரிமை இல்லாத நிலையை எடுத்துக்கூறி அதனைக் கற்றுக்கொள்ள முடியாது என்றேன்.
இப்படி அந்த உணர்வு இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. இதை நான் ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதி இருக்கிறேன். இதெல்லாம் திருக்குவளையில் நடைபெற்றது. அதற்குப் பிறகுதான் படிப்பதற்காக திருவாரூர் பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். அங்கேதான் பெரியார், அண்ணா கருத்துகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
“பொது வாழ்க்கைக்கு வந்த காரணத்தால் தனிப்பட்ட வாழ்க்கையை ஏதேனும் இழந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?’’
“பொது வாழ்க்கையிலே நுழைந்த காரணத்தால் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தது உண்மைதான். அதனால் பல துன்பங்களை – சொந்த வாழ்க்கையிலே சந்தித்திருக்கிறேன். நான் மாத்திரமல்ல… என்னுடன் நெருங்கி இருந்தவர்களும் அதனால் பல சிரமங்களுக்கு ஆளானபோதிலும், எதையும் இழந்ததாக அவர்கள் கருதுவதில்லை. அப்படியே நான் இழந்திருந்தாலும் அதைப் பெருமையாகவே கருதுகிறேன். பொது வாழ்க்கைக்காகத் தந்த விலையாக அந்த இழப்புகளைக் கருதுகிறேன்.’’
“சிறு வயதில் சரியாகத் தோன்றுவது வயது தரும் முதிர்ச்சியில் காலப்போக்கில் மாறும். அப்படி நீங்கள் மாற்றிக்கொண்ட கொள்கைகள் உண்டா?’’
“நான் ஏற்றுக்கொண்ட எந்தக் கொள்கைகளிலும் சமரசம் செய்ததில்லை. ஆரம்பத்தில் சில கொள்கைகளை மிகவும் வலியுறுத்தி கடுமையாகச் சொல்லி இருக்கிறோம். பிறகு, மற்றவர்களுக்குச் சொல்லும்போது மென்மையாகவும், ஓரளவிற்கும்தான் சொல்ல முடியும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டேன். ஆனால், எனக்குள்ள கொள்கை உறுதியை அழுத்தமான கொள்கைப் பிடிப்பை என்றைக்கும் நான் எனக்குள் சமரசம் செய்துகொண்டதில்லை.
கடவுள் இல்லை என்றால் இல்லைதான். அதிலே சமரசம் கிடையாது. மதம் இல்லை என்றால் இல்லைதான். சமரசம் கிடையாது. ஆனால், என்னுடைய இந்தக் கருத்துகளை மற்றவர்கள் மேல் கடுமையாகத் திணித்துச் சொல்ல முடியாது. கருத்துகளைத் திணிக்கும் பிடிவாதம் என்னைவிட்டுப் போய்விட்டது.
“உங்கள் கட்சிக்குள் சிலர் ஆத்திகர்களாக இருக்கிறார்களே…?’’
“ஏன் என் குடும்பத்திற்குளேயே இருக்கிறார்களே! அதையே நான் அனுமதிக்கிறேனே?’’ என்றார் கலைஞர்.
(வாராந்திர ‘ராணி’ 6.6.2010 பக்கம் 32, 33)
தமிழன் என்றாலும் திராவிடன் என்பதை மறந்துவிடாதே!
திராவிடன் வேறு; ஆரியன் வேறு என்பதற்கு அடையாளம் இதுதான்! என்று சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த விழாவில் முதல்வர் கலைஞர் கூறினார்.
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் 5.6.2010 அன்று மாலை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் சேலம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மேனாள் துணைச் செயலாளரும், சங்ககிரி கே.ஆர்.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான கே.ஆர். மோகன், கே.ஆர்.எம். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சங்ககிரி பேரூராட்சி மேனாள் தலைவர் எஸ்.குமார், சங்ககிரி நகர மேனாள் செயலாளர் சலாலுதீன், நகர ஜெயலலிதா பேரவைத் தலைவர் அசீம்பாஷா, தே.மு.தி.க.வைச் சேர்ந்த சங்ககிரி நகர செயலாளர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் பேசியதாவது:
நீங்கள் அ.தி.மு.க.விலிருந்தும், தே.மு.தி.க.விலிருந்தும், ம.தி.மு.க.விலிருந்தும் வந்துள்ளீர்கள் என்று எண்ணும்போது, அந்தக் கட்சிகளில் தி.மு.க. என்ற பெயர் இணைந்திருப்பதை நீங்கள் யாரும் மறந்துவிட முடியாது. நானும் மறந்துவிடவில்லை. நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், விலகிச்சென்றவர்கள் எல்லாம் ‘திராவிட’ என்ற சொல்லை விடாமலே தங்கள் கட்சிக்குப் பெயராக வைத்துக்கொண்டிருப்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்களும் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எத்தனைக் கட்சிகள் பிரிந்தாலும் கடைசியாக எல்லாமே தி.மு.க.விலிருந்து வந்த கட்சிகள் என்று சொல்கின்ற அளவிற்கு அந்தக் கட்சிகளின் பெயர்கள் எல்லாம் அமைந்திருப்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒரு காலத்திலே காங்கிரஸ் கட்சி வலுவான கட்சியாக பெரிய கட்சியாக அகில இந்தியக் கட்சியாக இருந்த அந்தக் காலத்தில், அவர்களுக்கிடையே வடபுலத்திலே உள்ள காந்தியடிகளுக்கும், சுபாஷ்சந்திர போசுக்கும் ஏற்பட்ட மோதலால் இரண்டாகக் காங்கிரஸ் பிரிந்தது. பிறகு மூன்றாகப் பிரிந்தது. நான்காகப் பிரிந்தது. அப்படி பிரிந்த போதெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தங்கள் தலைவர்களின் பெயர்களை இணைத்துக்கொண்டு, அத்துடன் ‘காங்கிரஸ்’ என்ற பெயரையும் விடாமலே வைத்துக்கொண்டார்கள். ‘இந்திரா காங்கிரஸ்’ என்றும் ‘மொரார்ஜி தேசாய் காங்கிரஸ்’ என்றும், ‘காமராஜ் காங்கிரஸ்’ என்றும் இங்கேயுள்ள காங்கிரஸ் கட்சிகள் எல்லாம்கூட, அந்தக் கட்சிகளின், தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு இயங்கின. ஆனால் இன்றைக்கு அப்படிப் பிரிந்த காரணத்தால் காங்கிரஸ் அழிந்துவிடவில்லை. காங்கிரஸ் அப்படியே இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு இந்தியாவை ஆளுகின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருப்பதையும் அதனுடைய தலைவியாக சோனியா காந்தி வீற்றிருப்பதையும் நாம் காண முடிகின்றது.
அதைப்போலத்தான் தி.மு.கழகத்திலிருந்து அ.தி.மு.க; நான் அண்ணா தி.மு.க. என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் அண்ணா பெயர் அவர்களுக்குப் பொருந்தாது; தி.மு.க. என்ற இந்தப் பெரிய இயக்கத்திலிருந்துதான் பிரிந்தது. அதை, பிரியும் போது அவர்களால் ‘திராவிட’ என்ற சொல்லை விட்டுவிட்டு இயங்க முடியாது என்ற காரணத்தால் ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று அண்ணாவின் பெயரையும் சேர்த்து இரண்டு பேரையும் சேர்த்தால்தான் தமிழ்நாட்டிலே இருக்கிற பாமர மக்களை ஏமாற்ற முடியுமென்று இரண்டு பெயரையும் இணைத்து வைத்துக்கொண்டு கொஞ்ச காலம் அவர்களுடைய கட்சியை நடத்திப் பார்த்தார்கள். சிறிது காலம் ஆட்சியை நடத்திப் பார்த்தார்கள்.
இன்றைக்கு முடிவு என்னவென்றால் எல்லாமே சேர்ந்து உருண்டு திரண்டு தி.மு.க.தான் இவர்களுக்கெல்லாம் ‘நாற்றங்கால்’ ‘மூலாதாரம்’ ‘தலைமை பீடம்’ என்று சொல்லுகின்ற அளவுக்கு எல்லாக் கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்ற காட்சியைப் பார்க்கின்றோம். அப்படி வருகின்ற காட்சிகளிலே ஒன்றுதான் இன்றைக்கு இங்கே நான் காணுகின்ற சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நீங்கள் தி.மு.க.விற்கு வந்து சேருகிறீர்கள் என்றால் உள்ளபடியே தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று எண்ணியவர்கள்- இப்படிப்பட்ட பிளவுகளால் தி.மு.க. நீண்ட நாள் நிற்காது என்றெல்லாம் ஆரூடம் கணித்தவர்கள் ஏமாந்து போகின்ற நிலையைத்தான் இன்றைக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்திலே உள்ள நீங்கள் இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
திராவிடன் ஏன்?
தி.மு.க. ஒன்றுதான் ‘திராவிட’ என்ற சொல்லுக்கு உண்மையான பொருளை உணர்ந்து அந்த உணர்ந்த பொருளை நிலைநாட்டுகின்ற வகையில் இயங்குகின்ற இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ‘திராவிட’ என்று வார்த்தை அலங்காரத்திற்காகச் சொல்வதில்லை. நம்முடைய தமிழகத்திலே பெரும் புலவர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள் எல்லாம் கண்டுபிடித்த உண்மைகளிலே மிக முக்கியமான உண்மைதான் ‘திராவிட’ என்கின்ற அந்த உணர்வு. நாம் தமிழன் என்று சொல்லிக் கொண்டாலுங்கூட, ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொள்ளும்போது தான் பெரியார் அடிக்கடி சொல்வார் உன்னை திராவிடன் என்று சொல்லிக்கொண்டால்தான் திராவிடன் வேறு, ஆரியன் வேறு என்ற அந்தப் பாகுபாடு தெரியும். ஆகவே நீ தமிழன் என்றாலுங்கூட, திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை மறந்துவிடாதே என்று பெரியாரும், அண்ணாவும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதனால்தான் ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற அந்த இயக்கத்திலிருந்து யார் பிரிந்தாலும், ‘திராவிட’ என்ற அந்தச் சொல்லைப் பிரிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு, மக்களைத் திசை திருப்புகிறார்கள். அது மக்களுக்குத் தெரிந்திருந்தும் இது உண்மையிலேயே புலி தானா, அல்லது கோடு போட்டுக்கொண்டு வந்திருக்கின்ற பூனையா என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியத்தான் போகிறது. ஆகவேதான் உண்மையான திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம். உண்மையான திராவிட இயக்கத்திலே பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் லட்சியங்களை மனதிலே வைத்துக்கொண்டு பாடுபடுகின்ற இயக்கம் உண்மையான திராவிட இயக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாம் போலிகள் மற்ற இயக்கங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றப்; பயன்படுகின்ற இயக்கங்கள். நாம் சிறிது காலம் அதிலே சேர்ந்து ஏமாந்துவிட்டோம். இனி விழித்துக்கொள்வோம் என்று உங்களுக்கு ஏற்பட்ட அந்த விழிப்புணர்ச்சியின் அடையாளமாகத்தான் இன்றைக்கு இந்த மாமன்றத்திலே இவ்வளவு பேர் குழுமியிருக்கிறீர்கள் என்பதை நான் எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த அளவுக்குப் பெரும்பான்மையாக தாய்மார்கள் வேறு இயக்கங்களிலிருந்து பிரிந்து வந்து தி.மு.க.விலே தங்களை ஒப்படைத்துக் கொண்டிருப்பதை இப்போதுதான் நான் இந்த மண்டபத்திலே முதல் முறையாகப் பார்க்கிறேன். தாய்மார்கள் விழித்துக் கொண்டாலே, தாயகம் விழித்துக்கொண்டதாகப் பொருள். தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற உணர்வு அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற அந்த உறுதி இவை எல்லாம் தொடர்ந்து இந்த இயக்கத்திற்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்ற காரணத்தினாலேதான் நான் இங்கே வந்து குழுமியிருக்கின்ற தாய்மார்களையெல்லாம் பாராட்டுகிறேன்.
(‘முரசொலி’ 6.6.2010)
« « «
“திராவிடம் என்பது ஓர் இனம், ஓர் உணர்வு. பெரியார், அண்ணா கண்ட இந்த சகாப்தத்துடன் முடிவு கிடையாது’’ (முதல் அமைச்சர் கலைஞர் மீஞ்சூர் அரசு விழாவில் பேசியது – 31.7.2010).
« « «
பெரியாரின் கொச்சைத் தமிழ்தான் வென்றது!
“நாங்கள் அழகாக எழுதி, அண்ணாவைப் போல் எழுத முயற்சித்து, அண்ணாவைப் போல் எழுதிப் பார்த்து, புரட்சிக் கவிஞரைப் போல எழுத வேண்டுமென்று முயற்சித்து, அதைப் போல கவிதைகளை எழுதி, எவ்வளவு எழுதினாலும் அத்துணையும் தந்தை பெரியார் அவர்களுடைய அந்தக் கொச்சைத் தமிழுக்கு முன்னால் என்றைக்கும் நின்றதில்லை (கைதட்டல்) அந்தக் கொச்சைத் தமிழ்தான் இன்றைய ஜாதீய ஒழிப்புக்கு மதமாச்சரியங்களால் ஏற்படுகின்ற மடமைகளைக் கொளுத்துவதற்குப் பயன்பட்டிருக்கின்றது’’
(13.11.2006 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவப் பெருவிழாவில்)
« « «
திராவிடன் என்றால் யார்?
தமிழ்நாட்டின் சரித்திரத்தில் திராவிடன் என்ற சொல் மறைந்து போய்விட்டது. இன்றைக்கு யார் யாரோ திராவிடன் என்று அந்தச் சொல்லுக்குள்ள மகிமை தெரியாமல் திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி; ஆரிய தருமத்திற்கு விரோதி; நூற்றுக்கணக்கான ஜாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத்திற்கு விரோதி; என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மானத்தோடு வாழ வேண்டும், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவன் தான் திராவிடன்.
(11.10.2006 அன்று சேலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்)
« « «
செந்நீர் இருக்கிறது!
கேள்வி: போகிற போக்கைக் கவனித்தால் கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்த்த பயிராம் இடஒதுக்கீடுக் கொள்கைக்குக் கல்லறை கட்டப்படுமோ என்ற சந்தேகம் எழுகிறதே?
கலைஞர்: அஞ்சற்க. “கண்ணீர்’’ முழுவதும் காய்ந்துவிடினும், சிந்துவதற்குச் “செந்நீர்’’ நிறைய இருக்கிறது பெரியார், அண்ணா, காமராசர் ஆகிய மூவரும் உருவாக்கிய பட்டாளத்துப் போர்வீரர்களிடம்!
(‘முரசொலி’ 12.1.2007)
குறிப்பு: அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களுக்கு நீதிமன்றப் பரிசீலனையிலிருந்து, ஒட்டுமொத்தமாக விலக்கு அளிக்க இயலாது என்று தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு மனதாகத் தீர்ப்பு அளித்தது(11.1.2007) குறித்து மேற்கண்டவாறு முதல் அமைச்சர் கலைஞர் கருத்துக் கூறினார்.
« « «
‘மானமிகு’ இல்லையேல்...
“நான் தலைவனாக விளங்குன்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன். ‘மானமிகு’ இல்லையேல், “மாண்புமிகு’’க்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்’’
(‘முரசொலி’ 15.9.2006)
« « «
சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்
கேள்வி: வேகமாக வளரும் மாநிலமான தமிழகத்தில் இன்னமும் ஜாதி, மதரீதியான பிளவு இருப்பது சரிதானா? பார்ப்பனர், சூத்திரர், இந்து, திராவிடர் என்பது போன்ற சர்ச்சைகளில் நீங்களும் பங்கு கொள்கிறீர்களே?
பதில்: சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சமத்துவ நிலையை ஏற்படுத்துவதுதானே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, குறிக்கோள்! அந்த இயக்கத்தில் என் பங்கு இல்லாமல் எப்படி இருக்கும்?
கேள்வி: தமிழக அரசியல் மற்றும் ஏனைய அம்சங்களிலும் அகில இந்திய அரசியலிலும் பல படிகள் வளர்ந்துவிட்ட தி.மு.க. இன்னும் தனது அடிப்படை பார்ப்பன எதிர்ப்பை வைத்துக்கொண்டிருக்கிறதே ஏன்?
பதில்: தி.மு.க. பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறது; தனிப்பட்ட பார்ப்பனரை அல்ல. ‘’பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே!’’ என்று பாரதியார்தான் பாடியிருக்கிறார்.
(‘இந்தியா டுடே’ 17.1.2007)
« « «
தி.க.வுக்கு அடுத்தபடியாக தி.மு.க.
அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும் நாம் மறந்துவிடவில்லை. ஆனால், இப்போது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். “திராவிட’’என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப் பற்றிப் பேசப் பயப்படுவார்கள். கடவுளின் பெயரால் நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச்செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டும் என்று சொல்கின்ற தைரியமும் அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிட இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக அடுத்தபடியாக அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
(‘முரசொலி’ 15.9.2006)
« « «
வேண்டுகோள் அல்ல – கட்டளை!
பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக்கொணடு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்யத் திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழகத் தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் 2.5.2010)
« « «
சுயமரியாதை எங்களுக்குச் சொந்தம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர், ‘அமைச்சரவைக்கு சுயமரியாதை இருந்தால்’… என்று குறிப்பிட்ட போது முதல் அமைச்சர் கலைஞர் குறுக்கிட்டு, பதிலளித்தார்.
“சுயமரியாதை எங்கள் சொத்து. நாங்கள் தந்தை பெரியார் அவர்களின பிள்ளைகள். முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான்’’ என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறியது சட்டமன்ற அவைக் குறிப்பேட்டில் வரலாற்றுக் கல்வெட்டு!
« « «
“இது சூத்திரர்களுக்கான அரசுதான்!’’
“தமிழ்நாடு அரசு நாலாஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசு தான். எங்களையெல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன்: பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறுமாப்புடனும் பெருமையுடனும் கர்வத்துடனும் கூறிக்கொள்கிறேன்,’’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் கலைஞர் 28.07.1971 அன்று பிரகடனப்படுத்தினார்.
« « «
கேள்வி: நீங்கள் வாக்களித்தவாறே உங்கள் சொந்த வீட்டை நீங்கள் வாழ்ந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்துவிட்டீர்கள். இப்போது உங்களுடைய மனஉணர்வு எவ்வாறு உள்ளது?
கலைஞர் பதில்: நான் ஆத்திகனாக இருந்தால் ஆத்மதிருப்தி அடைந்ததாகச் சொல்லியிருப்பேன். ஆனால், நான் ஒரு நாத்திகன் என்ற அளவில் மனநிறைவு கொள்கிறேன்’’
« « «
கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர் தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?
கலைஞர் பதில்: இந்த இரண்டையும்விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான்.
(‘தினகரன்’ பேட்டி 6.5.2006)
« « «
டாக்டர் கலைஞருக்கு தந்தை பெரியார் வாழ்த்து!
“மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்துவிடுகிறார்.
இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல், எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத் துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு, மக்களுக்குப் புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்’’
– ’விடுதலை’ 3.6.1972
தந்தை பெரியாரின் இந்தச் சான்றைவிட வேறு வெகுமதி என்ன வேண்டும்? ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது காரணம், திராவிட இயக்கம் வெறும் அரசியல் கட்சியல்ல; அடிப்படையில் சமூகப் புரட்சி இயக்கம் என்பதே!
இன்னும் எத்தனையோ இனமான, சுயமரியாதை, பகுத்தறிவுக் கற்கண்டுகளும் கல்வெட்டுகளும் உண்டு தந்தை பெரியாருடைய வாழ்த்தோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
விரிக்கின் பெருகும் மானமிகு கலைஞர் அவர்களின் மேலே காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பொன்மணியின் அடிப்படையிலும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். அவர்தம் நெடிய வாழ்க்கைப் பயணத்தில் எண்ணற்ற மைல் கற்கள் உண்டே!
மானமிகு கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவில் திராவிடம் பற்றியும், திராவிட இயக்கத் தோழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கூறியதை அவர்தம் நூற்றாண்டு நிறைவில் தாயக்கழகமாம் திராவிடர் கழகம் உறுதிப்பட நினைவூட்டுவது அதன் கடமையல்லவா!
வாழ்க கலைஞர்! வெல்க திராவிடம்!
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment