ஜம்மு, ஜூன் 13-பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என மேனாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்முவில் மூன்று நாட்கள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சாலையை விட்டு விலகி சென்ற பேருந்து, ரெய்சியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில், 9 பேர் பலியாகினர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, டோடாவில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடியில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு பாதுகாப்புப் பணியா ளர்கள் காயமடைந்தனர். கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கர வாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சண்டையில் ஒன்றிய காவல் படை அதிகாரி பலியானார்.
இந்த தாக்குதல் குறித்து தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபருக் அப்துல்லா கூறுகையில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு இல்லாத வரை பயங்கரவாதம் முடிவுக்கு வரப்போவதில்லை. பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும், நாம் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுதான் சோகம். நாம் விழித்துக்கொண்டு இதற்கு தீர்வு காணாவிட்டால் அதிகமான அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும். பேச்சுவார்த்தை தான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி” என்றார்.இரண்டாவது முறை வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கர் , ‘பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங் கரவாதத்திற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தும்’ என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment