சென்னை • வியாழன் • ஜூன் 13 – 2024
ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுக் காலமாக ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான ஆட்சி – அரசமைப்புச் சட்டத்தின் ஆதாரச் சுருதியாக இருந்த சமூகநீதியின் ஆணி வேரை வெட்டிப் பார்ப்பனீயத்திற்குப் பொலி கொடுத்தது.
இடஒதுக்கீட்டை ஒழிப்பதிலேயே கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனீய ஆதிபத்தியம் தங்களுக்குத் தோதான ஆட்சி அதிகாரம் கிட்டாதா என்று ‘தவமிருந்து’ காத்துக் கிடந்தது.
வாஜ்பேயி தலைமையிலான அரசு – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சி கொண்டு வந்த சமூகநீதி வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையான மண்டல் குழுப் பரிந்துரையை வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு செயலாக்கத்திற்குக் கொண்டு வந்த நிலையில், அதனை நேரிடையாக எதிர் கொள்ள முடியாத சூழலில் அவர்களுக்கே உரித்தான தந்திர முறையில் வாஜ்பேயி அரசு ஒன்றிய அரசு பணியாளர்களின் ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தியது. அதனை எதிர்த்து நாடெங்கும் சைக்கிள் பேரணி நடத்தியது திராவிடர் கழகம்.
ஓய்வு வயதை உயர்த்தியதன் காரணமாக ஏற்கெனவே பணியில் இருந்தவர்கள் இரண்டாண்டு கூடுதலாகப் பணியாற்றும் ஒரு நிலையை ஏற்படுத்தி, புதிதாகப் பணி நியமனத்திற்குக் குறுக்கே பாறாங்கல்லைப் போட்டனர்.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தந்த பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது.
1910-இல் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் அந்த சட்டத்தைக் கொண்டு வந்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றனர். அதன் காரணமாக இரண்டாண்டுகள் ஓடின.
உச்சநீதிமன்றமோ வழக்கிற்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற அளவுகோலைக் குறுக்கே போட்டனர். அரசமைப்புச் சட்டமும், இதே நீதிமன்றமும் இடஒதுக்கீடு என்பது – சமூகநீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்குத்தான் – இடஒதுக்கீடு என்று திட்டவட்டமாகக் கூறிய நிலையிலும், உச்சநீதிமன்றம் கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்தது.
அதோடு நிற்கவில்லை – அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படாத இடஒதுக்கீட்டுக்கான அளவீட்டிலும் விழுக்காட்டிலும் தன் மூக்கை நுழைத்து, இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்குமேல் போகக் கூடாது என்ற தடுப்புச் சுவரையும் எழுப்பியது.
குதிரை ஆளைத் தள்ளியதோடு நில்லாமல் குழியையும் பறித்த கதையைப் போல, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தேவையில்லாமல் பட்டியலின மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது என்ற அத்துமீறலைத் தீர்ப்பாகக் கூறியது.
எப்படி எப்படியெல்லாம் இடஒதுக்கீட்டின் இறக்கைகளை வெட்ட முடியுமோ, அதனைச் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம், திரைமறைவில் வைத்திருந்த சமூகநீதிக்கு எதிரான நச்சு எண்ணக் கத்தியால் சிதைத்து வந்திருக்கிறார்கள்.
1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் வந்தாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது 40 ஆண்டுகள் புரண்டு ஓடியபின்னர்தான் வாராது வந்த மாமணியாம் வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில்தான் முதன் முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு – அதுவும் 52 விழுக்காடுள்ள (மண்டல் குழுப் பரிந்துரையின் கணக்குப்படி) அவர்களுக்கு 27 விழுக்காடு மட்டுமே செயல்படுத்தப்படும் நிலை.
வேலை வாய்ப்பில் மட்டும்தான் இடஒதுக்கீடு – கல்வியில் கிடையாது என்ற நிலை; கல்வியில் இடஒதுக்கீடு என்பதற்கு 16 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்க வேண்டி இருந்தது; அதுகூட ஆண்டுக்கு
9 விழுக்காடு என்று கணக்கு வைத்து மூன்று ஆண்டுகள் கழித்துதான் கல்வியில் இடஒதுக்கீடு வந்தது.
27 விழுக்காடு இடஒதுக்கீடு என்று வந்தாலும் கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ 27 விழுக்காடு என்ற இலக்கை இந்நாள் வரை எட்ட முடியாத நிலை!
இதற்கெல்லாம் முக்கிய காரணம் – பார்ப்பனர்களின் சூழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தாலும் – பிற்படுத்தப் பட்டவர்கள் ஓர் அணியாக இல்லாமல் சிதைந்து கிடப்பதுதான்.
ஒவ்வொரு அங்குலமாக நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுதான் – இடஒதுக்கீடு என்பது முட்டிக்கால் போட்டு நகர்ந்து நகர்ந்து வர முடிந்திருக்கிறது.
நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் வந்தாலும் வந்தது – அவ்வளவுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதித் தலையின்மீது இடியாக இறங்கியது.
அமைச்சரவையில் முககிய பொறுப்புகள் எல்லாம் பார்ப்பனமயம்தான். மோடி பிற்படுத்தப்பட்டவராயிற்றே என்று பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவரின் இலகான் நாக்பூரில் (ஆர்.எஸ்.எஸ். தலைமை இடத்தில்) அல்லவா இருக்கிறது.
இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதுதானே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் நிலைப்பாடு!
இடஒதுக்கீடு வந்தால் தகுதி – திறமை கெட்டு விடும் என்று சொல்லி வந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்ற ஒன்றைப் பந்தயக் குதிரை வேகத்தில் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது எதைக் காட்டுகிறது?
அதன் பலன் என்ன? எடுத்துக்காட்டாக ஸ்டேட் பாங்கு தேர்வு விவரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
எஸ்.சி. கட்ஆப் மார்க் – 61.25%
எஸ்.டி. கட்ஆப் மார்க் – 53.75%
ஒ.பி.சி. கட்ஆப் மார்க் – 61.25%
பொருளாதாரத்தில் நலிந்த
உயர்ஜாதியினர் (EWS) – 28.5%
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பதற்கு இது ஒன்று போதாதா? இது ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றை அறுத்து உயர் ஜாதி மக்களின் வயிற்றில் கட்டி வைத்த சமூக அநீதிக் கதையாகும்.
இதைவிடப் பெருங்கொடுமை காங்கிரஸ் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ என்பதை உச்சநீதி மன்றத்தில் மோடி அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அதற்கு உயிரூட்டிய மாபெரும் கொலைப்பாதகம்!
இதை எல்லாம் சேர்த்து வைத்துதான் நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு மக்கள் புகட்டிய பாடம்!
தனித் தொகுதியில் 2014 மக்களவைத் தேர்தலில் 71 இடங்களிலும் 2019 தேர்தலில் 72 இடங்களிலும் வெற்றி பெற்ற பிஜேபி – நடந்து முடிந்த தேர்தலில் 55 இடங்களாக வீழ்ச்சி அடைந்தது. 2019இல் வெறும் ஏேழ இடங்களில் தனித் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை 32 இடங்களில் வெற்றிக் கோலோச்சியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும், ‘நீட்’ தேர்வு முறை மாநில அரசுகளின் உரிமைக்கு விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்ற இடங்களில் எல்லாம் இதனை மிகப் பெரிய அளவில் எடுத்துரைத்தார் காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்.
ஒன்றிய அரசில் உள்ள 90 செயலாளர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் மூன்று பேர் மட்டுமே என்ற புள்ளி விவரத்தை எடுத்துரைத்தார்.
விளைவு – நடந்து முடிந்த தேர்தலில் சமூகநீதி தலை தூக்கியது; 10 ஆண்டுகள் ஆட்சி சிம்மாசனத்தில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக அமர்ந்து அட்டகாசம் செய்த மோடி தலைமையிலான ஆட்சி இப்பொழுது தனிப் பெரும்பான்மையை இழந்து அடுத்த கட்சிகளின் தயவில் ஊன்று கோலைக் கையில் பிடித்து, நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஆம், பெரியார் இன்று தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கோலோச்சுகிறார் – ஜொலிக்கிறார்!
வாழ்க பெரியார்!
No comments:
Post a Comment