இது என்ன அரசியல் நாகரிகம்? சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையா உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பதற்கான களம்? விசித்திர பா.ஜ.க. கோஷ்டி சண்டை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

இது என்ன அரசியல் நாகரிகம்? சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையா உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பதற்கான களம்? விசித்திர பா.ஜ.க. கோஷ்டி சண்டை?

சென்னை, ஜூன் 13 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வி யடைந்தாலும், சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், “தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். 2026 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறுவது அவரது கருத்து. இதில் நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

இரு முக்கிய தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பதவியேற்பு விழா விஜயவாடா அடுத்த கேசர பல்லியில் நேற்று (12.6.2024) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, மேனாள் குடிய ரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழிசை சவுந்தரராஜன்உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பது போன்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விழா மேடையில் வெங்கய்ய நாயுடுவும், அமித் ஷாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அமித்ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தமிழிசை கடந்து செல்லும்போது, அமித்ஷா அவரை அழைத்து கண்டிப்புடன் ஏதோ பேசுவது போன்றும், தமிழிசை கூறுவதை ஏற்க மறுத்து, தான் சொல்வதை கேட்குமாறு அமித்ஷா கூறுவது போன்றும் அந்த காட்சிப் பதிவு காட்சி உள்ளது. இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் பேருருவம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுதொடர்பாக அண்ணாமலை, தமிழிசை ஆகிய இரு தரப்பிலும் கட்சித் தலைமை விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment