புதுடில்லி, ஜூன் 8- மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றத்தை மக்கள் விரும்பினார்களோ அந்த மாற்றத்தை அமைதியாக கொண்டு வந்துள்ளனர் என மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். குஜராத்தின், ஆனந்த் நகரில் உள்ள ஊரக மேலாண்மை பயிற்சி மய்யத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (7.6.2024) நடந்தது.
இதில், மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,‘‘ இந்தியா சிறந்த ஜனநாயக நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடந்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக வாக்களித்தனர். எந்த மாற்றத்தை செய்ய விரும்பினார்களோ அதை அமைதியாக கொண்டு வந்துள்ள னர். இதன் மூலம் மேலிருந்து கீழ் வரை அனைவருக்கும் ஒரு செய்தியை கொடுத்துள்ளனர். இந்த தேர்தலில் ஒரு செய்தியை மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த செய்தி என்ன என்பது மக்களுக்கு தெரியும் என நான் நம்புகிறேன்.
தேர்தலில் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றுவதே அரசியல் கட்சிகளின் முதன்மையான முன்னுரிமையாகும். அரசியலில் பணம் முக்கிய பங்கு வகிக்கக்கூடாது. நாம் நல்லவர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நாம் பார்க்க வேண்டும். குணம், திறமை, திறன் மற்றும் நடத்தை ஆகிய நான்கு அம்சங்களை நினைவில் கொள்ளுங்கள். அரசியலில் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பணி யாற்றுவதே கட்சிகளின் முதன்மையான முன்னுரிமையாகும்.
அரசியல் கட்சிகள் இந்த நான்கு அம்சங்களை தவிர்த்து பணம், ஜாதி, மதம், குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக செயல்படுகின்றன. அரசியல் கட்சிகள் இந்த செயல்களின் மூலம் குறுகிய காலத்தில் ஆதாயமடையலாம், ஆனால் நீண்ட காலம் நீடிக்காது. மேலும் நீண்ட காலம் நீடிக்கவும் விடக்கூடாது’’ என்றார்.
No comments:
Post a Comment