சென்னை, ஜூன் 11- கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் இணையம் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர், அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மின் அட்டையின் மூலம் அறி வார்கள். அந்த அட்டையை எடுத்துக் கொண்டு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணத்தை கட்டி வந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம் செலுத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஆப் வழியாகவும், டிஜிட்டல் வழியாகவும் மின் கட்டணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை செலுத்த அலுவலகம் செல்ல தேவையில்லை.. ஒரு நாள் வேலைக்கு லீவு போட தேவையில்லை.. அலைச்சல் இல்லை.. இணையத்தில் மின் கட்டணம் செலுத்துவதால் பல்வேறு யுபிஅய் தளங்கள் சலு கையும் தருகின்றன.
இதன் காரணமாக மின்கட்ட ணங்களை இணையம் மூலம் செலுத்துபவர்களின் எண் ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் இணையம் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரில் அல்லது இணையதளம் வழியாக மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்கிற நிலை கடந்த சிலஆண்டுகளில் மெல்ல மெல்ல மாறியது. வாடிக் கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்தது. இதன்படி, நுகர்வோர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான், பாரத்பே உள்ளிட்ட பல்வேறு யுபிஅய் ஆப்கள் வழியாக செலுத்தலாம். மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டாலே யுபிஅய்க்கள் மின் கட்டணத்தை எடுத்துக் கொள்கின்றன.
இதனால் மின்கட்டணம் செலுத்த மின்நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன்படியே இணையம் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 57.25 லட்சம் மின்நுகர்வோர் இணையம் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தி உள்ளார்கள். இந்நிலையில், நடப்பு ஆண்டு 2024 ஏப்ரல் வரை 70.20 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இதேபோல், கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆனது. இது இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி,கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மின் நுகர்வோர் அதிகளவில் மின்கட்டணத்தை இணையம் மூலம் செலுத்தி இருக்கிறார்கள். இணையம் மூலம் மின் கட்டணம் செலுத்துவதையும், வாட்ஸ் அப் வழியாக மின் கட்டணம் செலுத்துவதையும் மின் வாரியம் ஊக்குவித்து வருகிறது.
No comments:
Post a Comment