கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

featured image

♦ தளபதி ஸ்டாலினுக்கு மிசா சிறையிலும் கை கொடுத்தோம் – இப்பொழுதும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்
♦ தீவிர மருத்துவப் பகுதியில் இருந்த ஜனநாயகத்தை பொதுப் பிரிவுக்குக் கொண்டு வந்த இரு மருத்துவர்கள் – தெற்கே மு.க.ஸ்டாலின், வடக்கே ராகுல்காந்தி 40க்கு 40 வெற்றி – பெரியார் மண் என்பதற்கு அடையாளம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உழைப்போம்
♦தளபதி ஸ்டாலினுக்கு மிசா சிறையிலும் கை கொடுத்தோம் – இப்பொழுதும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்
♦ தீவிர மருத்துவப் பகுதியில் இருந்த ஜனநாயகத்தை பொதுப் பிரிவுக்குக் கொண்டு வந்த இரு மருத்துவர்கள் – தெற்கே மு.க.ஸ்டாலின், வடக்கே ராகுல்காந்தி
40க்கு 40 வெற்றி – பெரியார் மண் என்பதற்கு அடையாளம்
2026 சட்டமன்றத் தேர்தலிலும் 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உழைப்போம்

கோவை, ஜூன் 16 2024 மக்களவைத் தேர்தலில் 40க்கும் 40 இடங்களில் வெற்றி பெற்றது போல 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வென்று காட்டுவோம் – உழைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (15.6.2024) மாலை திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் நடத்திய முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழர்களும் அங்கீகரிக்கக் கூடிய வெற்றி!

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய முப்பெரும் விழா கோவை மாநகரத்தில் வரலாறு படைக்கக்கூடிய விழாவாக அமைந்திருக்கக் கூடிய இந்த விழாவிற்குத் தலை நாயகனாக – இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் யார்? என்பதை நாம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்களைத் தாண்டி, மற்றவர்களும், பொது ஏடுகளும்கூட அங்கீகரிக்கக் கூடிய மகத்தான வெற்றிக்குக் காரணமான எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலைவரும் ஒப்பற்ற முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே,

மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வெற்றி என்பது கொண்டாடப்படவேண்டிய வெற்றி என்பதை உலகம் ஒப்புக்கொண்டிருக்கின்றது.
நம்முடைய வாக்காளப் பெருமக்களுக்கு நம்முடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கக்கூடிய ஓர் அற்புதமான விழா!

அவருக்கு உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கலைஞர் சொன்னதை, இன்றைக்கு இந்தியா சொல்கிறது; இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருக்கின்றது. அதற்கு ஆதாரம்தான் 40-க்கு 40 என்று ‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று சொல்லக்கூடிய மகத்தான வெற்றியை இன்றைக்குக் கொண்டாட – அதேநேரத்தில், தலைவரைப் பாராட்டுவது, வாழ்த்து என்பதோடு மிக முக்கியமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா நிறைவு என்பது முதல் – இரண்டாவதாக முதலமைச்சரைப் பாராட்டுவது – மூன்றாவதாக இதற்குக் காரணமாக இருந்த நம்முடைய வாக்காளப் பெருமக்களுக்கு நம்முடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கக்கூடிய ஓர் அற்புதமான விழா!

அதற்காக உழைத்தவர்கள் இங்கே எதிரிலும், மற்ற இடங்களிலும் இருக்கிறார்கள். மாண்புமிகு தலைவர்கள், மானமிகு தலைவர்கள், அமைச்சர்கள் எல்லோரும் இங்கே சொன்னார்கள்.
மிகப்பெரிய அளவிற்கு அவர்களுடைய உழைப்பு – ஒரு கூட்டு உழைப்பாக மலர்ந்தது.

சில நேரங்களில், பொன் நகைகளுக்கு விளம்பரங்கள் வரும் – அதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள் – ‘‘செய்கூலி இல்லாமல், சேதாரம் இல்லாமல்” இது சாதாரணமான வார்த்தைகள். செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை – 40-க்கும் 40 என்பதைப் பெற்றுத் தந்த அற்புதமான ஒரு வெற்றிச் சிற்பிதான் இங்கே அமர்ந்திருக்கின்றார். அவருக்குப் பாராட்டு என்று சொன்னால், கலைஞருக்குப் பாராட்டு என்று அர்த்தம்; திராவிட இயக்கத்திற்குப் பாராட்டு என்று அர்த்தம்; தந்தை பெரியாருக்குப் பாராட்டு என்று அர்த்தம்.

திராவிட கொள்கை என்றைக்கும் வெல்லும் – அதை வரலாறு என்றென்றைக்கும் சொல்லும் என்பதை வலியுறுத்தக் கூடிய ஒன்றாகும்.
அப்பொழுதும் கைகொடுத்தேன் – இப்பொழுதும் நேரத்தைக் கொடுப்பேன்!

நேரத்தின் நெருக்கடியில் இருக்கின்றோம். நாங்கள் எப்பொழுதுமே நெருக்கடியை சந்தித்தவர்கள்தான். நாங்கள் இருவருமே அப்படித்தான். நெருக்கடி காலத்தில், அவர் சிறைச்சாலைக்கு வந்தார்; அப்பொழுதும் கைகொடுத்தேன் – இப்பொழுதும் நேரத்தைக் கொடுப்பேன்; நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டோம்.
அந்த அடிப்படையில் ஒன்றை உங்களுக்குச் சொல்லவேண்டும். கலைஞருடைய சிறப்பான பேட்டி ஒன்று – ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்ற ஒரு பேட்டி.
அதில், மூத்த பத்திரிகையாளர் இந்து பத்திரிகையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

இந்திய அரசியலில் இவர்தான் கலங்கரை வெளிச்சம்

தலைவரை நாம் பாராட்டுகிறோம் என்பது இப்பொழுது பெற்ற வெற்றிக்காக மட்டுமல்ல; இதற்கு முன்பு பெற்ற வெற்றிக்காக மட்டுமல்ல; இந்திய அரசியலில் இவர்தான் கலங்கரை வெளிச்சம். கப்பல்கள் அந்த வெளிச்சத்தின் துணை கொண்டுதான் செல்லவேண்டும் என்று சொல்லக்கூடிய வகையில் அந்த ஆற்றலைப் படைத்தவர்.

எப்பொழுது இந்த ஆற்றல் வந்தது?

ஈரோட்டுக் குருகுலத்திலே அறிவாசான் தந்தை பெரியாரிடத்தில் பயின்றார்; அரசியலில் அண்ணாவிடம் பயின்றார். அப்படிப்பட்ட கலைஞர், எதிர்நீச்சல் அடித்தார். கலைஞர் ஆளுகின்ற நேரத்தில், எப்படி சிறப்பாக ஆண்டாரோ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுதும் எதிர்நீச்சல் அடித்து, எதிரிகளை மிகப்பெரிய அளவிற்கு வென்றாரோ அப்படிப்பட்ட கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா.
வைக்கம் வெற்றி விழா ஆண்டில்தான் கலைஞர் பிறந்தார்

அவர் பிறக்கும்பொழுதே வைக்கம் வெற்றி விழா – அந்த ஆண்டில்தான் கலைஞர் பிறந்தார். ஈரோட்டுக் குருகுலத்தில் பயிற்சி எடுத்த காரணத்தினாலே, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் சொன்னார்.
‘‘தி.மு.க. தொண்டர்களை எப்படி எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கிறீர்கள்?” என்பதுதான் அந்தக் கேள்வி.

உழைப்பின் வெற்றியாளர் –
அதுதான் வெற்றியின் ரகசியம்!

தி.மு.க. தோழர்கள் என்றைக்கும் சோர்வடைவதில்லை. இன்றைக்குப் பெற்றிருக்கின்ற வெற்றிதான் அதற்கு அடையாளம். எனவே, சோர்வறியாத தொண்டர்கள். அவர்களில் முதல் தொண்டராக எங்கள் தலைவராக நாங்கள் கருதக்கூடிய உழைப்பின் வெற்றியாளர்- அதுதான் வெற்றியின் ரகசியம்.
அந்தக் கேள்விக்குக் கலைஞர் சொன்ன பதில் – எவ்வளவு சுருக்கமாக, எவ்வளவு சுருக்கென்று இருக்கின்றது என்பதை கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில், நாம் பாடம் போன்று மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
மாறி மாறி உற்சாகம் பெறுகிறோம்!

‘‘என்னைப் போல் ஒருவர்தான் தி.மு.க. தொண்டர். நான் உற்சாகமாக இருக்கும்பொழுது அவர்களும், அவர்கள் உற்சாகமாக இருக்கும்பொழுது நானும், மாறி மாறி உற்சாகம் பெறுகிறோம்” என்றார்.
அதற்கடுத்து ஒரு கேள்வி – கொஞ்சம் சிக்கலான கேள்வி. ஆனால், அந்தக் கேள்விக்குக் கணினி போன்று பதில் சொன்னார்.

‘‘தி.மு.க.வை வழி நடத்த ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும்?” என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்விக்குக் கலைஞர் பதில் சொல்கிறார், ‘‘தலைவன் – தொண்டன் என்ற எண்ணம் சிறிதுமின்றி, அண்ணன் – தம்பி என்ற பாசப் பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும், குடும்ப வாழ்விலும் அக்கறை – கட்சித் தோழர் எவரிடமும் பகை, வெறுப்புப் பாராட்டாத பண்பு – எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழ்தல் – பகுத்தறிவு, சுயமரியாதை, இன உணர்வு காத்திடும் போர்க்குணம்- அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை – சமரசமில்லாத கொள்கைப் பிடிப்புப் போன்றவையே தலைமைக்கான தகுதிகள்” என்றார்.
அத்தனை தகுதிகளும் உள்ள இன்றைய தலைவர் வெற்றிக்குமேல் வெற்றியை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்!
நண்பர்களே, அத்தனை தகுதிகளும் உள்ள காரணத்தினால்தான், இந்தத் தலைவர், இன்றைய தலைவர் வெற்றிக்குமேல் வெற்றியை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்த இயக்கம் வெறும் சாதாரண பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. இந்த மக்களுடைய வாழ்வுரிமைக்காக தோன்றிய இயக்கம்.
வெறும் ஆட்சிக்காகத் தோன்றிய இயக்கமல்ல – இந்தக் கூட்டணிக்கூட கலையாமல், உறுதி குலையாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணியாக – இந்தியா கூட்டணி என்ற ஒன்று உருவாக்குவதற்கு அடித்தளமிட்ட கூட்டணியாக இன்றைக்கு இருக்கிறது என்று சொன்னால், அதற்கு அடித்தளம், மூலக்கல் நம்முடைய முதலமைச்சர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இது வரலாற்று உண்மையாகும்.

அந்த வரலாற்றுக்கு உண்மைக்கு அடித்தளம் எது?
இந்தக் குணாதிசயங்கள்- இந்தப் பயிற்சியகங்கள்.

எனவேதான், இந்தப் பயிற்சி, இந்தியா கூட்டணி இன்றைக்கு முழு வெற்றி பெறவில்லையே, என்பது உண்மைதான். அதை நாம் தோல்வியா, வெற்றியா? என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
இந்தியா கூட்டணியின் இரண்டு
தலைமை மருத்துவர்கள்

ஆனால், மிகப்பெரிய மருத்துவர்களாக இவர் இருக்கிறார். இன்றைக்கு இந்தியா கூட்டணியில்தான் மிகப்பெரிய மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதில் இரண்டு தலைமை மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இன்னொருவர் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்கள். வடக்கே – தெற்கே எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு செல்கிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, ஜனநாயகம் பொது வார்டிற்கு வந்திருக்கிறது!

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு. அப்பொழுது ஜனநாயகம் பிழைக்குமா? பிழைக்காதா? சர்வாதிகாரம் அங்கே வந்து அமர்ந்துவிடுமோ என்று பயந்த நேரத்தில்தான், இந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, ஜனநாயகம் பொது வார்டிற்கு வந்திருக்கிறது. இன்னும் குணமாகி வெளியில் வரவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து செல்லக்கூடிய 40 பேரும் ஜனநாயகத்தை வெளியில் கொண்டு வருவார்கள்
இங்கே இருந்து செல்லக்கூடிய 40 பேரும் சென்றுதான், ஜனநாயகத்தை வெளியில் கொண்டு வருவார்கள். இவர்களுக்கு அந்தப் பணிதான் மிகவும் முக்கியமானது. எனவே, இவர்கள் அலங்கார பொம்மைகள் அல்ல.

சில அற்பர்கள் கேட்டார்கள், ‘‘40-க்கு 40 தொகுதிகளிலும் வென்று இருக்கிறீர்களே, அதனால் என்ன பயன் விளையப் போகிறது?” என்று.
அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சுருக்கென்று பதிலடி கொடுத்தார்.
அணை போடுவோம் – சர்வாதிகாரத்திற்கு அணை போடுவோம் – அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்று சொன்னார்கள்.
எனவேதான், உங்களுடைய வழி, உங்களுடைய பணி தேர்தல் வெற்றி – இது ஒரு முனை.
அந்த வகையில், தேர்தல் களப் பணி முடிந்தது.

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்!

அடுத்து, சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
அதைவிட மிக முக்கியமான பணி உங்களுக்கு இருக்கிறது. உரிமையோடு, உறவோடு, கொள்கைச் சிந்தனையோடு சொல்கிறேன் – இந்தக் கலங்கரை வெளிச்சத்திற்கு – கடமையில் குன்றாத ஒரு மாவீரருக்கு – ஒரு தலைமைக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இந்தியா கூட்டணியை வழிநடத்தவேண்டும்.
ஏனென்றால், ஜனநாயகம் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்துதான் வந்திருக்கிறதே தவிர, முழுமையாக மருத்துவமனையை விட்டு வெளியே வரவில்லை.
ஜனநாயகம் வெளியே வருவதற்கு நீங்கள் வழிகாட்டவேண்டும். இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக வழி நடத்தவேண்டும்.

நாம் வெற்றி பெற்று இருக்கின்றோம் கொள்கை ரீதியாக என்பதற்கு அடையாளம்தான்!

ஒன்றியத்தில் அமைந்திருப்பது மைனாரிட்டி அரசுதான் – நாம் வெற்றி பெற்று இருக்கின்றோம் கொள்கை ரீதியாக என்பதற்கு அடையாளம்தான் அது.
அரசியல் ரீதியாக, தேர்தல் ரீதியாக பல பித்தலாட்டங்களை அவர்கள் செய்தபோதிலும், உங்களுடைய முயற்சி என்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்தியா கூட்டணி என்பது இருக்காது; கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சி நீடிக்குமா? என்றெல்லாம் அவர்கள் கேட்டார்கள்.
கேட்டவர்கள் ஆட்சி இருக்குமா? என்று இன்றைக்குக் கேள்வியாக இருக்கிறது.

அந்த சாதனைக்கு உரிய சரித்திர நாயகரே!
வாருங்கள், கருத்தைத் தாருங்கள்!

வாழ்க, வளர்க!
இது பெரியார் மண் – இங்கே ஒருபோதும் தாமரை மலராது!
திராவிடம் வெல்லும் என்பதற்கு சான்றே இந்த 40-ம். காரணம் – இது பெரியார் மண் – இங்கே ஒருபோதும் தாமரை மலராது.
இது கடற்பாறை – தாமரை இங்கே மலவே மலராது.
இங்கே திராவிடம்தான் என்றைக்கும் ஆட்சி செலுத்தும். அதற்கு உறுதுணையாக இத்தனை பேர் இருக்கிறார்கள்.
எனவே, கட்டிக்காத்துச் செல்லுங்கள் – வெற்றியைத் தொடர்ந்து தந்து கொண்டிருங்கள்.

திராவிடம், சொல்லும் வரலாறு!

உங்கள் உழைப்பும், எங்கள் நம்பிக்கையும், மக்கள் ஒத்துழைப்பும் என்றும் வளரும்.
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம்!
வெல்லும் என்றும் திராவிடம்!
சொல்லும் வரலாறு!

நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment