முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள
அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! – இடியாய்க்
குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே
இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று!
அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய்
உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? – இச்சழக்கின்
வீச்சறுத்து வீழ்த்தப்போர் வேங்கைபெரி யார்தொடுத்தார்
கூர்ச்சொல் குடிஅரசு கொண்டு!
சாத்திரம்ஸ நாதனத்தை ஜாதிமதம் ஆகமத்தைக்
காத்தருள் வேதியத்தின் காவியத்தை – ஆர்த்துக்
கடிந்து கனன்றெழுந்து கந்தகச்சொற் பெய்தே
இடித்த குடிஅரசு ஏடு!
சுயமரி யாதை தொலைத்திழிந்தார் வாழ்வின்
துயர்களைந் தூக்கிய தோழன்! – கயத்தால்
உரிமை யிழந்துழன்ற ஊமை நமக்குப்
பெரியார் குடிஅரசு பேச்சு!
ஈராய் முடிபிணித்து ஈரா யிரமாண்டாய்
ஊரார் உழைப்புறிஞ்சி ஓய்ந்துமகிழ் ஆரியத்தை
கூராயு தம்கொண்டு கொய்த குடிஅரசு
தீராநோய் தீய்த்தொழித்த தீ!
அயலார் அடிபணிந்து ஆளுமை அற்றார்
மயல்தீர்க்க வந்த மருந்து! – புயலாய்க்
கயமைக் கருத்தழித்துக் காத்த கருணைப்
பெயலாம் குடிஅரசு பேறு!
வரிதாங்கி வந்தாலும் மக்களூறு செய்யாப்
பரிவால் குடியோம்பப் பண்பார் பெரியாரின்
பேராழச் சிந்தையிலே பூத்த குடிஅரசு
நூறாண்டு கண்டநன் னூல்!
ஈரோட்டு மண்பிறந்த ஈகம் பெரியார்கூர்
ஏரோட்டத் தாள்துளிர்த்த ஏடு!நம் – சீரோங்கப்
பச்சையட்டை தாங்கிப் பகுத்தறிவு மையூற்றி
அச்சாகி வந்த அமிழ்து!
குடிவதைத்த கூன்நிமிர்த்தக் கோலீந்த கொற்றம்!
விடியலுக்காய் வந்துதித்த வெய்யோன்! – குடிஅரசு
தாள்பிறந்தார் என்றிழிந்த சூத்திரரின் தாழ்வகற்றத்
தோள்தந்த தாய்மைத் துணை!
பேதமில்லாப் பேருலகைப் பெண்ணுரிமை பேணுலகை
மீதமின்றிப் பாழ்மடமை வெல்லுலகை – ஏதமில்லா
வாழ்வுற்ற மானிடத்தை வார்க்கக் குடிஅரசு
தாள்வடிவில் வாய்த்த தகை!
No comments:
Post a Comment