டில்லி, ஜூன் 12 பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 9.6.2024 அன்று பதவியேற்று கொண்ட நிலையில் அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றது. அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக எந்தெந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டா உள்ளிட்ட 71 ஒன்றிய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் மோடி 3.0 அமைச்சரவையில் மாநில வாரியாக இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி, பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், ஜிதின் பிரசாத், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, கமலேஷ் பாஸ்வான் மற்றும் எஸ்.பி. சிங் பாகேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்ததாக பீகாரில் இருந்து கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், சதீஷ் துபே, சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, ராம் நாத் தாக்கூர், லாலன் சிங் மற்றும் ராஜ் பூஷன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். மகாராட்டிராவைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், பிரதாப் ராவ் ஜாதவ், ரக்ஷா கட்சே மற்றும் ராம் தாஸ் அத்வாலே ஆகியோரும், கருநாடக அமைச்சர்களில் நிர்மலா சீதாராமன், எச்டி குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, ஷோபா கரந்த்லாஜே, வி சோமன்னா ஆகியோர் அடங்குவர். அமித் ஷா, எஸ் ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, சிஆர் பாட்டீல் மற்றும் நிமுபென் பாம்பானியா ஆகியோர் குஜராத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அரியானாவில் இருந்து மனோகர் லால் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங், தெலங்கானா அமைச்சர்களில் ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் ஆகியோர் உள்ளனர். அசாமின் அமைச்சர்களாக சர்பானந்தா சோனோவால் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா,
ஜார்கண்ட் மாநிலத்தை சந்திரசேகர் சவுத்ரி மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பஞ்சாப் மாநில அமைச்சராக ரவ்னீத் சிங் பிட்டு, உத்தராகண்ட் அமைச்சராக இருப்பவர் அஜய் தம்தா, டில்லியின் பிரதிநிதி ஹர்ஷ் மல்ஹோத்ரா, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் எல். முருகன், கேரளா சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார், அருணாச்சலப் பிரதேசத்தின் அமைச்சராக கிரண் ரிஜிஜு, கோவாவின் பிரதிநிதியாக ஸ்ரீபாத் நாயக், ஜம்மு & காஷ்மீர் அமைச்சராக ஜிதேந்திர சிங், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து ஜே.பி. நட்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment