நிலவில் தரை இறங்கிய சீன விண்கலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

நிலவில் தரை இறங்கிய சீன விண்கலம்

பீஜிங், ஜூன் 5- நிலவின் தென் துருவத்தில் சாங்கே-6 செயற்கைக்கோளின் விண்க லத்தை சீனா வெற்றிகரமாக தரையிறக்கியது. இது நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
நிலவுக்கு செயற்கைக் கோள்கள் அனுப்புவதில் வளர்ந்த நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் நிலவின் தென்துருவத்தை ஆராய்வது பெரும் சவாலாக உள்ளது.ஏனெனில் அந்த பகுதி மிகவும் கரடுமுரடானது மற்றும் பூமிக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது.

எனினும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 செயற்கைக்கோளின் லேண்டரை இந்தியா கடந்த ஆகஸ்டு மாதம் தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதனை தொடர்ந்து நில வின் தென் துருவத்துக்கு கடந்த மாதம் (மே) 3ஆம் தேதி சாங்கே-6 என்ற செயற்கைக் கோளை சீனா அனுப்பியது. இது முதன் முறையாக நிலவின் தென் துருவத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சாங்கே-6 செயற்கைக்கோளின் விண்க லம் நேற்று முன்தினம் (3.5.2024) சீனாவின் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு தரையிறங்கியது. சீனாவின் இந்த சாதனைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து சாங்கே-6 செயற்கைக்கோளின் விண்கலம் 2 நாட்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளது. பின்னர் அதில் பொருத்தப்பட்டு உள்ள எந்திரமானது நிலவில் குழியை தோண்டி சுமார் 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் பாறைகளைச் சேகரிக்கும்.
சாங்கே-6 செயற்கைக்கோ ளின் விண்கலம் நிலவில் சேகரிக்கும் அந்த மாதிரி வருகிற 25ஆம் தேதி பூமிக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment