பங்குனி உத்திரம் என்ற பெயரால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

பங்குனி உத்திரம் என்ற பெயரால்...

featured image

இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச் சென்று பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் அந்த நாட்டு குடியுரிமை பெற்று பிரான்ஸ் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாரீஸ் தலைநகரில் உள்ள பிரதான சாலை ஒன்றில் பங்குனி உத்தரத்தைக் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து கொண்டாடியுள்ளனர்.
தேங்காய் அய்ரோப்பிய நாடுகளில் விளைவது கிடையாது, இவற்றை இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் இருந்து வரவழைத்து உள்ளனர். முக்கியமாக தாய்லாந்து அய்ரோப்பிய நாடுகளுக்கு தேங்காய் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
200 தேங்காய்கள் அடங்கிய டிரம் இந்திய ரூபாய் மதிப்பில் அறுபதாயிரம் ஆகும். இலங்கை ரூபாய் மதிப்பில் 2.5 லட்சம் வரை ஆகும்.

மேலும் இறக்குமதி செலவு மற்றும் தரகர்கள் கமிசன் என்று பார்த்தால் குறைந்த பட்சம் 200 தேங்காய் கொண்ட டிரம் இலங்கை ரூபாய் மதிப்பில் 4 முதல் 5 லட்சம் வரை ஆகும்.
பாரீஸில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பா லும் நடுத்தர மற்றும் சாதாரண நிலையில் வாழும் மக்கள். அவர்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை இருந்தாலும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கிடைப்பது அரிதாக உள்ளது. அதே நேரத்தில் இவர்கள் அதிகம் கடின உழைப்புக் கொண்ட – தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்கின்றனர். சிலர் வணிகத்திலும் ஈடுபடுகின்றனர், அதுவும் அங்குள்ள தமிழர்களின் தேவைகளுக்கான பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களே தவிர பெரிய வணிக நிறுவனங்கள் அல்ல. இவ்வளவு பொருளாதார நெருக்கடியிலும் உழைத்த பணத்தை தெருவில் வீசிச் செல்லும் அளவிற்கு மதம் அவர்களின் மூளையை முடக்கி வைத்துள்ளது.

இன்றும் ஈழத்தில் போரின் போது பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு உதவி வேண்டி சமூகவலை தளங்களில் கோரிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றனர். பாரிஸ் சாலையில் இவர்கள் உடைக்கும் ஒரு டிரம் தேங்காய்க்கு செலவழிக்கும் ரூ.5 லட்சம் ஈழத்தில் நலிந்த சுமார் 20 குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து – மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து – மதமும் கடவுளும் மனிதர்களைக் காப்பாற்றினால் சரி; ஆனால் மனிதர்கள் தானே மதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

பாடுபட்டு உழைத்த பொருளைக் கோயில்க ளுக்குக் கொட்டி அழுகிறார்களே – வியர்வை சிந்தாமல் ஒரு கூட்டம் (அதுவும் கோயில் கருவறைகளில் இப்பொழு தெல்லாம் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது) உழைப்பாளி மக்களின் உழைப்பையும் பொரு ளையும் அல்லவா சுரண்டிக் கொழுக்கிறது.
இவற்றை மட்டுமல்ல, அந்தப் பாட்டாளி பாமர மக்களைப் பிறப்பின் அடிப்படையில் தீண்டத்தகாதவர் களாக – ஏன் மனிதனாகக்கூட மதிப்பதில்லையே?
கடவுளும் மதமும் ஒழிந்தாலொழிய மானுடம் உயர்வது – நாகரிகமாக வாழ்வது முயற் கொம்பே!

No comments:

Post a Comment