மும்பை, ஜூன் 12 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் மதவாதப் பிரச்சாரம்தான் மகாராட்டிராவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்க காரணம் என அம்மாநில முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் மகாராட்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது; பாஜக 9, சிவசேனா உத்தவ் தாக்கரே 9, சரத்பவார் என்சிபி 8, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, அஜித் பவார் என்சிபி 1 இடத்தில் வென்றது. மகாராட்டிராவில் பாஜக கூட்டணி மிக அதிகமான தொகுதிகளில் வெல்வோம் என எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர் மாறாக அமைந்தன.
ஒன்றிய அமைச்சர் பதவிகள் ஒதுக்கீட்டில் என்சிபி அஜித் பவார், சிவசேனா ஏக்நாத்ஷிண்டே தரப்பினர் போதுமான பிரநிதித்துவம் கிடைக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரமே தேர்தல் தோல்விக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: ‘‘மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் 400-க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என பேசினர். அத்துடன் 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதுவோம் எனவும் பிரசாரம் செய்தார். தொடர்ந்து மதவாதம் குறித்தும் பரப்புரை செய்தார்
இந்த பிரச்சாரத்தால் பொதுமக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிவிட்டது. அதாவது பாஜக 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிவிடுவர்; இதனால் இடஒதுக்கீடு பறிபோய்விடும் என்பதுதான் அத்தகைய எண்ணம். இதனையே எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்தன. இதுதான் பாஜா கூட்டணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.’’ இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துளார்.
No comments:
Post a Comment