சென்னை, ஜூன் 8- தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (8.6.2024) மாலை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, தமிழ்நாடு மக்கள், தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4ஆம் தேதி இரவே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், தி.மு.க.வின் புதிய மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (8.6.2024) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களவை உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் இக்கூட்டத்தில் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்களுக்கான உதவி மய்யத்தில் பணி
ஜூன் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 8- பெண்களுக்கான உதவி மய்யத் தில் பணியாற்ற தகுதியுடைய நபர்கள் ஜூன் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மய்யம், பெண்கள் உதவி மய்யத்தில் தொகுப்பு அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வழக்குப் பணியாளர்கள் காலிப் பணியிடத் துக்கு விண்ணப்பிப்பவர்கள், சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில், அரசு, அரசு சாரா திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு உளவியல் ஆலோசனை அனுபவம் உடையவராகவும் இருக்கவேண்டும்.
மேலும், இவர்கள் 35 வயதுக்குட்பட்ட, உள்ளூரைச் சார்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.
இதேபோல, பாதுகாப்பாளர் காலிப்பணியிடத்துக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய முன்அனுபவம் பெற்ற வராகவும், உள்ளூரைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணியிடத்துக்கு ஆண், பெண் இருபா லரும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதிய மாக ரூ.12,000 வழங்கப்படும். பன்முக உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த முன்னனுபவம் உடையவராகவும், நன்கு சமைக்க தெரிந்த, உள்ளூரைச் சார்ந்த பெண்களாகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.
இதனால், தகுதியுடையவர்கள் விரும்பும் பதவிகளுக்கு Chennai.nic.in எனும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களை ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்திலுள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது oscnorthchennai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை: 5 பேருக்கு மறுவாழ்வு
சென்னை, ஜூன் 8- சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞரின் உடல் உறுப்புக் கொடை மூலம் 5 நபர்கள் மறுவாழ்வு அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் 20 வயதான கல்லூரி படிக்கும் இளைஞர் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருக்கும்போது சாலை விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞரை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர்கள் இளைஞர் மூளை சாவடைந்ததை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடந்து இளைஞர் குடும்பத்தினர் உடல் உறுப்புக் கொடை செய்ய முன்வந்தனர். அதன் அடிப் படையில் இளைஞரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு அவை 5 நபர்களுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜம், மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாண வர்கள் என அனைவரும் வரிசையாக நின்று இளைஞரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடல் உறுப்புக் கொடையின் காரணமாக இளைஞ ரின் சிறுநீரகம், கல்லீரல், கண்விழி மற்றும் எலும்பு ஆகியவை கொடையாக பெறப்பட்டு அவை பாதிக்கப் பட்டவருக்கு பொருத்தப்பட்டு 5 நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இன்று வரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு உடல் உறுப்புக் கொடை செய்யப்பட்டுள்ளது.
உடல் உறுப்புக் கொடை செய்ய முன்வந்த குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக்கவசம்தான் நம் உயிரை காப்பாற்றும். அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment