சென்னை, ஜூன் 13– மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின்கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப் படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில், மின்வாரியத்துக்கு வரவை விட செலவு அதிகம் உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதை ஈடுசெய்யும் விதமாக வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், மின்கட்டணம் உயர்வு என பரவி வரும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:மின்கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின்கட்டண உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம். மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
No comments:
Post a Comment