ஜாதி மத ரீதியில் வாக்கு சேகரிப்பதா? இதனை தடுத்து நிறுத்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் கோரி வழக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ஜாதி மத ரீதியில் வாக்கு சேகரிப்பதா? இதனை தடுத்து நிறுத்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் கோரி வழக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

featured image

சென்னை ஜூன் 5- ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு இந்திய தலை மைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்து வாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்கு களை சேகரிப்பது ஊழல் நட வடிக்கை. அதேபோன்று, வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் மக்களை பிரித்தாள்கின்றன. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. தேர்தல் நேரங்களில் ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களை பிளவு படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதன்பின், இந்த நடவடிக்கைகளை தடுக்க எந்த ஒழுங்கு முறையும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தூதர்களை நியமித்து, மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment