இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற பா.ஜ.க.வினர், இப்பொழுது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற பா.ஜ.க.வினர், இப்பொழுது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார்கள்!

featured image

‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்!’’

தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, ஜூன் 13 இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற பா.ஜ.க.வினர், இப்பொழுது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார்கள். ‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’’ சிறப்புக்கூட்டம்!

கடந்த 11.6.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மோடி, இராமனைக் கைவிட்டுவிட்டார்; அதுதான் நமக்கு மிகப்பெரிய வெற்றி

ஏன் தோற்றவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் – வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று சொன்னால், இதில் கோடிட்டுக் காட்டவேண்டிய செய்தி என்னவென்றால், அயோத்தியில் உள்ளவர்கள் இராமனை நம்பாமல், இராமன் கோவில் திறப்பிற்காக ஓட்டுப் போடாமல் விட்டவர்கள் எல்லாம் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், இராமனுக்காகவே எல்லா ஊர்களிலும் இருந்து ‘தீர்த்தத்தை’ சேகரித்து, இராமனுக்கு ‘அபிஷேகம்’ செய்து – அங்கே இருக்கின்ற சங்கராச்சாரியார்கள் எல்லாம் இதை மோடி செய்யக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்; இது ஸநாதனத்திற்கே விரோதம் என்று சொன்னார்கள்; அதைப்பற்றி பிரதமர் மோடி பொருட்படுத்தவில்லை என்கிறபொழுதே, அவர் இராமனைக் கைவிட்டுவிட்டார். அதுதான் நமக்கு மிகப்பெரிய வெற்றி.
எப்படி?
‘‘ஜெய் ராம்”, ‘‘ஜெய் சிறீராம்” என்று சொல்லவில்லை என்றால், அடிப்போம் என்று சொன்னார்கள். அதனால், ‘‘ஜெய் சிறீராம்” என்று எல்லோரும் பயந்துகொண்டு சொன்னார்கள். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இராமனைப்பற்றி அவர் பேசவில்லை என்று ‘‘தந்தி டி.வி.”யிலேயே சுட்டிக்காட்டினார்கள்.

‘‘ஜெய் ஜெகன்னாத்’’ என்றார்
பிரதமர் மோடி!

‘‘இராமனைக் கைவிட்ட” பிரதமர் மோடி, அதற்கடுத்தபடியாக ‘‘ஜெய் ஜெகன்னாத்” என்றார்.
இராமனை அவர்கள் கைவிட்டது மட்டுமல்ல, இராமன் கோவிலைக் கட்டி, மக்களுடைய வாக்குப் பெறலாம் என்று நினைத்தார்களே, அது நிறைவேறவில்லை. ஆகவே, எந்தக் கடவுள் எபெக்ட்டிவாக இருப்பார் – சீசன் கடவுள் போன்று, அய்யப்பன் கோவிலுக்குப் போவதுபோன்று – இராமனை மாற்றி, ‘‘ஜெய் ஜெகன்னாத்’’ என்றார்.

கடைசியில், ‘‘நானே அவதாரம்” என்றார் பிரதமர் மோடி.
அதைப்பற்றித்தான் எல்லோரும் விமர்சனம் செய்தார்கள்.

இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்!
‘‘ஸநாதனம் என்பதை அவமதித்துவிட்டார் அமைச்சர் உதயநிதி” என்று வழக்குகள் தொடுத்தனர். இப்படி பேசியவர்களுடன் கூட்டணியா? என்றெல்லாம் கேட்டு, இதை வைத்து வெற்றி பெறலாம்; இந்தியா கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று நினைத்தவர்கள், ஏமாந்துதான் போனார்கள்.

மம்தா – ராகுல்காந்தி ஆகியோர் மோடியை விமர்சனம் செய்தனர்!

மாறாக, ஸநாதனத்தைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னதைவிட, மோடி, ‘கடவுள் அவதாரம்’ என்று தன்னை சொல்லிக் கொண்டதைப்பற்றி, ‘‘கடவுள் அவதாரம் இப்படியெல்லாம் சொல்லுவார்களா, செய்வார்களா?” என்று மம்தா பானர்ஜி அவர்களும், ராகுல்காந்தி அவர்களும் பேசக்கூடிய அளவிற்கு வந்தார்கள். ஸநாதனத்தைப்பற்றி பேசும்பொழுதுகூட, இந்த அளவிற்கு வேகமாகப் பேசவில்லை.
ஆகவே, தத்துவ ரீதியாக வெற்றி பெற்றவர்கள் யார்?
தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது பிரதமர் மோடி இன்னொன்றையும் பேசினார்.
‘‘ஹிந்து மக்களே, உங்களிடமிருந்து தாலியைக்கூட பறித்து, இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்.

எங்களுக்குத் தேவை இராமனோ, ஜெகன்னாதரோ அல்ல;
எங்களுக்குத் தேவை உணவு!

ஆனால், அதை யாருமே பொருட்படுத்தவில்லை.
காரணம், எங்களுக்குத் தேவை இராமனோ, ஜெகன்னாதரோ அல்ல; எங்களுக்குத் தேவை உணவு – விலைவாசியைக் குறைக்கவேண்டும்; வேலை வாய்ப்பைக் கொடுக்கவேண்டும். இதுதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லி, அதனுடைய விளைவுதான் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இந்து’ பத்திரிகையின் தலையங்கம்!

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்களின் நிலையைப்பற்றி சொல்லும் பொழுது, இந்த நாட்டின் பன்முகத்தன்மையை ஒப்புக்கொள்ளாதவர்கள் அவர்கள். ஜனநாயகத்தினுடைய அடிப்படையை ஒப்புக்கொள்ளாதவர்களுடைய நிலை என்னவென்றால், இன்று வெளிவந்திருக்கின்ற ‘இந்து’ பத்திரிகையின் தலையங்கத்தைப் பாருங்கள்.
‘‘For Plurality: On CSDS-Lokniti’s post-poll survey’’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. பன்முகத்தன்மைக்காக – இந்த நாட்டினுடைய பன்முகத்தன்மை அழிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் – அது காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு.
‘‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று எல்லாமும் ஒரே, ஒரே ஒரே தான். ஆனால், ஒரே ஜாதி என்று மட்டும் நாங்கள் சொல்லமாட்டோம்” என்றால் என்ன அர்த்தம்? இந்தக் கேள்வியை நாங்கள் கேட்டோம்; அதற்கு இதுவரையில் பதிலே கிடையாது.
‘இந்து’ தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
‘‘For Plurality: On CSDS-Lokniti’s post-poll survey’’
‘‘A drop in satisfaction levels with governance, the stagnating popularity of Prime Minister Narendra Modi, the resilience of regional parties and the rejuvenation of the Congress party, and the fading of Hindutva for marginalised sections in the Hindi heartland. All these contributed to the National Democratic Alliance’s reduced majority in the 2024 general election, according to the CSDS-Lokniti’s post-poll survey. In its pre-poll survey, the agency had indicated that “unemployment” and “price rise” were key issues for a majority of the electorate and despite the healthy 46% support for the NDA, a chunk of those favouring the incumbents were willing to back the Opposition during the course of the election. The final vote share for the NDA, at 43.6%, was 1.4 points lower than what the constituents of this year’s coalition received in 2019 even as the INDIA bloc secured a significant 41.4% support (if the Trinamool Congress’s shares are included), a leap from 2019. In the previous Lok Sabha election, the Balakot action, the PM-Kisan scheme and 10% reservation for the Economically Weaker Sections category had helped the Bharatiya Janata Party romp home with 303 seats, according to Lokniti. But this time around, multiple narratives and political issues tied the party down in its strongholds. Even its ascendance in Odisha and Telangana was not enough to recoup its losses in the Hindi heartland.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘பன்முகத்தன்மையை விரும்பும் மக்கள் சிஎஸ்டிஎஸ் லோக் நிட்டியின் தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு.
ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, மோடியின் தேய்ந்துபோன புகழ் மற்றும் மாநிலக் கட்சிகளின் எழுச்சி போன்றவற்றிற்கு முன்பு, ஹிந்துத்துவ முழக்கங்களுக்கு மக்கள் ஏமாறவில்லை. இதுவே மோடி தலைமையிலான அக்கட்சி பெரும் பின்னடைவிற்குக் காரணம் என்று சிஎஸ்டி எஸ் லோக்ஹித் கூறியுள்ளது
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு “வேலை யின்மை” மற்றும் “விலைவாசி உயர்வு” ஆகியவை முக்கிய பிரச்சினைகள் மோடியின் புகழுக்கு முன்பு ஒரு பொருட்டே இல்லை. மோடிக்கு 46% ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சியில் உள்ள பாஜகவின் போக்கு அக்கட்சியில் உள்ள பெரும்பாலான வர்களுக்குப் பிடிக்கவில்லை என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி 41.4% ஆதரவைப் பெற்றிருந்தாலும், அன்றைய தேதியில் பாலக்கோட் தாக்குதல் மோடி ஆட்சியின் மோசமான கடந்த 5 ஆண்டு செயல்பாட்டை பேசவிடாமல் செய்துவிட்டது; இதனால் அவர்களது வாக்கு சதவீதம், 43.6% ஆக இருந்தது.

2019 தேர்தலில், பாலக்கோட் நடவடிக்கை, ‘‘பிரதமர் கிஷான் திட்டம்” மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு ஆகியவை பாரதீய ஜனதா கட்சிக்கு 303 இடங்களை பெற்றுத் தந்ததாக லோக் நிதி தெரிவித்துள்ளது. ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் பேசப்பட்டது. ஒடிசாவில் பாஜக வெல்ல முக்கிய காரணம் மாநிலங்களின் பிரச்சினைகளை பாஜக அதிகம் பேசியது; ஒரிசாவிலும், ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் கைகொடுத்து; ஹிந்தி பேசும் பகுதிகளில் காலை வாரிவிட்டது.

தேர்தலுக்குப் பிறகு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை தயார் செய்து செய்திகளை வெளியிட்டார்கள். பா.ஜ.க.விற்குத்தான் தனிப்பெரும்பான்மை கிடைக்கும்; இந்தியா கூட்டணிக்கோ, காங்கிரசுக்கோ அவ்வளவு இடங்கள் கிடைக்காது என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.”

‘எக்ஸிட் போல்’ முக்கியமல்ல,
‘எக்ஸாட் போல்’ முக்கியம்!

அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் வைத்தி ருக்கிறார்கள் என்றால், ‘எக்ஸிட் போல்’ – நாங்கள்தான் சொன்னோம், ‘எக்ஸிட் போல்’ முக்கியமல்ல, ‘எக்ஸாட் போல்’ வரும்பொழுது பாருங்கள் என்றோம்.
‘எக்ஸிட்’ என்றால், வெளியில் போவது; வெளியே போவது யார் என்பதில்தான் தகராறு நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவைக் கண்டு அதிர்ச்சியுற்ற பா.ஜ.க.!

உத்தரப்பிரதேச முதலமைச்சரான சாமியார் இப்பொழுது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய படத்தைக்கூட தொலைக்காட்சிகளில் காட்டவில்லை. அந்த உத்தரப்பிரதேசத்தில் இதற்குமுன் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தார்கள். இந்தத் தேர்தலிலும் அதேபோன்ற நிலைதான் என்று சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு ஹிந்திப் பிரதேசங்கள் முழுவதிலும் பா.ஜ.க. அடிவாங்கி இருக்கிறது. ஏனென்றால், இப்பொ ழுது மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அதைக் கண்ட பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு 9 முறை மோடி வந்தார். கடைசியாக தியானம் செய்வதற்காக வந்தார். இந்தத் தேர்தலில் நிறைய பேர் தியானம் செய்தார்கள். இன்னும் சில பேர் உருண்டார்கள். அதுவும் தேர்தலில் நின்ற வேட்பாளர் உருளவில்லை; அவருடைய கணவர் உருண்டார். சரி, உருண்டாலும் தேர்தல் நடைபெறுவதற்குமுன் உருண்டிருந்தாலும், இன்னும் 5 வாக்குகள் அதிகம் அனுதாபத்தில் வந்திருக்கும்.

அப்படியில்லாமல், தேர்தல் முடிந்து உருண்டால், அதனால் என்ன பலன்? கட்டிப் போட்டால், குட்டிப் போடுகின்ற செடியா இருக்கிறது வாக்குப் பெட்டிக்குள்?

எங்களுக்கு வேண்டியது வேலை வாய்ப்பு; இராமன் கோவில் அல்ல: மக்கள்!

இத்தேர்தலில் மிகப்பெரிய வேடிக்கையான சூழல் – கடவுள்களால் இந்த வெற்றிகள் வரவில்லை; மூடநம்பிக்கையினால் வெற்றிகள் வரவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மக்களே என்ன சொல்லுகிறார்கள் என்றால், ‘‘எங்களுக்கு வேண்டியது வேலை வாய்ப்பு; இராமன் கோவில் அல்ல” என்று. பக்தியை வீட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.ஆகவே, அப்படிப்பட்ட சூழல் இன்றைக்கு ஏற்பட்டு விட்டது.

ஆகவே, இன்றைக்கு ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைத்திருப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயல்படப் போகிறார்களா? அல்லது இல்லை இல்லை, நாங்கள் பழையவர்களை எல்லாம் அழைத்திருக்கின்றோம். பழைய முறையிலேயே நாங்கள் ஆட்சியை நடத்தவிருக்கின்றோம் என்று சொல்லவிருக்கிறார்களா? என்பதுதான் இப்பொழுது மிகப்பெரிய கேள்விக்குறி!

இந்த ஆட்சிக்கு இன்றைக்குச் சிலர் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், இன்னும் அங்கே பிரச்சினை தீரவில்லை.
பா.ஜ.க.வினர் என்ன சொன்னார்கள், ‘‘இந்தியா கூட்டணியால் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது; ஏனென்றால், அங்கே கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளன. எப்பொழுது வேண்டுமானாலும் பிரிந்துவிடுவார்கள். நாங்கள்தான் நிலையான ஆட்சியைக் கொடுப்போம்” என்று சொன்னார்கள்.

நீண்ட நாள்களுக்கு முன்பே
தந்தை பெரியார் சொன்னார்!

நீண்ட நாள்களுக்கு முன்பே தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்” என்று சொன்னார். (தொடரும்)

No comments:

Post a Comment