‘‘கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் எழுந்தது.எதிரிகளை அழிக்க பல யாகங்கள் நடத்தப்படுகின்றன. அப்படியொரு மரண யாகம் தான், சத்ரு பைரவி யாகம். இந்த யாகத்தில் அகோரிகள், மந்திரவாதிகள் கலந்து கொள்கின்றனர். சத்திய பைரவி என்ற சக்தியைச் சாந்தப்படுத்த இந்த யாகம் நடத்தப்படுகிறதாம்.
அத்துடன் யாகத்தில் மரண, மோகனா, ஸ்தம்பனா என்ற மூன்று பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்த மூன்று பரிசோதனைகளுக்காக 21 சிவப்பு நிற ஆடுகள், 3 எருமைகள், 21 கருப்பு நிற செம்மறி ஆடுகள், 5 பன்றிகள் பலியிடப்படுகின்றன.
இந்த யாகத்தில் கர்மாக்களை அறிந்த 8 ஜோதிடர்கள் கலந்து கொள்கின்றனராம். மதுபானம், இறைச்சி ஆகியவை இந்த யாகத்தில் பிரசாதமாக வழங்கப்படும்.
வட இந்தியாவில் சுடுகாட்டில் பிணத்தைத்தின்று பைத்தியம் போல் ஆடையின்றி திரியும் பல அகோரிகள் இந்த யாகத்தை நிறைவேற்றுவதில் திறமை யானவர்களாம். இவர்கள் கடந்த காலங்களில் பல யாகங்களை செய்த நிகழ்வுகள் உண்டு’’ என்பது செய்தி!
தற்போது தனக்கும், கருநாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் எதிராக இந்த கொடூர யாகம் நடத்தப்படுவதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது – பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ எனக்குக் கிடைத்த தகவலின்படி, எனக்கும், முதலமைச்சருக்கும் எதிராக பெரிய மாந்தீரிகம் நடக்கிறது. கேரளாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான வெறிச்சோடிய பகுதியில் சத்ரு பைரவி யாகம் நடந்து வருகிறது. எனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் இப்படி செய்கிறார்கள்.
இப்போது யாகம் நடந்து கொண்டிருக்கிறது, அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஆனால், நாம் நம்பும் கடவுள் நம்மைக் காப்பார்” என்று கூறியுள்ளார்.
இந்த யாகத்தில் பங்கேற்றவர்களிடம் இருந்து டி.கே.சிவகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எச்சரிக்கையடைந்த டி.கே.சிவக்குமார் பாதிரியார்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஜோதிடர்களும் அவருக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். டி.கே.சிவகுமாரின் இந்த குற்றச்சாட்டு கருநாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வந்து பைரவர் கோயில்களுக்கெல்லாம் சென்று வந்துள்ளார் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
யாகங்களிலேயே மிகவும் மோசமான கீழ்த்தரமான யாகம் இது என்று கூறப்படும் இந்த யாகத்தில் அகோரிகள் மாதவிடாய் வந்த பெண்களை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் ரத்தத்தை யாகத்தில் தெளிப்பார்கள். இது தொடர்பாக ஓர் இதழில் வந்த ஒரு செய்தியின் தமிழாக்கம்:
‘‘தனது எதிரிகளைப் பழிவாங்க கட்டுமானத்துறையில் ஈடுபட்ட ஒரு தொழிலதிபர் ஒரு பெண்ணின் மாதவிடாய் உதிரப்போக்கு நாளன்று அகோரிகளை அழைத்து யாகம் நடத்தியுள்ளார். அகோரிகள் அப்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து குடும்பத்தார் முன்னிலையிலேயே அப்பெண்ணை சித்திரவதை செய்து மாதவிடாய் உதிரத்தை சேகரித்து யாகத்தில் தெளித்துள்ளனர். மேலும் அப்பெண்ணை பாலியல் ரீதியிலும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அகோரிகளோடு வந்த சில பெண்களும் யாகம் என்ற பெயரில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் வேகவைத்த சில மனித உடல் துண்டுகளை சாப்பிடச்சொல்லியும் மனித எலும்புகளை கடித்து சுவைக்கச்சொல்லியும் வற்புறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அந்தப்பெண் புனே காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்த செய்தி உள்ளது.’’
எப்படி இருக்கிறது? கடவுளையும் மதத்தையும் பற்றி விமர்சித்தால் வானம் இடிந்து விழுந்தது போல காட்டுக் கூச்சல் போடும் கூறு கெட்டதுகள் இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? இதில் உள்ள ஆபாசம், அருவருப்பு ஒருபுறம் இருக்கட்டும்; எதிரியைச் சாகடிப்பதற்கு என்று மதத்தில் இத்தகைய ஏற்பாடுகள் என்றால் இதைவிடக் கொடூரப் புத்தி வேறு ஒன்று இருக்க முடியுமா?
ஒழுக்கம், மனித சமத்துவம், பிறன் நோயைத் தன் நோய் போல் கருதி உதவிக்கரம் நீட்டும் பான்மை என்பது மதப் பிரச்சினைகளில் மரணம் அடைந்து விட்டது என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைக்கத்தில் தந்தை பெரியார் தீண்டாமையை எதிர்த்துப் போராடியபோது நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தந்தை பெரியாரைச் சாகடிக்க வேண்டும் என்பதற்காக சத்துரு சம்ஹார யாகம் நடத்தியதையும் எண்ணிப் பார்த்தால், மதமே உனக்கொரு மரணம் வந்து சேராதா என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment