சர்.பிட்டி தியாகராயர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

சர்.பிட்டி தியாகராயர்

featured image

1922 ஆம் ஆண்டு
சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தார். அப்போது அவர் கொணர்ந்த வியத்தகு திட்டம் இலவச நண்பகல் உணவுத் திட்டம். இதுகுறித்து அரசு ஆணை 1008 (உள்ளாட்சித் துறை) 7.6.1922 தரும் செய்தி.
உள்ளாட்சித் துறைச் செயலர்க்குத் தியாகராயர் ஒரு கடிதம் எழுதினார்.
அக்கடிதம் இது வருமாறு:
கடிதம்
சென்னை எண். G.D.C.No.110 of 22 நாள்:17.2.1922.
அனுப்புநர்:
திவான் பகதூர் சர்.பி.தியாக ராயச் செட்டி, எம்.எல்.சி.,
தலைவர், சென்னை மாநகராட்சி
பெறுநர்:
அரசுச் செயலர்,
உள்ளாட்சித் துறை
அய்யா,
மாநகராட்சியின் பல பள்ளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும், மாணவர் வருகையும் மனநிறைவு அளிப்பதாக இல்லை. விசாரித்தபோது, மாணவர்கள் தாமே உழைத்துப் பொருள் கொண்டு வந்தாலொழிய அவர்தம் பெற்றோரால் நண்பகல் உணவு வழங்க இயலாது என்பதும், குறைந்த நண்பகல் இடைவெளியில் மாணவர்கள் வீடு சென்று திரும்புவதில் உள்ள கஷ்டங்களும்தான் இதற்குக் காரணங்களாக அமைகின்றன எனத் தெரிய வந்தது.

இந்த இன்னல்களை எல்லாம் நீக்குமுகமாகவும், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும், வருகையும் ஒரே சீராக இருக்கவேண்டும் என்பதற்காகவும் 1920 செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இத்தகைய மாணவர்கட்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவர்க்கு ஒரு அணாவுக்கு மேல் போகாமல் நண்பகல் சிற்றுண்டி அளிக்க முடிவு செய்தது. பரீட்சார்த்தமாக இத்திட்டம் முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. விளைவு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனவே, இத்திட்டம் சேத்துப்பட்டிலும், மீர்சாகிப்பேட்டையிலும் உள்ள இரு மாநகராட்சிப் பள்ளிகட்கும் நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஏழு பள்ளிகட்கு இதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

1919 ஆம் ஆண்டைய சென்னை மாநகராட்சிச் சட்டத்தால் இது அனு மதிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் உள்ளாட்சி மன்றக் கணக்கு ஆய்வாளர் இந்தச் செலவை ஏற்க மறுக்கிறார். இந்த வசதியை நிறுத்திவிட்டால், குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அது பாதிக்கும். எனவே, இதற்குச் சிறப்பு ஒப்புதல் அளிக்குமாறு சென்னை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் கீழ்ப்படிதலுள்ள ஊழியன்,
பி.தியாகராயச் செட்டி,
தலைவர்
இதுவே தியாகராயர் எழுதிய கடிதம். இதன்பேரில் இலவச நண்பகல் உணவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைத்தது.
– மயிலாடன்

No comments:

Post a Comment