பிரிட்டனில் ஒரு தமிழர் மேயர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

பிரிட்டனில் ஒரு தமிழர் மேயர்

featured image

பிரிட்டன் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக மேயராகி இருக்கிறார். அமஸ்பெரி (EMESBURY) நகர மேயர் மோனிகா தேவேந்திரன். இவர்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்.

ஜனவரியில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற அயலகத் தமிழருக்கான குளோபல் சப்மிட் மீட்டில் பங்கேற்று, “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, தரணியை வெல்லடா, தமிழால் இணைவோம்” என மேடையில் முழங்கியவர் மோனிகா, 1047 ஆண்டு கால பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் மேயராக தான் தேர்வாகியிருப்பதற்காக இங்கிலாந்து அரசால் கவுரவிக்கப்பட்டு வழங்கப்பட்ட மன்னர் முகம் பதித்த நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மோனிகா அப்போது ஒப்படைத்தார்.

இங்கிலாந்து நாட்டில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்டோன்ஹேன்ஞ் (Stonehenge) இடம்பெற்றுள்ள அமஸ்பெரி நகருக்கு ஆங்கிலேயர்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மோனிகா. அமஸ்பெரி முழுக்க முழுக்க பணக்கார ஆங்கிலேயர்கள் மட்டுமே கொத்தாக வாழுகிற ஒரு பகுதி.நமது நாட்டில் எப்படி காங்கிரஸ், பிஜேபி என தேசிய கட்சிகள் செயல்படுகிறதோ அதுபோல, இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேட்டிவ் மற்றும் லேபர் பார்ட்டி என தேசிய கட்சிகள் இருக்கின்றன. இதில் மோனிகா தேர்வாகி மேயராகி இருப்பது இப்போது இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக.மேயர் மோனிகாவிடம் பேசியதில்…

‘‘ஆளும் கன்சர்வேட்டிவ் பார்ட்டியில் இருந்து கவுண்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது. இது நம்ம ஊர் சிட்டிங் எம்எல்ஏ மாதிரியான பதவி. என் குடும்பம் மூலமாக எந்தவொரு அரசியல் பின்னணியும் எனக்கில்லை. ஆனாலும் துணிந்து நேர்காணலை சந்தித்தேன். எனது கல்வித் தகுதி, எனது பலம், தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் போன்ற கேள்விகளுக்கு தெளிவாக சொன்ன பதிலில் முதல் ரவுண்டிலேயே தேர்வானேன்.

அடுத்து நான் சந்தித்தது தேர்தலை. இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரை எடுத்தவுடனே தேர்தலில் நின்றுவிட முடியாது. அதற்கென பலகட்ட சோதனைகள், பல்வேறு கட்ட பயிற்சிகளை சந்திக்க வேண்டும். எத்தகைய உயர்வான படிப்பு இருந்தாலும், நமது திறமையை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.
கூடவே தலைமைப் பண்பு, பிரச்சினைகளை சமாளிக்கிற துணிச்சல், விரைந்து முடிவெடுக்கும் திறன் போன்றவை எந்த அளவு இருக்கிறது எனவும் நம்மை சோதிப்பார்கள். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன மாதிரியான சேவையை நான் வழங்கப் போகிறேன் என்பதில் எப்போதும் எனது சிந்தனை இருக்க வேண்டும். இவற்றில் தேர்வானால்தான் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு.

அதன் பிறகே மக்கள் நம்மைப் புரிந்து, எடைபோட்டு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் தீர்ப்பில்தான் வெற்றி உறுதியாகும். இதுவும் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. மக்களின் வாக்கைப் பெற அவர்களின் இதயத்தை வெல்ல வேண்டும். மக்கள் மத்தியில் சும்மா எதையாவது பேசிவிட்டு கடந்துவிட முடியாது. உங்கள் சொல்லும், செயலும், நீங்கள் நடந்து கொள்ளும் விதமும், கொடுக்கும் வாக்குறுதிகளும் உண்மையாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். சுருக்கமாக மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவராக இருந்தால் நிச்சயம் மக்கள் முழு ஆதரவை நமக்கு அளிப்பார்கள்.

அப்போது யார் இடையில் நுழைந்தாலும், தங்கள் எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இப்படியாகத்தான் 65 சதவிகிதம் வாக்குகளோடு கவுண்டி கவுன்சிலர் பதவியில் முதல் இந்தியராக முதல் முறையிலே வென்றேன்’’ என்றவர், பிறகு துணை மேயர் பதவி. இப்போது நான் அமஸ்பெரி நகர மேயர் எனப் புன்னகைத்தவர், கூடவே கன்சர்வேட்டிவ் பார்ட்டி சேர்மனாகவும் தற்போது தேர்வாகியிருக்கிறேன் என்கிறார் அதே புன்னகை மாறாமல்.

‘‘அடுத்தது எம்.பி ஆகி கேபினெட் அமைச்சராய் அமர்வதற்கு, 10 டவுனிங் ஸ்டீட் போக வேண்டும் என்பதே அடுத்த என் கனவு. அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரைமினிஸ்டராக ஹவுஸ் ஆஃப் லாட்ஸில் இருக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது’’ என மேலும் மேலும் நம்மை பிரமிப்பூட்டுகிறார் மோனிகா.

‘‘எல்லா முரண்பாடுகளுக்கு எதிராகவும் நின்று, உயர்வான இடத்திற்கு என்னை நகர்த்தும் ஆளுமையாகவே எப்போதும் என்னை சிந்திப்பேன் என்கிற மேயர் மோனிகா, வெற்றியும் தோல்வியும் நமது சிந்தனையில் இருந்தே தொடங்குகிறது. சிறுவயதில் பிரிட்டனை மேப்பில் மட்டுமே பார்த்தவள் நான், பிரிட்டன் ஒரு அழகான நாடு. அந்த நாட்டில்தான் நான் செட்டிலாவேன் என்கிற ஆசை மட்டுமே வைத்தேன். பிறகு அந்த ஆசையை எனது கனவாகவே மாற்றினேன்’’ என்கிறார்.

‘‘பெண்கள் எப்போதும் தைரியமாக செயல்பட்டு, 200 சதவிகிதமும் நமது திறமையை முழுமையாக அர்ப்பணித்தால், மலைகளையும் இணைக்கலாம்’’ என நம்பிக்கை கொடுப்பவர், ‘‘நல்ல சிந்தனைகள் எப்போதும் நம்மை வெற்றியை நோக்கியே நகர்த்திச் செல்லும் பெண்கள் முன்னேறும்போது, எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எதிர்ப்பு இருந்தால்தான் முன்னேறவே முடியும். கடினமான பாதை இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது’’ என்கிறவாறு விடைபெற்றார்.

No comments:

Post a Comment