வரலாறே வாழ்வானவரின் வாழ்க்கை வரலாறு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

வரலாறே வாழ்வானவரின் வாழ்க்கை வரலாறு!

featured image

இந்தியப் பத்திரிகைத் துறையில், மூத்த பத்திரிகையாளரும், சிறந்த சிந்தனையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைக் குறித்தும், அவர்களது நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வு குறித்தும் ஆங்கிலத்தில் ‘Karunanidhi: A Life’ எனும் மிகச் சிறந்த நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதனை உலகப் புகழ்பெற்ற பதிப்பகமான, பெங்குவின் இந்தியா வெளியிட்டுள்ளது.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த வரலாறு நூல் குறித்து, மின்னம்பலம் இணைய தள இதழில், புதுடில்லி, அம்பேத்கர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன் அவர்கள், ஓர் ஆய்வுக் கட்டுரையினைப் படைத்தளித்துள்ளார்.

தலைவர் கலைஞரின் பொதுவாழ்வுக்கும் – பன்னீர்செல்வனின் இந்த நூலுக்கும் ராஜன்குறை கிருஷ்ணனின் இக்கட்டுரை, மேலும் அணி சேர்க்கிறது எனின், அது மிகையல்ல.

அக்கட்டுரையினை தொடர்ந்து பார்க்கலாம்.

பன்னாட்டு இதழியல் துறையில் அனுபவம் மிக்கவரும், இந்து ஆங்கில நாளிதழின் வாசகர் தரப்பு ஆசிரியரும், சிந்தனையாளருமான ஏ.எஸ்.பன்னீ ர்செல்வனின் நீண்ட நாள் ஆய்விலும், உழைப்பிலும் உருவான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கில மொழியில் பெங்குவின் வைக்கிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் எளிமையான, கம்பீரமான தலைப்பு: Karunanidhi: A Life.

ஒரு வகையில் பார்த்தால் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது சுலபம் போல தோன்றலாம். அவருடைய சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி ஆறு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதற்கு மேல் அவர் வாழ்க்கை என்பது பொதுவெளியில் விரிவாக பதிவானது. ஏராளமானவர்கள் அவருடனான தங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளார்கள். நேர்காணல்கள், பத்திரிகை செய்திகள் என பல தரவுகளும் சுலபத்தில் கிடைக்கும். இதன் காரணமாக ஏற்கனவே ஆங்கிலத்தில் இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவர் மறைவுக்குப் பிறகு வெளியாகியுள்ளன.

இளம் வயதிலேயே தன் வாழ்வை முழுவதும் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்துவிட்டவர்

இன்னொரு வகையில் பார்த்தால் அதே காரணங்களுக்காக அவருடைய வாழ்வை எழுதுவது மிகவும் கடினமானது. இந்தியக் குடியரசின், அதன் பகுதியான தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பிணைந்து கலந்துபோன அவர் வாழ்வை எழுதும்போது, அந்த வரலாற்றுச் செய்திகளின், நிகழ்வுகளின் ஊடாக அவருடைய சுயத்தை கண்டடைவது என்பது சுலபமல்ல. இளம் வயதிலேயே தன் வாழ்வை முழுவதும் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்துவிட்ட ஒருவருக்கு குடும்ப உறவுகள் எல்லாம் இருந்தாலும் அவற்றிற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்க முடியாது. ஏனெனில் அரசியல் நிகழ்வுகளை அவர் தீர்மானித்தார்.

அவர் வாழ்க்கையை அவை தீர்மானித்தன. அவர் வாழ்க்கையை பேசும்போது அவையே உள்ளடக்கமாக முன்னிற்கும். அப்படி புற உலக நிகழ்வுகளாகவே அவர் வாழ்க்கையை கோர்த்தால் அவருடைய அக உலகம் என்பது இடம்பெறாமல் எப்படி ஒரு நூல் வாழ்க்கை வரலாறாக முடியும்? அவருடைய இளம் பருவத்தை பற்றி அவரே எழுதியிருப்பதை திருப்பி எழுதுவதால் மட்டும் அவர் அக உலகை காட்டிவிட முடியாது.

இந்தக் கோணத்தில்தான் பன்னீர்செல்வனுக்கு ஓர் அரிய வாய்ப்பு அமைந்தது எனலாம். அது என்னவென்றால் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கலைஞருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு. பல்வேறு பொதுப்பிரச்சினைகள் குறித்து உரையாடிய வாய்ப்புகளைத் தவிர, உங்கள் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதப்போகிறேன் என்று கூறி அதன்பொருட்டே அவர் வாழ்வின் பல்வேறு அம்சங்களை அவருடன் விவாதித்துத் தெளியும் வாய்ப்பு. அது மட்டுமல்லாமல், கலைஞரின் வலது கரமாகவும், அவருடைய சிந்தனையின் உரைகல்லாகவும் இருந்த முரசொலி மாறன் அவர்களுடனும் விரிவாக உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்திருக்கிறார்.

வரலாற்று நிகழ்வுகளை
கலைஞரின் ஆகிருதியுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்!

கலைஞருடன் நிதித்துறை செயலராக பணி யாற்றிய குகன் போன்ற அதிகாரிகள், பிற தலைவர்கள், பல்துறை சிந்தனையாளர்கள் என பலரிடமும் உரையாடும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். இவற்றின் மூலமாக கலைஞரின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக வரலாற்று நிகழ்வுகளை பார்வையிடும் அரியதொரு சாத்தியம் பன்னீர்செல்வனிற்கு வாய்த்திருக்கிறது. அதன் மூலம் வாசகர்களுக்கு, குறிப்பாக தமிழறியாத பன்னாட்டு வாசகர்களுக்கு கலைஞரின் அபூர்வமான வரலாற்று ஆகிருதியை உணர்ந்துகொள்ளும் விதமான நூல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ளோரும் இந்த நூலை படிப்பதன் மூலம் எப்படி வரலாற்று நிகழ்வுகளை கலைஞரின் ஆகிருதியுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சில திறவுகோல்களை கண்டடையலாம்.

இரண்டு அம்சங்கள் இந்த நூலை பொறுத்த வரை நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியவை. ஒன்று, இது பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டது; வரலாற்று ஆய்வு நூல் அல்ல. இரண்டு, வாசிப்பதற்கு எளிமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதப்பட்டது. இல்லாவிட்டால் சில ஆயிரம் பக்கங்களாவது தேவைப்படும், விரிவாக நிகழ்வுகளை கூறுவதற்கு.

ஒரு நேர்கோட்டுப் பார்வையில் 
கலைஞரின் வாழ்வை புரிந்துகொள்வோம்!

இருபத்து நான்கு அத்தியாயங்களில் படிப்பதற்கு சுவாரசியம் குன்றாமல், சுருக்கமாகவும், தெளிவாகவும் கலைஞரின் வாழ்வும், அவரது சிந்தனைப்புலமும், அக உணர்வுகளும் எப்படிப்பட்டவை என்பதை வாசகர் உணரும் வண்ணம் எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இங்கே அக உணர்வு என்று கூறுவது அவர் எப்படி அரசியல் சூழலை கணித்தார், அணுகினார் என்பதாகும். இவற்றிற்கான உதாரணங்களை இந்த நூலிலிருந்து காண்பதற்கு முன்னால் ஒரு நேர்கோட்டுப் பார்வையில் கலை ஞரின் வாழ்வை புரிந்துகொள்வோம்.

இளம் வயதிலிருந்தே சமூக நீதி சிந்தனையின் அவசியம் உணர்ந்த கலைஞர் தன்னை திராவிட இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறார். தி.மு.க தோன்றியதிலிருந்து அண்ணாவின் முக்கிய தளகர்த்த ராக விளங்கி கட்சியினுள் தன்னை முழுமையாக கரைத்துக்கொள்கிறார்.

சமூக நீதி கொள்கைகள் வலுப்பெற வடநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பது ஹிந்தி திணிப்பின் மூலம் தெளிவுபடுகிறது. முதலில் திராவிட தனி நாடு கோரிக்கையாக விளங்கிய அது பின்னர் மாநில சுயாட்சி கோரிக்கையாக மாறுகிறது. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின் அண்ணா மறைந்துவிட, கலைஞர் பெரியாரின் ஆதரவுடன் ஆட்சி பொறுப்பேற்று, கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்துகிறார்.

நடுவண் அரசில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களை சரிவரக் கையாண்டு, 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறார். இந்த இடத்திலிருந்து சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய இரண்டு கொள்கைகளும் மேலும், மேலும் வலுப்பெற்று நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் இரண்டு பிரச்சினைகள் அடுத்தடுத்து வருகின்றன. ஒன்று காங்கிரஸ – வலது கம்யூனிஸ்டு கட்சிகளின் தூண்டுதலில் எம்.ஜி.ஆர் கட்சியை பிளந்து 1972 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க என்ற கட்சியை உருவாக்குகிறார். இரண்டு இலங்கையில் சிங்கள பெரும்பான்மைவாதம் வலுப்பெற்று இலங்கை தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறும் சூழ்நிலையில் இந்திய நடுவண் அரசு தமிழ் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கத் துவங்குகிறது.

கலைஞரின் இரண்டு கண்கள் போன்ற கொள்கைகள் சமூக நீதி, மாநில சுயாட்சி!

இந்த ஈழப்பிரச்சினை 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த இலங்கை இனக்கலவரத்தில் உச்சமடைந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளும், போராளிகளும் வரத்துவங்குகிறார்கள். இந்திய ஆதிக்க சக்திகள் கலைஞர் போராளிகளுக்கு புகலிடம் அளிப்பதாக குற்றம் சாட்ட, தமிழ் தேசிய குழுக்களோ கலைஞர் போராளிகளுக்கு உதவ மறுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. எம்.ஜி.ஆர். பிம்பம், இலங்கை இனப்போர் ஆகிய இரண்டின் தொடர்ச்சியாக, 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசாக முதலமைச்சர் பதவியேற்க அடுத்த இருபத்தைந்தாண்டுகள் நடுவண் அரசின் மேலாதிக்க நோக்கு, ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்கொண்டு கட்சியை கொண்டு செலுத்த வேண்டியதாகிறது கலைஞருக்கு. தன்னுடைய இரண்டு கண்கள் போன்ற கொள்கைகளான சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய இரண்டையும் தொடர்ந்து முன்னெ டுக்கக் கூடிய வலுவான கட்சி அமைப்பைக் கட்ட மைத்து, காப்பாற்றி வரலாற்றிடம் கையளித்து விடை பெறுகிறார் கலைஞர்.

பன்னீர்செல்வன் கலைஞரின் அணுகுமுறையின் அடிப்படைகளாக இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய அம்சங்களைக் கூறுகிறார். ஒன்று சமரசத்திற்கும் (Compromise), சமாதானத்திற்குமான (Conciliation) வேறுபாடு. இதன் பொருள் என்ன வென்றால் கருத்து மாறுபாடுகள் கணிசமாக இருக்கும்போது நமது கருத்தை நீர்த்துப்போகாமல் வைத்துக்கொள்ளும் அதே நேரத்தில், மாற்றுக் கருத்தாளர்களுடன் சேர்ந்து தேவையான, சாத்தியமான வகையில் இயங்குவது. சேர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக நமது கருத்தை தளர்த்திக்கொள்வது என்பது கொள்கை சமர சமாகும். அதே நேரம் கருத்து மாறுபாட்டை வலி யுறுத்தி சேர்ந்தியங்காமல் முரண்பட்டு நிற்பது என்பது வன்முறைக்கோ, தேக்க நிலைக்கோதான் இட்டுச்செல்லும். இதே போன்ற மற்றொரு வேறுபாடு அதிகபட்ச முரண் நோக்கு (maximalist position) என்பதற்கும் குறைந்தபட்ச பொது நோக்கு (minimum common position) என்பதற்கும் உள்ள வேறுபாடு. பிரசாரத்திற்கான, பேரத்திற்கான உத்தியாக அதிகபட்ச முரண் நோக்கை கையாளலாம்; பெரியார் போல. நடைமுறை அரசியலில் குறைந்தபட்ச பொது நோக்கின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். அண்ணாவின் வழிமுறையைப் போல. கலைஞர் ஒன்றிய அரசுடனும், தேசிய கட்சிகளுடனும் கையாண்ட அணுகுமுறையையும், ஈழத்தமிழர் பிரச்சினையில் அவருடைய நிலைப்பாட்டையும் சரியாக புரிந்துகொள்ள இந்த வேறுபாடுகளை மனதில் கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது பன்னீர்செல்வனின் நூல்.

கலைஞரின் இந்த அணுகுமுறையை புரிந்துகொள்ள மிகச் சிறந்த தருணம் ஒன்றை சுட்டிக்காட்டுகிறார் பன்னீர்செல்வன். இந்திராவின் அவசர நிலை பிரகடனம் முடிந்து ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு, தமிழ்நாட்டிலும் தேர்தல் நடந்து எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு, ஒடிசா மாநில தலைவரான பிஜு பட்நாயக், மீண்டும் ஒன்றிய அரசு எதேச்சதிகார அரசாக மாறாமல் இருக்க மாநில கட்சிகள் வலுவடைவது முக்கியம் என நினைக்கிறார். அதனால் அவர் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டையும் இணைத்து வைக்க முயல்கிறார்.

இணைப்புக்கான நிபந்தனைகளாக
ஆறு அம்சங்கள்!

இணைப்புக்கான நிபந்தனைகளாக அவரிடம் கலைஞர் அன்பழகனுடன் கலந்து பேசி ஆறு அம்சங்களை கூறுகிறார்:

1) கட்சியின் பெயர் தி.மு.க என்று தொடர வேண்டும்;

2) அண்ணா தி.மு.க கொடியை வைத்துக் கொள்ளலாம்; ஏனெனில் அதில் அண்ணா வின் படம்தான் சேர்க்கப்பட்டிருக்கிறது;

3) எம்.ஜி.ஆரே முதலமைச்சராகத் தொடரலாம்;

4) தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அமைச்சர வையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை கிடையாது;

5) கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு சுமுகமான கட்சி இணைப்பிற்குப் பிறகு நபர்களை தேர்வு செய்துகொள்ளலாம்;

6) எம்.ஜி.ஆர் அரசு இட ஒதுக்கீட்டிற்கு பொரு ளாதார உச்சரவரம்பை அவசியமாக்கிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இந்த கடைசி நிபந்தனை மட்டுமே மாற்ற முடியாதது என்பதையும் கூறுகிறார்.

கலைஞரின் பெருந்தன்மையையும்,
கொள்கையில் கொண்ட உறுதிப்பாட்டையும் பாராட்டுகிறார்!

கலைஞரும், அன்பழகனும் பிஜு பட்நாயக்கை சந்தித்து இதைக் கூறியதும், பட்நாயக் அகமகிழ்ந்து போகிறார். கலைஞரின் பெருந்தன்மையையும், கொள்கையில் கொண்ட உறுதிப்பாட்டையும் பாராட்டு கிறார். இந்த இணைப்பு நிச்சயம் இந்தியாவின் கூட்டாட்சியை உறுதிசெய்யும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். சற்று நேரம் கழித்து அங்கே நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் வந்த எம்.ஜி.ஆரும் இந்த நிபந்தனைகளைக் கேட்டு மகிழ்கிறார். இரண்டு கட்சிகளும் தத்தமது பொதுக்குழுவில் இவ்வாறான இணைப்பிற்கு ஒப்புதல் பெற்ற பிறகு இணைந்து பொதுக்குழுவை கூட்டலாம் என்றும், அதற்கு பிஜு பட்நாயக் வரவேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால், எந்தக் காரணத்தினாலோ மறுநாள் வேலூர் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் மனம் மாறி இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார்.

அவசியம் அனைவரும் ஆழ்ந்து படித்து
சிந்திக்க வேண்டிய ஒரு பகுதி!

இலட்சியங்களை வென்றெடுப்பதற்கு, உரிமைகளை பெறுவதற்கு, சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான பாதை மிக நீண்டது என்பதை புரிந்துகொண்ட ஒரு தலைவர்தான் இவ்வளவு முதிர்ச்சியுடன் நிபந்தனைகளை உருவாக்க முடியும். அதனால்தான் கலைஞரால் விடுதலைப் புலிகளின் அதிகபட்ச நிபந்தனைகளையே முன்வைக்கும் போக்கை சரியான அணுகுமுறையாகக் காண முடிய வில்லை. பன்னீர்செல்வன் நூலின் மிக முக்கியமான அத்தியாயம் இலங்கை பிரச்சினையில் கலைஞரின் நிலைபாட்டை விளக்கும் பகுதியாகும். அவசியம் அனைவரும் ஆழ்ந்து படித்து சிந்திக்க வேண்டிய ஒரு பகுதி இது.

இதுபோன்று வரலாற்றின் முக்கியமான சிக்கல்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் நூல், கலைஞரின் அதிகம் அறியப்படாத சில பரி மாணங்களையும் பதிவு செய்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான சத்யஜித் ரேவிற்கும், கலைஞருக்கும் எதுவும் தொடர்பிருக்கும் என்று பலரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், சத்யஜித் ரேவின் படமொன்று உருவாகக் கலைஞர் காரணமாயிருந்துள்ளார். குகன் நிதித்துறை செயலராக இருந்தபோது கலைஞர் அவருடன் அலுவல் தவிரவும் பல்வேறு பொது விடயங்களையும் விவாதிப்பது உண்டு. குகனின் பல்துறை அறிவும், ரசனைகளும் கலைஞருக்கு பிடித்தமானவை. ஒரு நாள் அப்படி உரையாடும்போது, குகன் சத்யஜித் ரே பாலசரஸ்வதியை மிகச்சிறந்த நடனக் கலைஞர் என மதிப்படுவதைக் கூறியுள்ளார். அதைக்கேட்டு மகிழ்ந்த கலைஞர், அவர்கள் இருவரிடமும் பேசி பாலசரஸ்வதி குறித்த ஆவணப்படத்தை சத்தியஜித் ரேவை இயக்குமாறு கூறச்சொல்லியிருக்கிறார். படத்திற்கான செலவில் ஒரு பகுதியை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், படம் எடுத்து முடிந்து முதல் திரையிடல் நிகழ்ந்தபோது கலைஞரால் அதற்குப் போக முடியவில்லை. ஏனெனில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அவரது அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

இது போன்ற அபூர்வமான தருணங்களை தொகுத்ததில், இந்திய-தமிழ்நாடு வரலாற்றுச் செய்திகளினூடாக கலைஞரின் ஆகிருதியின் பரிமாணங்களை காட்சிப்படுத்துவதில் பன்னீர்செல்வனின் நூல் வெற்றிபெறுகிறது. அதே சமயம் கலைஞரை வியந்தோதுவதிலோ, புகழ்ந்து ரைப்பதிலோ வார்த்தைகளை விரயம் செய்யாமல், அவரது பெருமைகளை நுட்பமாக உணர்த்துகிறது.

சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரிகள்
நம் நினைவுக்கு வருகின்றன!

வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மு.க.அழகிரியை மத்திய அமைச்சராக்கியது போல அவர் செய்த சில தவறுகளையும் சேக்ஸ்பியரின் லியர் அரசன் உவமையின் மூலம் தயங்காமல் சுட்டிக்காட்டுகிறது. அந்த இறுதிப்பகுதிகளை படிக்கும்போது லியர் அர சனை குறித்த சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரியான more sinned against than sinning என்பதும் நம் நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

நவீன தமிழ்நாட்டின் சிற்பிகளில் முக்கியமான வரான கலைஞர் குறித்து மேலும் பல நூல்கள் வரலாம். அவரது சாதனைகளும், செயல்பாடுகளும் பல்வேறு கோணங்களில் விரிவாக மதிப்பிடப்படலாம். கலைஞரிடம் அணுக்கமாக உரையாடிப்பெற்ற உள்ளுணர்வுகளால் நிரம்பிய பன்னீர்செல்வனின் நூல் அதன் தனித்துவத்துடன் அந்த நூல்களுள் தவிர்க்க முடியாத ஒன்றாக என்றும் இருக்கும் என்றே தோன்றுகிறது.

நன்றி: ‘மின்னம்பலம்’

No comments:

Post a Comment