சென்னை, ஜூன் 11- பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் நேற்று (10.6.2024) திறக்கப்பட்டன. ஆர்வத்துடன் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் புன்னகை ததும்ப வரவேற்றனர். சக பள்ளி தோழர்களுடன் இணைந்து வகுப்பறையை நோக்கி மாணவர்கள் பயணித்தனர்.
விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து
இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மன நிலை -உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி, மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment